Fri. Nov 22nd, 2024

நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு தன்னை மகன் போல் பார்த்துக்கொண்ட முதலாளிகளை கொலை செய்துவிட்டதாகவும் தன்னை கொலை செய்துவிடும்படி கிருஷ்ணா போலீசாரிடம் கதறி அழுதுள்ளார்.

இந்த நிலையில் மகள் நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதால் கடந்த ஆறு மாத காலமாக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் மகளுடன் கணவன், மனைவி இருவரும் தங்கி உள்ளனர். நேற்று அதிகாலை விமானம் மூலம் சென்னை திரும்பியவர்களை வீட்டில் கார் ஓட்டுனராக வேலை பார்த்து வந்த நேபாள நாட்டைச் சேர்ந்த லால் கிருஷ்ணா காரின் மூலம் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் பதம்லால் கிருஷ்ணா(45) மற்றும் அவரது நண்பர் டார்ஜலிங்கைச் சேர்ந்த ரவி(39) ஆகிய இருவரும் தம்பதியினரைக் கொடூரமாக அடித்து கொலை செய்து கொள்ளை அடித்து நேபாளம் தப்பி செல்ல முயன்றுள்ளனர்.

புகாரின் பேரில் மைலாப்பூர் காவல் ஆயவாளர் ரவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை துரிதப்படுத்தப்பட்டது.

கார் மூலமாக திருவான்மியூர், அடையாறு, கோயம்பேடு, மதுரவாயல், கும்மிடிப்பூண்டி வழியாக ஆந்திராவுக்கு மிக வேகமாக பதம்லால் கிருஷ்ணா மற்றும் ரவி இருவரும் தப்பி செல்வதை அவர்களின் மொபைல் சிக்னல் மூலம் அறிந்த தனிப்படை போலீசார் ஆந்திரா செல்லக்கூடிய வழியில் உள்ள சுங்க சாவடிகள் மற்றும் ஆந்திரப்பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் கொடுத்துக்கொண்டே அவர்களை பின்தொடர்ந்து சென்றனர்.

தொடர்ச்சியாக குற்றவாளிகளை கண்காணித்து குற்றவாளிகளின் புகைப்படம் மற்றும் கார் எண் குறித்த விவரங்களை ஆந்திர போலீசாருக்கு கொடுத்ததன் அடிப்படையில் ஆந்திர போலீசார் ஓங்கோல் அருகே குற்றவாளிகள் தப்பி சென்ற காரை மடக்கி பிடித்து பின் தொடர்ந்து சென்ற மைலாப்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ஆந்திர சென்ற மைலாப்பூர் போலீசார் புகாரளித்த 6 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்து அவர்களிடமிருந்த ஏராளமான தங்க வைர நகைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா ஆகியோர் தங்களுக்கு சொந்தமான இடம் ஒன்றை விற்றது தொடர்பாக ரூ.40 கோடி பணம் இருப்பதாக வாகன ஓட்டுநர் கிருஷ்ணா முன்பு பேசியுள்ளனர்.

அந்தப் பணத்தை கொள்ளை அடிப்பதற்காக பதம்லால் கிருஷ்ணா திட்டமிட்டு, அவரது நண்பர் ரவியுடன் சேர்ந்து கொலை செய்ய பல மாதங்களுக்கு முன்பே திட்டுமிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணியளவில் விமான நிலையத்திலிருந்து ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதாவை ஓட்டுநர் பதம்லால் கிருஷ்ணா கார் மூலமாக வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் ஏற்கனவே இருந்த ரவியும் பதம்லால் கிருஷ்ணாவும் இணைந்து முதல் தளத்திற்கு செல்லும் போதே பின் புறத்தில் இருந்து ஸ்ரீகாந்தை கட்டையால் தலையில் பலமாக தாக்கி கொலை செய்துள்ளனர். அதன் பின் அனுராதாவையும் தாக்கி கொலை செய்துள்ளார்கள் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர், மூன்றடுக்கு லாக்கரில் இரண்டு லாக்கரை மட்டுமே திறக்க முடிந்துள்ளது. அவற்றை திறந்து பார்த்தபோது ரூ. 40 கோடி ரூபாய் பணம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும் மூன்றடுக்கு லாக்கரின் இரண்டு அடுக்குகளிலும் தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகள் இருப்பதைக்கண்டு சந்தோஷமடைந்து அவற்றை கொள்ளையடித்துள்ளனர்.

