Sun. Nov 24th, 2024

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினும் தமிழக மக்களுக்கு நாள்தோறும் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த நான்காண்டு ஆட்சிக் காலத்தில் அமல்படுத்திய திட்டங்களை விட, கடந்த ஒரு மாதத்தில் அறிவித்த திட்டங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போல… அவர் ஒரு பக்கம் அறிவிப்புகளை வெளியிட்டு வரும் வேளையில், அதற்கு போட்டியாக தி.மு.க. தலைவரும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய எல்லா கடன்களையும் ரத்து செய்வேன் என்று அறிவிக்கும் அளவுக்கு நெருக்கடிக்கு தள்ளப்பட்டிருக்கிறார். இருவரின் செயல்பாட்டினை கிண்டலடிக்கும் விதமாக வரும் மீம்ஸ்கள் கலகல.. போற போக்கில் பார்த்தால், பக்கத்து வீட்டுக்காரனிடம் வாங்கிய கடனைக் கூட திருப்பி செலுத்த வேண்டாம் என்று அறிவித்துவிடுவார்கள் போல என்ற கிண்டல், கலாய்ப்பின் உச்சம். இன்றைய சூழ்நிலையில், இரண்டு திராவிடக் கட்சிகளுமே வேண்டாமே என்ற மனநிலையில் இருப்போரின் எண்ணிக்கைதான் கூடிக்கொண்டிருக்கிறது, அதுபோலவே, அந்தந்த கட்சிகளில் உள்ள நிர்வாகிகளின் மனநிலையும் மாறத் தொடங்கியிருப்பதுதான், தேர்தல் நேரத்தில் அதிர்ச்சிக்குரிய செய்தி.

பத்தாண்டு கால அ.தி.மு.க. ஆட்சியின் மீது வெளிப்படையாக தெரியாத அளவுக்கு அதிருப்தி அலை மக்களிடம் எழுந்திருக்கும் நிலையில், அதற்கு மாற்று தி.மு.க. என்று தேர்வு செய்வதற்குப் பதிலாக, வேறுவழியில்லை என்ற எண்ணத்தில்தான் தி.மு.க. பக்கம் மக்கள் சாயும் நிலைதான் இன்று இருக்கிறது. இப்படிபட்ட நேரத்தில், தி.மு.க. தலைவரும், தி.மு.க. வும், மக்களின் மாற்றுத்சிந்தனைக்கு ஏற்ப சுயபரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு, கட்சிக்குள்ளேயே மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, கட்சிக்கு எதிராக சொல்லப்படும் குற்றச்சாட்டுகளை சீர்தூக்கி பார்த்து சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனை, தி.மு.க. தலைவரிடமோ, அவரது குடும்பத்தாரிடமோ, அவர்களுக்கு அறிவுரை சொல்லும் கூட்டத்திடமோ இல்லை என்பதுதான் மகா,மகா வேதனை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களுக்கு விடுதலைக் கிடைக்கும் என்று சொல்கிற அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், முதலில், தனது கட்சித் தொண்டர்களுக்கு, நிர்வாகிகளுக்கு விடுதலையைப் பெற்று தர வேண்டும் என்பதுதான், அடிமட்ட தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இன்றைய நிலையில், தேர்தலில் நிற்க சீட் கிடைத்தாலே எம்.எல்.ஏ. ஆகிவிடலாம் என்ற எண்ணம்தான் பெரும்பாலான தி.மு.க. நிர்வாகிகள் உள்ளது. அந்தளவுக்கு அ.தி.மு.க.வுக்கு எதிராக அதிருப்தி அலை வீசிக்கொண்டிருப்பதாக கூறும் தி.மு.க. நிர்வாகிகள், தி.மு.க. தலைமைக் கழகத்தில் விருப்பப் மனு தாக்கல் செய்வதற்கே பல தடைகளை கடக்க வேண்டியிருக்கிறது என்று அங்கலாய்க்கிறார்கள். அவர்களின் புலம்பல்களுக்கு காது கொடுப்போம்.

