குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 6 மாநகராட்சிகளையும் ஆளும் பா.ஜ.க. அரசு தக்க வைத்துக் கொண்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த 21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளுக்கான மொத்தம் உள்ள 574 வார்டுகளுக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது.
மாலை 6 மணி நிலவரப்படி 474 வார்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், ஆளும்கட்சியான பா.ஜ.க. 409 இடங்களில் வெறறிப் பெற்றுள்ளது. காங்கிரஸ் 43 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி 27 இடங்களில் வெற்றிப் பெற்றுள்ளது. முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிக்கு இணையாக இடங்களை பெற்றுள்ளது, அக்கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. குஜராத்தில் ஆம் ஆத்மிக்கு கிடைத்துள்ள வெற்றி குறித்து அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், தனது டிவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். வரும் 26 ஆம் தேதி குஜராத் செல்லவுள்ளதாகவும் அவர் தகவல் பகிர்ந்துள்ளார்.
6 மாநகராட்சிகளிலும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 2,276 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆறு மாநகராட்சிகளையும் மீண்டும் பா.ஜ.க. தக்க வைத்துள்ளதையடுத்து, குஜராத் மாநில பா.ஜ.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். சூரத் உள்பட பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் ஆடிப் பாடியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.