Thu. Nov 21st, 2024

கள்ளக்குறிச்சி வன்முறை நிகழ்வு எதிரொலியால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்மான முறையில் மரணம் அடைந்ததையொட்டி, கல்லூரி நிர்வாகிகளை கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என அவரது பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து தண்டனை வழங்கினால்தான் மகளின் உடலைப் பெற்றுக் கொள்வோம் என பெற்றோர் உறுதியாக இருந்து வந்த நிலையில், பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக மாவட்ட ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் செயல்பட்டு வருவதாக அவர்களும் உறவினர்களும் குற்றம் சாட்டினர்.

4 நாள் தொடர் போராட்டத்திற்குப் பிறகும் பள்ளி நிர்வாகத்தினர் கைது செய்யப்படாத நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 17 ஆம் தேதி காலை கனியாமூரில் கூடிய பல்லாயிரக்கணக்கானோர், பள்ளி நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூட்டம் அதிகமாக, அதிகமாக அங்கு பதற்றமான சூழல் நிலவியது. பள்ளி நுழைவு வாயில் முன்பு 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், கூட்டத்தில் ஒரு குழுவினர் கல்வீச்சில் ஈடுபட்டதால், கலவரம் வெடித்தது. போலீஸ் வாகனம், பள்ளி வாகனம் உள்ளிட்டவற்றுக்கு தீ வைத்தும் பள்ளியை சூறையாடியும் போராட்டக்காரர்கள் தங்கள் ஆவேகத்தை காட்ட, கல்வீச்சில் காயமடைந்த டிஐஜி, எஸ்.பி உள்ளிட்டோர் காயமடைந்ததுடன், வன்முறையாளர்களை கட்டுக்குள் கொண்டு வரமுடியாமல் காவல்துறையினர் பின்வாங்கினர்.

தொடர்ந்து 4 மணிநேரம் வன்முறை வெறியாட்டம் தொடர்ந்ததால், அண்டை மாவட்டங்களில் இருந்து அதிரடிப்படை போலீசார் வரவழைக்குப்பட்டு, வன்முறையாளர்கள் விரட்டி யடிக்கப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டமே கலவரப்பூமியாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டதையடுத்து, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக குற்றம் சாட்டினர்.

இதனிடையே, குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று டிவிட்டர் மூலம் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்விடத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறைச் செயலாளர் பனீந்தர்ரெட்டி ஆகியோர் சென்று உரிய விசாரணை நடத்தி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவார்கள் என்று அறிவுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து, கள்ளக்குறிச்சி கனியாமூருக்கு விரைந்துச் சென்ற டிஜிபி, உள்துறை செயலாளர் ஆகியோர் வன்முறை கட்டவிழ்ந்து விடப்பட்ட பள்ளிக்கூடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். பின்னர், மாணவி உயிரிழப்பு விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். கல்லூரி செயலாளர், தாளாளர், முதல்வர் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து நேற்றைய தினம், மாணவி எழுதி வைத்திருந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த இரண்டு ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை காணொளி வாயிலாக கள்ளக்குறிச்சி வன்முறை நிகழ்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் உள்துறை செயலாளர், டிஜிபி மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி எஸ்.பி. செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். புதிய எஸ்பியாக பகலவனை நியமனம் செய்து உள்துறைச் செயலாளர் பனீந்திர ரெட்டி ஐஏஎஸ் உத்தரவிட்டார்.

DIPR-IPS-Transfers-Postings-Date-19.07.2022-

இதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஶ்ரீதரும் இடம் மாற்றம் செய்யப்பட்டார். புதிய ஆட்சியராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

DIPR-IAS-Transfers-Postings-Date-19.07.2022-1