தி.மு.க.வில் 234 தொகுதிகளுக்கும் போட்டியிருக்கிறது. ஒரு தொகுதியில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள், தலைமை அறிவித்த கட்டணத்தை செலுத்தி விருப்பப் மனுவை பூர்த்தி செய்து வழங்குவதுதானே நியாயம். ஆனால், ஊரில் உள்ள ஒரு நிர்வாகி, ஒன்றியச் செயலாளரோ, அதற்கு இணையாக அல்லது கிளை கழக அளவிலோ கட்சி செல்வாக்கு உள்ள ஒருவரோ, நேரடியாக சென்னை வந்து விருப்ப மனுவை பூர்த்தி செய்து வழங்கிவிட முடியாது. மாவட்டச் செயலாளரின் சம்மதம் வேண்டும். அதற்காக அவரை பவ்வயமாக அணுகி, அனுமதி பெறுவதுடன், அய்யா, உங்கள் பெயரிலும் ஒரு விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்துகிறேன் என்று ஐஸ் வைத்து, அவரின் அனுமதி பெற்று சென்னைக்கு கிளம்புகிறார்களாம். அவ்வாறு சென்னை புறப்படும்போது, உனக்கு, எனக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்தும்போது கூடவே, உதயநிதிக்கு, தலைவருக்கு என இரண்டு பேரின் பெயரிலும் பணத்தை கட்டிவிட்டு லா என்று மாவட்டச் செயலாளர்கள் வலியுறுத்தி சொல்கிறார்களாம்.  

ஆக, மொத்தத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் ஒரு லட்சம் ரூபாய் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அண்ணா அறிவாலயத்தில் வரிசையில் நின்று லட்சக்கணக்கில் பணம் கட்டுபவர்களில் யாருக்காவது ஒருவருக்காவது சீட் கிடைக்குமா என்றால், அதற்கும் உத்தரவாதம் இல்லை. இதற்கு முந்தைய தேர்தலில் இல்லாத வகையில், ஒவ்வொரு தொகுதிக்கும் பிரசாத் கிஷோரின் ஐ.டி. டீம் வந்து, அவர்கள் தனியாக தொகுதியில் பிரபலமாக உள்ள 3 பேரின் பெயர் கொண்ட பட்டியலை தயாரித்துள்ளார்களாம். அது ஒருபக்கம் என்றால், உதயநிதி, சபரீசன் நண்பர்கள் என்றுக் கூறிக் கொண்டு அவர்கள் ஒருபக்கம், பல மாவட்டங்களில் தங்களுக்கு அறிமுகமானவர்களின் பெயர்களை பரிந்துரைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படி, ஆளாளுக்கு பரிந்துரை செய்வதாக தகவல் பரவலாகவே பேசப்படும் போது, எதற்கு விருப்ப மனுவை வாங்க வேண்டும். அப்படியே தி.மு.க. தலைமைக்கு பணம் தேவைப்படுமானால், தி.மு.க.வில் உள்ள யார் வேண்டுமானாலும் நேரடியாக தலைமைக் கழகத்திற்கு வந்து பணத்தை செலுத்த அனுமதிக்க வேண்டுமல்லவா. அதற்கு வழி ஏற்படுத்தாமல், சீட் கேட்பதற்கே ஒன்றிய செயலாளரின் சம்மதம் வேண்டும், மாவட்டச் செயலாளரின் அனுமதியை பெற வேண்டும் என எதற்கு கடடுப்பாடுகள் வேண்டும். தி.மு.க. தலைமை சொல்கிற மாதிரி, தாங்கள்தான், ஜனநாயகக் கட்சி என்று பீற்றிக் கொள்வது வெத்து வேட்டுதான். உடகட்சியில் கொஞ்சம் கூட ஜனநாயகம் இல்லை என்று கொதிப்புடனேயே பேசினார் தி.மு.க. நிர்வாகி ஒருவர்.

