Sun. Nov 24th, 2024

ஆயிரம் ஆயிரம் விமர்சனங்களை தங்கள் வாழ்நாளின் போதே எதிர்கொண்டிருந்தாலும், அவர்கள் இருவரின் மறைவுக்குப் பிறகு ராட்சச கடல் அலைகளில் சிக்கிய கப்பல் போல, ஆளுமையற்ற, ஆண்மையற்ற தலைவர்கள் இன்றி தமிழகம் தத்தளிக்கிறது என்ற ஆதங்கம், நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி அனைத்து தளங்களிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசியல் களத்தில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று அரசியலையே பிழைப்பாக கொண்டவர்களும் சரி, அரசியலை தீண்டத்தகாத ஒன்றாக பாவிப்பவர்களும் சரி, ஒரே நேர்கோட்டில் நின்று புலம்புகிறார்கள். ஆனால், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தங்களுடைய பொதுவாழ்க்கையில், தனிப்பட்ட தங்களுடைய வாழ்க்கை மூலமாக, தங்கள் செயல்பாடுகள் மூலமாக, தங்களின் சிந்தனைகள் மூலமாக, 70 வயதை எட்டியப் பிறகும் கற்றலில் ஆர்வம் காட்டி வருவதன் மூலமாக, உலக அரசியல், உள்ளூர் அரசியலில் பேச்சளவிலும், செயல் அளவிலும் கூட90 சதவிகிதத்திற்கு மேல் உண்மையான, உள்ளார்ந்த ஈடுபாட்டை நேர்மையான வழியில் காட்டி வரும் இரண்டு தலைவர்கள், தமிழ் மண்ணில் நெடு,நெடுவென்ற உயரத்தில் நடமாடிக் கொண்டிருந்தாலும், பேச்சளவில் கூட அவர்களை, தமிழகத்தை வழிநடத்தும் தகுதிக்குரிய தலைவர்களாக சிறிய குழு அளவில்கூட யாரும் பேச முன்வரவில்லை என்றால், அவ்விருவரும் தங்கள் அரசியல் வாழ்க்கையிலேயே தோல்வியை தழுவிவிட்டவர்கள் என்றுதானே அர்த்தமாகிறது

அவ்விருவரின் வாழ்க்கை, விழலுக்கு இறைத்த நீர் போல போய்விட்டதே என்ற கவலை, அவ்வப்போது அவர்களின் மனசாட்சியைக் கூட குத்தி குதறிக் கொண்டிருக்கலாம். அவர்களின் தோல்வி, தனிப்பட்ட தோல்வியாக இருந்தால், சாதாரணமாக கடந்து போய் விடலாம். ஒரு வரிச் செய்தியாக கூட அதை பதிவு செய்யாமல் விட்டுவிடலாம்.

ஆனால், அவர்கள் கண்ட வீழ்ச்சி, தமிழகத்திற்குமான சரிவாக மாறியிருக்கும்போது பரிதாபப் படாமல் இருக்க முடியுமா? முதலாமவர், ப.சிதம்பரம்.

உலகமே திரும்பி பார்க்க வைக்கிற பொருளாதார வல்லுநர். அரைநூற்றாண்டுக்கு மேல் அரசியல் வாழ்க்கை. அறிவில் சிறந்தவர், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஆழமாக சிந்திக்கும் திறன் பெற்றவர், சட்ட அறிவு மிக்கவர், பொருளாதாரத்தை கரைத்து குடித்த புலி, சமநிலை அறிஞர்கள், அரசியல்வாதிகள் வியக்கக் கூடிய அளவிற்கு நேர்மையிலும், எளிமையிலும் அதீத பற்றுள்ளவர். இப்படியெல்லாம் காங்கிரஸ் தலைவர்களில் மூத்தவரான ப.சிதம்பரத்தை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருந்தால்,அவரது எதிர்முகாமில் இருந்து எதிர்ப்புக் குரலாக ஒருவரிடம் இருந்துகூட எழுந்திருக்காது.

ஆனால், தன்னுடைய ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையையும் அவமானப்பட்டு போகும் அளவிற்கு திகார் சிறை அனுபவம் அவருக்கே நேர்ந்துவிட்டதுதான், காலத்தின் கொடுமை. நிரபராதி என்று ஒற்றை வார்த்தையை அவரை நோக்கி என்றைக்கு நீதிமன்றம் வழங்குகிறதோ , அன்று வரை அவரின் ஒட்டுமொத்த வாழ்க்கை மீது விழுந்துள்ள கரும்புள்ளியின் கறை நீங்காது.

