இலங்கையில் மீள முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், ராஜபக்ச அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த இரண்டு மாதமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலக வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் நடத்திய போராட்டத்தில் வரலாறு காணாத வன்முறை மூண்டது. இதனையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபச்சே விலகினார். அதனையடுத்து, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமங்கே பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் மக்களின் கோபத்தை குறைக்கவும் பல்வேறு முயற்சிகளை அவர் எடுத்தும் இலங்கையில் இயல்பு நிலை திரும்பவில்லை. பெட்ரோல் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவியதையடுத்து, கொழும்பு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் மீண்டும் வீதிக்கு வந்து போராடினர்.
அதன் தொடர்ச்சியாக இன்று கொழும்பு நகரில் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் பேரணியாக அதிபர் மாளிகையை நோக்கி படையெடுத்தனர். போராட்டத்தின் எழுச்சியைக் கண்டு ஆளும்கட்சி மிரண்டு போனது. உயிர் தப்பிக்கும் வகையில் அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடினார் கோத்தபய ராஜபக்சே. இதனையடுத்து, அதிபர் மாளிகையில் நுழைந்த போராட்டக்காரர்கள், நீச்சல் குளத்தில் குதித்தும், படுக்கை அறையில் துள்ளி குதித்தும் உற்சாகமாக விளையாடினர்.
மக்களின் கோபம் தீராததால், இலங்கை முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடி இலங்கையில் அமைதியை நிலைநாட்டும் வகையில் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதில் முக்கியமாக தற்போதைய பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைந்து புதிய அரசை உருவாக்க வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அனைத்து எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்க பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மறுப்பு தெரிவிதது வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நிலவி வரும் பதற்றமான சூழலை இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இந்நிலையில், இன அழிப்பில் ஈடுபட்ட ராஜபக்சே குடும்பத்திற்கு கடுமையான தண்டனை பெற்று தர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இலங்கையை திவாலாக்கிய ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் நடத்தி வரும் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை அதிபர் மாளிகையை மக்கள் கைப்பற்றியுள்ளனர். மக்கள் சக்திக்கும், ஆத்திரத்திற்கும் அஞ்சி அதிபர் கோத்தபாய தப்பியோடியுள்ளார்!
இலங்கையில் ஊழலில் திளைத்த ராஜபக்ச குடும்பம் அதை மறைக்க தமிழர்களை இனப்படுகொலை செய்தது, அதற்காக கடன் வாங்கியது, இனப்படுகொலைக்கு உதவிய நாடுகள் இலங்கையை கொள்ளையடிக்க அனுமதித்தது ஆகியவை தான் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு காரணமாகும்!
அந்த வகையில் இலங்கை பொருளாதார நெருக்கடியை ஈழத்தமிழர் இனப்படுகொலையிலிருந்து பிரித்துப்பார்க்க முடியாது. எந்த சிங்கள மக்களை வெறியேற்றி ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தமிழர்களை கொன்றார்களோ, அந்த சிங்கள மக்களாலேயே ராஜபக்ச குடும்பம் விரட்டியடிக்கப்பட்டுள்ளது!
ஈழத்தமிழர்களை #இனப்படுகொலை செய்தவர்களை ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டியிருக்கிறது. ராஜபக்சேக்கள் அதிகாரத்திலிருந்து மட்டுமே அகற்றப்பட்டுள்ளனர். இனப்படுகொலைக்காக தண்டிக்கப்படவில்லை. இனப்படுகொலையாளிகள் தப்பிக்க உலக நாடுகள் அனுமதிக்கக் கூடாது!
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.