சிறிதுநேர இளைப்பாறுதலுக்குப் பிறகு அவரே தொடர்ந்தார். யாருக்கு சீட் என்பது யாருக்குமே தெரியாது. ஆனால், போட்டி போட்டுக் கொண்டு பணம் கட்ட ஒரு தொகுதிக்கு 20க்கும் மேற்பட்டோர் சென்னைக்கு வருகிறார்கள். இதற்கு முன்பு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டிய நிர்வாகிகளின் மனநிலைக்கும், இப்போது போட்டியிட ஆர்வம் காட்டுகிறவர்களின் மனநிலைக்கும் தலைகீழான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த தேர்தல்களின் போது பணம் கட்டுபவர்கள், நேர்காணலின்போது தலைவர் கலைஞரை பார்க்கலாம் என்று ஆர்வத்தால், அவரிடம் நாலு வார்த்தை நேரடியாக பேசலாம் என்ற ஆர்வத்தில் பணம் கட்டுவார்கள். ஆனால், இன்றைக்கோ அந்த எண்ணம் மாறிப்போய், ஒரு லட்சம் கட்டினால், டபுள் மடங்கிற்கு மேல் பணம் வசூலித்துவிடலாம் என்று கந்துவட்டிக்காரன் மனநிலையில் பணம கட்டுவதுதான் வேதனையாக இருக்கிறது என்றவர், அந்த வேதனையை விரிவாக கூறினார். ஒரு தொகுதிக்கு எத்தனை பேர் பணம் கட்டினாலும், ஒருவருக்குதான் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். அந்த அதிர்ஷ்டத்தில் துள்ளி குதிக்கும் தி.மு.க. நிர்வாகி, தொகுதிக்கு திரும்பியவுடன், தனக்கு போட்டியாக யார்யாரெல்லாம் பணம் கட்டினார்களோ, அந்த நிர்வாகிகளின்செல்வாக்கு, சக்திக்கு ஏற்ப, 2 லட்சம் முதல் 10 லட்சம் வரை தனிப்பட்ட முறையில் பணத்தை கொடுத்து, அவர்களை தனது ஆதரவாளராக மாற்றிக் கொள்வார்கள்.

இதற்கே, 50 லட்சத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும். அதற்குப் பிறகு பிரசாரம், வாக்காளர்களுக்கு பணம் என குறைந்தது 10 கோடி ரூபாய் அளவுக்கு சொந்த பணத்தில் இருந்துதான் செலவழிக்க வேண்டும். இப்படி தேர்தலுக்கு பணம் கட்டுவதும், தேர்தலில் வெற்றி பெறுவதுமே சூதாட்டமாக மாறியிருப்பது, கடந்த, இரண்டு மூன்று சட்டமன்றத் தேர்தல்களில்தான். 2016 சட்டமன்றத் தேர்தலிலும், அதற்கு முன்பாகவும் நடைபெற்ற நேர்காணலில் பல சுவாரஸ்யங்கள் நடந்திருக்கின்றன. நேர்காணலுக்கு வருகிறவர்களிடம் கலைஞரே நேரடியாக அந்த தொகுதியில் உள்ள சீனியர் நிர்வாகி பெயரை, அல்லது மாவட்டத்தில் உள்ள ஒரு சீனியரைப் பற்றி கேள்வி கேட்பார். இல்லையெனில், பேராசிரியர்,  துரைமுருகன், ஆற்காடு வீராசாமி போன்ற யாரவது ஒருவர் கேள்வி எழுப்பி, சீட் கேட்டு வந்தவர்களை சீண்டிப் பார்ப்பார்கள். ஏனெனில், அவர்கள் அனைவருக்கும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தி.மு.க. நிர்வாகிகளைப் பற்றி முழுமையாக தெரிந்திருக்கும். ஆனால், இந்த முறை நேர்காணலில், சீட் கேட்டு வருபவர்களின் பின்னணி பற்றி தளபதிக்கு மட்டுமல்ல, அவருடன் நேர்காணலில் பங்கேற்கும் துரைமுருகன் உள்ளிட்டவர்களுக்கும் முன்கூட்டியே தெரியுமா என்பது சந்தேகம்தான்.