அதை தள்ளி வைத்து பார்த்தால், தமிழன் என்ற அடையாளத்தோடு, இந்தியாவின் தலைநகரான டெல்லியை மட்டுமல்ல, உலகின் பல நாடுகளிலும் வேட்டி கட்டிய ஒரு தமிழராக பவனி வந்து, தனது அறிவாற்றலால் உலகின கவனத்தை ஈர்த்தவர் ப.சிதம்பரம். தன் இளமைக்காலம் முதல் 75 வயதை எட்டியுள்ள இன்றைய முதுமைக்காலம் வரை தேசியத்தை மட்டுமே உயிர் மூச்சாக கொண்டதுதான், அவரின் இன்றைய அரசியல் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள், அவரோடு சமகாலத்தில் பயணித்து வரும் மூத்த ஊடகவியலாளர்கள்.

அனைத்துத் துறைகளிலும் தனித்துவமிக்கவராக பரிமாணம் பெற்ற அவர், விளிம்பு நிலை, நடுத்தர மக்களின் வாழ்க்கைப் பாதையில் பயணிப்பதை தவிர்த்து, அந்த பாதையையே இருக்கக் கூடாது என்ற மேற்கத்திய அதிகார சிந்தனையிலேயே 50 ஆண்டு காலம் ப.சிதம்பரம் பயணித்ததுதான், தமிழகத்தில் இன்றைக்கு அவரை ஒரு தலைவராகக் கூட, அவர் நம்பிய மேல்தட்ட மக்களே சீந்த தயாராக இல்லை என்று வேதனைப்பட உரைக்கிறார், நீண்ட நெடிய அரசியல் கள அனுபவம் கொண்ட ஆய்வாளர்.

இந்த சிந்தனை அவருக்கே பத்தாண்டுகளுக்கு முன்பு உதித்தது. உரைத்தது. அதனால்தான், “இதுவரை இந்தியா என்ற கண்ணாடியை அணிந்துக் கொண்டு எனது தொகுதியை பார்த்தேன். இனிமேல் எனது தொகுதி எனும் கண்ணாடியை அணிந்து கொண்டு இந்தியாவை பார்ப்பேன்” என்றார். அந்த உணர்ச்சிமிகு வார்த்தைகளை நம்பி மீண்டும் ஏமாந்தார்கள் சிவகங்கை தொகுதி மக்கள். அதன்பிறகுதான், அதற்கு முன்பு அவருக்கு கிடைக்காத பட்டப்பெயர், 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகுதான் கிடைத்தது. ப.சிதம்பரமும் ஏமாற்று அரசியல்வாதி என்று மக்கள் வெளிப்படையாக பேச தொடங்கினார்கள்.

பாவம், சிவகங்கை தொகுதி மக்கள். பசுந்தோல் போர்த்திய புலி ப, சிதம்பரம் என்பது தெரியாது. அவரின் முதலாளித்துவ சிந்தனைக்கு, ஜி.கே.மூப்பனார் என்ற காங்கிரஸ் சிந்தனையில் ஊறியிருந்த தலைவர் கடிவாளமாக இருந்தார். ஜி.கே.மூப்பனாரின் நிழலில் இருந்து 2001 ல் விலகி, காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையை தொடங்கிய அதே ஆண்டிலேயே தனது உண்மையான முகத்தை காட்டினார்.

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த அவரது கட்சிக் கூட்டத்தில் அவர் பேசிய பேச்சு,இன்றைக்கு போல சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அன்றைக்கு இருந்திருந்தால், அவரது அரசியல் வாழ்க்கைக்கு அந்த நிமிடமே கல்லறை கட்டப்படடிருக்கும்.

