இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மிகவும் மோசமடைந்து வருகிறது. அத்தியாவசிய தேவையான அரிசி, எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், விலையேற்றமும் கடுமையாக உயர்ந்துள்ளதால் சிங்களர்கள், தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களும் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவுக்கு சிரமங்களை அனுபவித்து வருகின்றனர்.
தலைநகர் கொழும்பில் ஆர்ப்பாட்டம், பேரணி என நாள்தோறும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள், இலங்கை அரசுக்கு எதிராக கடுமையான முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
மக்கள் தன்னெழுச்சியாக வீதிகளுக்கு திரண்டு வந்து போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், பொருளதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடன்உதவி பெறுவதற்கு இலங்கை அரசு தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகிறது.
இருப்பினும் அன்றாட வாழ்விற்கே கடுமையாக போராட வேண்டியிருப்பதால், இலங்கையில் வாழும் தமிழர்கள், தங்களின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தமிழகத்திற்கு கடல் வழியாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக இன்று காலை, யாழ்பாணம் மாவட்டம் வல்வெட்டித்துறையை சேர்ந்த 8 இலங்கை தமிழர்கள் அகதிகளாக ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி வந்தனர். கைக் குழந்தைகளுடன் பெண்களும் தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கெனவே, இலங்கை தமிழர்கள் 103 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ள நிலையில், அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சிறப்பு முகாமை ஏற்பாடு செய்து அனைத்து உதவிகளும் எளிதாக கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.