அ.தி.மு.க.வுக்கு மாற்று என்று தி.மு.க.வை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் எல்லோருக்கும், உட்கட்சிக்குள் நடக்கும் கோல்மால்கள் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அ.தி.மு.க.வை ஒப்பிட்டு பார்க்கும்போது, அந்தக் கட்சியில் நிர்வாகிகளுக்கு எப்போதுமே சுதந்திரம் உண்டு. ஊரில் உள்ள ஒரு கிளை நிர்வாகி கூட, யாரிடமும் அனுமதி பெறாமல் நேராக சென்னை வந்து தனக்கு மட்டுமே பணம் கட்டி விருப்பப் மனுவை தாக்கல் செய்திட முடியும். ஆனால்,  அந்தளவுக்குக் கூட தி.மு.க.வில் கட்சி நிர்வாகிகளுக்கு சுதந்திரம் இல்லை என்பதுதான் வேதனை. என்னுடைய வேதனையை, அண்ணா அறிவாலயத்தில் இருந்த மூத்த நிர்வாகி ஒருவரிடம் பகிர்ந்தேன். அண்ணா காலத்து அரசியல்வாதி அவர். தன் மனதில் இருந்த குமறல்களை அவரும் கொட்டினார், என்று சொல்லி பேச்சை நிறுத்தினார் அவர்.

மெல்லிய புன்னகை முகத்தில் தோன்ற மீண்டும் பேசினார். அண்ணா கட்சியைத் தொடங்கி முதல் தேர்தலை சந்தித்த 1957ல் போட்டியிட்ட 117 வேட்பாளர்களைப் பற்றியும் அண்ணாவுக்கே நேரடியாக தெரியும். அப்போதெல்லாம் இந்த விருப்பப் மனுவுக்கு பணம் கட்டும் பஞ்சாயத்தே இல்லை. அதற்குப் பின்னர், கட்சிக்கு தலைமை ஏற்ற கலைஞர் காலத்தின் பிற்பகுதியில்தான் இந்த நடைமுறையே வந்தது. அதுபோலவே, தளபதி, கனிமொழி,மு.க.அழகிரி என அவரது குடும்ப உறவுகள் தலையெடுக்க ஆரம்பித்தவுடன் அவர்கள் மூலமாக தேர்தலில் போட்டியிட ஒரு கூட்டமே முண்டியடித்தது. அதனால், தலைவர் மேலே, கட்சியின் மீது, கொள்கை மீது பிடிப்புள்ள, விசுவாசமுள்ள தொண்டர்களுக்கு கட்சியிலும், ஆட்சி அதிகாரத்திலும் பதவிகள் கிடைப்பது குதிரை கொம்பானது. ஆனால், அதையெல்லாம் உடைத்து எறிந்தது எம்.ஜி.ஆர்.தான். அவர் காட்டிய வழிதான், இன்றைக்கும் அ.தி.மு.க.வில் நீடிக்கிறது.

தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.க.வை தொடங்கி முதல் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது, நடந்த சுவாரஸ்யங்களில் ஒன்றை, உங்களுக்கு எல்லாம் தெரிந்த ஒருவரைப் பற்றி சொல்கிறேன். இன்றைக்கு மனிதநேய அறக்கட்டளையைத் தொடங்கி, தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் உயர் பதவிகளில் இருக்கும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை உருவாக்கிய, உருவாக்கிக் கொண்டிருக்கும் சைதை துரைசாமியின் முதல் தேர்தல் அனுபவத்தை கேளுங்கள். 1977 ல் முதல் சட்டமன்றத் தேர்தலை சந்தித்தபோது, சென்னை மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில் யார்,யாரையெல்லாம் வேட்பாளராக அறிவிப்பது என்று ஆலோசித்தபோது, சைதாப்பேட்டை தொகுதியில் தான் போட்டியிட விரும்புவதாக கூறுகிறார் துரைசாமி.