1000 சவரனுக்கும் அதிகமான தங்க நகைகள், 60 கிலோவுக்கும் அதிகமான வெள்ளி பிஸ்கட்டுகள், வெள்ளிப் பொருட்கள், 10 வைர கம்மல்கள், பிளாட்டின வளையல்கள் என ரூ.8 கோடிக்கும் அதிகமான நகைகளை கொள்ளையடித்துள்ளனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் கொலை செய்யப்பட்ட இடங்களை டெட்டால் ஊற்றி கழுவி அங்கிருந்து காரின் பின் இருக்கையில் தூங்குவது போல போட்டு, நெமிலிச்சேரியில் உள்ள ஸ்ரீகாந்தின் பண்ணை வீட்டிற்கு கொண்டு வந்து புதைத்துள்ளனர்.

குறிப்பாக 4*4 அடி நீள அகலத்தில் 7அடி ஆழத்தில் சடலங்கள் ஒவ்வொன்றையும் இடுப்பு பகுதியை இரண்டாக உடைத்து ஒன்றன்மேல் ஒன்றாக போட்டு அதன் மேல் 5 கற்களைப் போட்டு மண் போட்டு மூடியுள்ளனர். பின்னர் தம்பதியினர் பயன்படுத்திய செருப்பு மற்றும் ஆடைகளை பண்ணை வீட்டின் பின்புறம் பெட்ரோல் ஊற்றி எரித்தவிட்டு அதே காரின் மூலம் தப்பி சென்றதும் தெரியவந்தது.

குறிப்பாக இருவரும் அமெரிக்காவிலிருந்து வரும் நாளை அறிந்த கிருஷ்ணா ஒரு வாரத்திற்கு முன்பே இருவரையும் கொலை செய்து புதைப்பதற்காக பண்ணை வீட்டில் குழி தோண்டி அதனை கோணிப்பை போட்டு மண்ணால் மூடி வைத்திருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

போலீசார் விசாரணையில் பதம்லால் கிருஷ்ணா நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு தன்னை மகன் போல் பார்த்துக்கொண்ட முதலாளிகளை கொலை செய்துவிட்டதாகவும் தன்னை கொலை செய்துவிடும்படியும் போலீசாரிடம் கதறி அழுதுள்ளார்.

பின்னர், ஸ்ரீகாந்த் மற்றும் அனுராதா சடலங்களை புதைத்து வைக்கப்பட்ட நெம்மேலி அடுத்துள்ள சூளேரிக்காட்டில் ஸ்ரீகாந்துக்கு சொந்தமான பண்ணை வீட்டுக்கு புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக குற்றவாளிகள் இருவரும் அழைத்து வரப்பட்டனர்.

சென்னை காவல் தெற்கு கூடுதல் ஆணையர் கண்ணன் ஐ.பி.எஸ் மேற்பார்வையில் திருப்போரூர் வட்டாட்சியர் ராஜன் முன்னிலையில் வீடியோ பதிவுகளுடன் இரண்டு சடலங்களையும் தோண்டி எடுத்து உடற்க்கூறாவுக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். நகை, பணத்துக்கு ஆசைப்பட்டு வீட்டு உரிமையாளர்களை கொடூரமாக கொலை செய்து புதைத்த கார் டிரைவர் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் புகார் அளித்த 6 மணி நேரத்திற்குள் நேபாளம் தப்பி செல்ல முயன்ற குற்றவாளிகளை கைது செய்து சுமார் ரூ.8 கோடி மதிப்பிலான தங்க, வைர, பிளாட்டின நகைகளை மீட்ட மைலாப்பூர் காவல் துறையினரை காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் ஐ.பி.எஸ் வெகுவாக பாராட்டியதுடன் பொதுமக்களும் சமூக வலைதளங்களில் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.