Tue. Dec 3rd, 2024

தமிழகத்தைச் சேர்ந்த 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக் காலம் வரும் ஜுன் மாதம் நிறைவடைவதையொட்டி, 6 உறுப்பினர்களுக்கானத் தேர்தல் அடுத்த மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஆர்.எஸ்.பாரதி, இளங்கோவன், ராஜேஷ்குமார் ஆகிய திமுக உறுப்பினர்களுக்கான இடங்களுக்கு திமுக சார்பில் யார் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் நிலவி வந்தது. திமுக கட்சியைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகளுக்கே பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் அக்கட்சியில் பரவலாக எழுப்பப்பட்டு வந்தது.

இப்படிபட்ட நேரத்தில், திமுக சார்பில் ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது. தற்போதைய மூன்று எம்பிக்களில் ஆர்.எஸ்.பாரதி,இளங்கோவன் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போதைய எம்பி ஆனநாமக்கல் மாவட்ட திமுக செயலாளர் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகியோருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஒரு தரப்பினர் கூறி வரும் நிலையில், தற்போதைய பதவியே அவருக்கு குறுகிய காலமாக வழங்கப்பட்ட ஒன்றுதான் என்றும், அதன் காரணமாகவே முழு பதவிக் காலத்தையும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவும் ராஜேஷ்குமாருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக திமுக முன்னணி நிர்வாகிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

ராஜேஷ்குமாருக்கு மற்றொரு சிறப்பு என்னவென்றால், 6 மாதத்திற்கு முன்பு இவர் மாநிலங்களவையில் உறுப்பினராக பதவியேற்றுக் கொண்ட போது, உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகழைப் பரப்பும் வகையில் அவர்களது பெயர்களை குறிப்பிட்டு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார். அப்போதே மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடு, அவர் கூறிய தலைவர்களின் பெயர்கள் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்று அறிவித்தார்.

திமுக வழக்கறிஞர்களில் வில்சன், இளங்கோ ஆகியோர் ஏற்கெனவே ராஜ்ய சபா உறுப்பினர்களாக உள்ள நிலையில், மற்றொரு முன்னணி வழக்கறிஞரான கிரிராஜனுக்கு மாநிலங்களை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாவது வேட்பாளராக தஞ்சாவூர் திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரான மூத்த நிர்வாகியான தஞ்சை கல்யாண சுந்தரம் என்பவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் ஆளும்கட்சியான திமுகவுக்கு உள்ள பலத்தின் அடிப்படையில் நான்கு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க முடியும் என்ற நிலையில், 4 வது வாய்ப்பு, ஏற்கெனவே காங்கிரஸ் கட்சிக்கு அளித்த வாக்குறுதியின் படி, காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்திக் கொள்ளும் வகையில் திமுக தலைமை விட்டுக் கொடுத்துள்ளது.

திமுக அறிவித்துள்ள வேட்பாளர்கள் பட்டியல் இதோ…