அப்போது அவரிடம் எம்.ஜி.ஆர், ஏம்ப்பா, உனது சொந்த ஊரான கரூர் மாவட்டத்தில் போட்டியிட வேண்டியதுதானே என்று கேட்கிறார். அதற்கு நீங்கள் தானே சைதை துரைசாமி என பட்டப் பெயர் வைத்து அழைத்தீர்கள் என்கிறார். அவரின் ஆர்வத்தைப் பார்த்து ஓ.கே. சொல்லிவிடுகிறார் எம்.ஜி.ஆர். ஆனால், சைதாப்பேட்டையில் வெற்றி வாய்ப்பை இழந்துவிடுகிறார் சைதை துரைசாமி. எம்.ஜி.ஆர். சொன்ன மாதிரி சொந்த ஊரில் போட்டியிட்டு இருந்தால் அவர் வெற்றி பெற்றிருக்க கூடும். அப்போது அவர் வெற்றிப் பெற்றிருந்தால், எம்.ஜி.ஆரின் தலைமையிலான முதல் அமைச்சரவையில் அவரும் இடம் பெற்றிருப்பார்.

ஆனால், அந்த அதிர்ஷ்டம் சைதை துரைசாமிக்கு கிடைக்காமல் போனது. அதற்கு காரணம் என்ன தெரியுமா இன்றைக்கு சொற்ப காசாக பார்க்கப்படும் சில ஆயிரம் ரூபாய்தான். சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட சில குப்பங்களில் உள்ள மக்களுக்கு ஓட்டுக்கு இரண்டு ரூபாயோ, ஐந்து ரூபாயோ பணம் கொடுத்தால் எளிதாக வெற்றிப் பெற்றுவிடலாம் என சைதை துரைசாமியிடம் அ.தி.மு.க.வினர் தெரிவித்த போது, ஓட்டுக்கு காசு கொடுத்துதான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்றால், அப்படிபட்ட வெற்றியே எனக்கு தேவையில்லை என்று கூறிவிட்டாராம்.

பதவிக்காக பணம் செலவழிக்க மாட்டேன் என்று அன்றைக்கு உறுதியாக இருந்த அவரைப் பார்த்து வியந்துபோன எம்.ஜி.ஆர், அவர் தோல்வியடைந்த போது சொன்ன ஒரு வார்த்தைதான் 20 ஆண்டுகளுக்குப் பின்பு நிறைவேறியது. எம்.எல்.ஏ. தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டாய் அல்லவா, உன்னை சென்னை மாநகராட்சி மேயர் ஆக்குகிறேன் என்று சொன்னாராம், எம்.ஜி.ஆர். அதை பின்னர் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றி வைத்தாராம். அ.தி.மு.க.வின் முதல் சென்னை மேயர் சைதை துரைசாமிதான்.

எம்.ஜி.ஆரிடம் பாடம் கற்ற, அவர் வழியில் நடந்த ஜெயலிதா, அ.தி.மு.க.வில் கட்சி நிர்வாகிகள் எல்லோரும் சுதந்திரமாக பேச, செயலாற்ற உட்கட்சிக்குள் அனுமதித்தார். ஆனால், கலைஞரைப் போலவே, தளபதியும் செயல்படுவதுதான் வேதனையளிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் இல்லை. ஆனால், இன்றைக்கு ஒவ்வொரு நிமிடமும் தி.மு.க. வை கிழித்து தொங்கப்போடுகிறார்கள் அடையாளம் தெரியாதவர்கள் எல்லாம்.

இந்த நேரத்தில் அதுவும், பத்தாண்டுஆட்சியில் இல்லாத நிலைமையில், தளபதி சூதனமாக நடந்து கொள்ள வேண்டும்.சுதாரித்துக் கொள்ளவில்லை என்றால், கூட இருப்பவர்களே கவிழ்த்துவிடுவார்கள் என்று ஆதங்கத்தோடு கூறினாராம் அண்ணா அறிவாலய மூத்த நிர்வாகி ஒருவர்.

மக்கள்  இன்னும் ஓட்டு போடாத போதே முதல் அமைச்சராகிவிட்டோம் என்ற கனவில் இருந்தால் என்ன செய்ய…