“ரயில்வே ஏன் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் ஏன் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். சுகாதார கட்டமைப்புகளுக்கு ஏன் அரசாங்கம் கோடி, கோடியாக செலவிட வேண்டும். பேருந்து போக்குவரத்து, மருத்துவமனைகளை அரசு நிர்வாகம் ஏன் கட்டி அழ வேண்டும். இந்த துறைகள் எல்லாம் லாபம், நஷ்டம் சார்ந்தவை. வணிகத்தை ஏன் அரசாங்கங்கள் கையாள வேண்டும். இவையெல்லாம் தனியாரிடம் இருப்பதுதான் வளர்ச்சிப் பெற்றதாக கூறப்படும் ஒரு நாட்டின் அடையாளம். நிர்வாகம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புதான், அரசாங்கம். ராணுவம் அரசாங்கத்திடம் இருக்கலாம். வெளியுறவுத்துறை அரசாங்கத்திடம் இருக்கலாம்” என இதே மாதிரியான கருத்துகளை அவருடைய நாவண்மையால் நவின்றார்.

தனது ஆவி காற்றில் கலந்தாலும் தனது சிந்தனையில் மாற்றமிருக்காது என்பதை அப்பாவி தமிழக மக்களுக்கு அப்போதே வெளிச்சம் போட்டு காட்டினார், ப.சிதம்பரம். 30, 40 வயதுக்குட்பட்ட காலத்திற்குள்ளாக உள்ள ஒருவனுக்கு கம்யூனிஸ சிந்தனை மீது ஈர்ப்பு வரவில்லை என்றால், அவனது வளர்ச்சியில் சந்தேகம் வரும். அதேநேரத்தில், 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் அதே கம்யூனிச் சிந்தனைகள் தொடர்ந்தால், அவனது அறிவை சோதித்துப் பார்க்க வேண்டும்… இப்படி பேசியவர் ப.சிதம்பரம்.

இதுதான் ப.சிதம்பரம். அவரின் உடம்பில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும், முதலாளித்துவத்திற்கு சாமரம் வீசக் கூடியது. நாடி நரம்பெல்லாம் முதலாளித்துவ சிந்தனை துடித்துக் கொண்டிருந்ததால்தான், ஏழை எளிய மக்களிடமும் இருந்தும் வரி வருவாயை சுரண்டி எடுக்கலாம் என்ற அபூர்வ, அதிசய பொருளாதார செயல்திட்டத்தை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தினார்.

1997 ஆம் ஆண்டில் மத்திய அரசில் நிதியமைச்சராக முதல்முறையாக அவர் பொறுப்பு ஏற்ற போதே, எந்த மக்களோடு வாழ்வதே அவமானகரமானதாக நினைத்தாரோ, அந்த மக்கள் எஸ்.டி.டி. எனும் முறை மூலம் தொலைபேசியில் பேச தொடங்கிய நேரத்தில் சர்வீஸ் சார்ஜ் எனும் சேவைக் கட்டணம் மூலம் மத்திய அரசின் நிதி ஆதாரத்தை பெருக்க, விளிம்பு நிலை மக்களின் வயிற்றில் அடித்து பிடுங்கும் வழிமுறைக்கு பாதை அமைத்தார் ப.சிதம்பரம்.

ஆசை ஆசையாக உறவினர்களின் குரல்களை, வாரிசுகளின் குரலைக் கேட்க வந்த வறியவர்கள், 5 ரூபாய்கு பேசினால், 2 ரூபாபயை சேவைக்கட்டணமாக செலுத்தினார்கள். போனில் பேசும்போதே கட்டணம் எகிறும் ரீடிங்கை பார்த்து அன்றைக்கே இதயம் துடித்த விளிம்பு நிலை மக்களின் பாவம், சாபம் 20 ஆண்டுகள் கடந்து போனாலும் கரைந்து போகுமா ?

தனித்த, பெருத்த முதலாளிகளான கார்ப்பரேட் உரிமையாளர்களுக்கு சேவை செய்வதே செஞ்சோற்றுக் கடனாக நினைத்த ப.சிதம்பரத்தின், 37 ஆணடுகளின் பாராமுகம்தான், 50 ஆண்டுக் கால திராவிட ஆட்சியில் தமிழகம் பெற்ற வளர்ச்சியை, இந்த ஆறு ஆண்டு காலத்தில் ஓட்டுமொத்தமாக காவுக் கேட்டுக் கொண்டிருக்கிறது.

உள்ளூர் போட்டிகளை புறக்கணித்துவிட்டு ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்குவேன் என்று ஓடியவர், இன்றைக்கு இரண்டையும் கோட்டை விட்டு நடுத்தெருவில் நிற்கிறார். 1985 ஆம் ஆண்டிலே இருந்து மத்திய அரசின் அதிகாரத்தை சுவைக்க தொடங்கிய ப.சிதம்பரத்தின், பொருளாதார சிந்தனையில் முளைத்தவைதான், இன்றைக்கு தமிழகத்தை பாழ்படுத்திக் கொண்டிருக்கும் வளர்ச்சித் திட்டங்கள்.

ஸ்டெர்லைட் திட்டம், ஹைட்ரோ கார்ப்ன் திட்டம், மீத்தேன் எரிவாயு திட்டம் உள்ளிட்ட திட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆதியும் அந்தமும் தெரிந்து வைத்திருந்த ப.சிதம்பரம், தமிழகத்தை பாழ்படுத்தும் திட்டங்கள் இவை என தெரிந்திருந்தும், அவை செயல்படுத்துதற்கு ஒரு சில நேரங்களில் மூலக்கர்த்தாகவும், பல நேரங்களில் பாராமுகமாகவும் இருந்திருக்கிறார் என்ற குற்றச்சர்ட்டுகள் டெல்லிலேயே சத்தமாக கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

இதையெல்லாம் கடந்து, இன்றைக்கு தமிழக பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக பாடையில் ஏற்றிக் கொண்டிருக்கும், ஜி.எஸ்.டி. எனும் சரக்கு சேவை வரி என்ற வழிப்பறிக் கொள்ளை சிந்தனை, ப.சிதம்பரத்தின் மூளையில் உதித்த வித்துதான்.

வயிற்றில் அடித்தது ஒருபக்கம் என்றால், தலைமுறைக்கே வேட்டு வைத்தவர் என்ற பழிச்சொல்லையும் அவர் சுமத்து நிற்கிறார். தேசத்தின் நன்மைக்காக அவர் சிலுவையை சுமந்தேன் என்று கூட பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால், தாய்க்கொடி உறவுகளின் சாபம் சும்மா விடாது. 2009 ம் ஆண்டில் இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களின் சுவாசம் அடக்கப்படப் போகிறது, தமிழ் ஈழமே மனித ரத்தத்தால் மூழ்கடிக்கப் போகிறது என்ற இனப்பேரழிவுப் பற்றிய தகவல் முன்கூட்டியே தெரிநதிருந்த போதும், இதயம் துடித்து, உடல் துடித்து அதை தடுக்க துளியளவும் முயற்சி எடுக்காமல், மவுன சாமியாக நின்றாரே., அவரின் மனிதத்தன்மையை எப்படி கேள்விக்குறியாக்காமல் விடுவது

மானம், மரியாதை, சூடு, சொரணையற்ற மனிதர்களாக மாறிவிடுவார்களா? தமிழகத்தில் இருந்து டெல்லிக்கு செல்லும் தமிழக அரசியல்வாதிகள் என்று சந்தேகப்படுவதற்குக் கூட வாய்ப்பு இல்லாமல் போகிறதே-? அவருக்கு பிந்தைய ஒரு தன்மான மனிதனின் வரலாறு சொல்லும் பாடம்.. காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கு வஞ்சகம் இழைக்கப்படுகிறது என்று பொங்கி, தனது மத்திய அமைச்சர் பதவியையே துச்சமென மதித்து, தூக்கியெறிந்த தன்மான தமிழனாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டாரே வாழப்பாடி ராமமூர்த்தி. அவரும் தமிழ் மண்ணில் பிறந்தவர்தானே…ப.சி. பாதையிலேயேதானே, தேசியத்தை முழு மூச்சாகக் கொண்டிருந்தார். அதையும் மீறி அவரது ரத்தத்தில் தமிழ்ன் என்ற உணர்வு அதிகமாக இருந்தது.

ப.சிதம்பரத்தோடு உலக அரசியல் தலைவர்களை ஒப்பிடுவதுதான் சரியாக இருக்கும் என்றாலும் கூட, அந்தளவுக்கு நமக்கு உலக அரசியலில் அனுபவ அறிவு இல்லாததால, அவருக்கு புகழ் சேர்ககும் அளவுக்கு உள்ளுரிலேயே ஒருத்தரை அடையாளப்படுத்தினாலதான், சரியாக இருக்கும்.

20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் அனுபவம் இருந்தாலும் கூட, 4 ஆண்டுகள்தான், மொத்த அதிகாரமும் தன் கைக்கு வந்தவுடனேயே, தன் சொந்த ஊரை, மாவட்டத்தை, சிங்கப்பூருக்கு இணையாக ஒப்பபிடும் அளவுக்கு சாதித்துக் காட்டியிருக்கிறார் என்று புகழ்கிறார்கள், அவரது கட்சியினர். ஒருவகையில் அது உண்மைதான். ப.சிதம்பரம் அளவுக்கு அரசியல் அனுபவமும், அறிவில் முதிர்ச்சியும் இல்லாவிட்டாலும் கூட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசியல் ஆதாயத்திற்காகதான் செய்தார் என்றாலும்கூட, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவிகித இடஒதுக்கீட்டை துணிந்து அமல்படுத்தினாரே…

ஆனால், உலகத்திலேயே தன்னைப் போல அறிவில், அரசியலில் சிறந்த ஒருவர் இல்லை என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ப.சிதம்பரம், அரசுப் பள்ளி மாணவர்களை, மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்களை பாதிக்கும் என்று தெரிந்திருந்த போதும், கொள்கை வடிவிலான நீட் தேர்வு மசோதா தயாரிக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியில், அங்கம் வகித்ததுமட்டுமல்லாமல், கதாநாயகனாகவும் இருந்து தொலைததாரே, அந்த பாவத்தை எந்த கங்கையில் போய் அவர் கழுவுவார்.

இதையெல்லாம் விடுங்கள், தமிழகத்திற்கு, இந்தியாவுக்கு, உலகத்திற்கே தன்னை அடையாளம் காட்டிய சிவகங்கை தொகுதியில் உள்ள மக்களுக்கு, வேண்டாம். உள்ளூர் காங்கிரஸ்காரர்களுக்கு சொந்த காசில் ஒரு டம்ளர் தேநீர் கூட வாங்கித் தராத ப.சிதம்பரத்திற்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் எதற்கு ஆடம்பர சொகுசு பங்களா?

ப.சிதம்பரத்தைப் பற்றியாவது எழுத இவ்வளவு இருக்கிறது. அவரின் தவப்புதல்வரைப் பற்றி ஒரு வார்த்தை ம்ம்…எழுதுவதே வேஸ்ட்.

தமிழக காங்கிரஸுக்கு கர்மவீரர் காமராஜால் புகழ் கிடைத்தது. துறவியின் எளிமையாய் வாழ்ந்த கக்கனால், காங்கிரஏஸுக்கு பெருமை கிடைத்தது. ஏணியாய் இருந்ததால் ஜி.கே.மூப்பனாருக்கு ஒரு படை இருக்கிறது. வீரத்தின் திருமகனாய் தன்னை அடையாளப்படுத்தியதால், வாழப்பாடி ராமமூர்த்தியின் தியாகம், வரலாறாகி இருக்கிறது.

தமிழைவிட, தமிழ்நாட்டை விட தேசியத்தை தலையில் வைத்துக் கொண்டாடிய ப.சிதம்பரத்தின் அரசியல் வாழ்க்கை, முழு மதியாக ஒளிராமல் போகும சோகத்தை, அவராலேயே தாங்கிக் கொள்ள முடியாதே?

‘தண்ணீர் பாட்டிலை 15 ரூபாய்க்கும், ஐஸ் கிரீமை 20 ரூபாய்க்கும் விலை கொடுத்து வாங்கும் மக்கள், பெட்ரோல், டீசல் மற்றும் உணவு தானியங்களின் விலையேற்றத்தைப் பற்றி ஏன் காட்டுக்கத்தல் போடுகிறார்கள்’ என்று 2012 ஆம் ஆண்டில் ஆணவத்தில், அதிகாரத் திமிரில் கேடடதைப் போல எழுதுவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

தமிழனாகாவும் இல்லாமல், இந்தியனாகாவும் இல்லாமல் ப.சிதம்பரம் போனதற்கு லாப,நட்டக் கணக்கு பார்க்கும் புத்திசாலிதனம்தான், அடிப்படை குணமாக இருந்து தொலைதததுதான் சாபக்கேடு.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவைப் பற்றி…. நாளை…