Sun. Nov 24th, 2024

 நீலகிரி மாவட்டம் உதகையில் ஆளுநர் தலைமையில் துவங்கியுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு, ஆளும்கட்சியான திமுகவை கடுமையாக சூடேற்றியுள்ளது என்பதற்கு முக்கிய சாட்சியாக அமைந்துள்ளது சட்டப்பேரவையில் இன்று முன்மொழியப்பட்டுள்ள ஆளுநரின் அதிகாரத்தை பறிக்க கூடிய சட்ட மசோதா.

தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம் செய்யப்பட்ட நாள் முதலாகவே, அவருக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட திமுகவின் தோழமைக் கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார் என்பதற்கு நீட் விலக்கு மசோதா உள்பட 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருப்பதே முக்கிய சாட்சிகளாகும் என்கிறார்கள் திமுக ஆதரவு கல்வியாளர்கள்.

தமிழக அரசின் மசோதாக்களை மட்டுமல்ல, காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்திலும்கூட பல்கலைக்கழக மரபுகளையும் பின்பற்ற மாட்டேன் என்று அடாவடியாக செயல்பட்டு வருகிறார் ஆளுநர் என்று குற்றம் சாட்டுகிறார்கள் திமுகவின் தோழமைக்கட்சிகள்.

எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் நியமனத்திற்கு தேர்வுக்குழு பரிந்துரைத்தவர்களில் ஒருவரை நியமனம் செய்யாமல் கடந்த டிசம்பர் மாதம் பணியில் இருந்து ஓய்வுப் பெற்ற சுதா சேஷையனுக்கு மீண்டும் பணி நீட்டிப்பு வழங்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டதை கண்டு கொதித்துப் போயிருக்கின்றனர் திமுக எம்பிக்கள்.

இப்படிபட்ட நேரத்தில் எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றுவதைப் போல, தமிழக அரசோடு கலந்து ஆலோசிக்காமலும், முதல்வருக்கோ, உயர்க்கல்வித்துறை அமைச்சருக்கோ அழைப்பு விடுக்காமல்,துணைவேந்தர்களின் மாநாட்டை ஆளுநர் தன்னிச்சையாக கூட்டியுள்ளதைக் கண்டு கொதித்துப் போயிருக்கிறார்கள் திமுக தலைவர்கள்.

இந்த பின்னணியோடுதான், ஆளுநருக்கு சரியான பாடம் புகட்டும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநரின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநரிடம் இருந்து பறிக்க வேண்டும் என்ற சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அதனை நிறைவேற்றி தர வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உரையாற்றினார்.

மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக திமுக ஆதரவு அமைப்புகள் கருப்புக் கொடி போராட்டத்தை முன்னெடுத்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த பிறகும்கூட, தன்னிச்சையாக செயல்படுவதை ஆளுநர்   மாற்றிக் கொள்ளவில்லை என்பதைதான் சட்டப்பேரவையில் பேசிய திமுக கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் ஆவேசமான எதிர்ப்பு உரைகள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அதிமுக, பாஜகாவைத் தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுமே, ஆளுநரின் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை கடுமையாக கண்டித்து வருகின்றனர். ஆளுநருக்கு உரிய மாண்பையும், ஆளுநர் மாளிகைக்குரிய மரபையும் குழித்தோண்டி புதைத்துக் கொண்டிருக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என அரசியல் தலைவர்கள் கடுமையாக குற்றச்சாட்டி வருவது உண்மைதானோ என்று சந்தேகப்படும்படிதான் உள்ளது ஆளுநர் மாளிகையின் செயல்பாடுகள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மாநாடு உதகையில் தற்போது நடைபெற்று வருகிறது. ஆளுநர் இந்த மாநாட்டிற்கு தலைமை வகித்து வருகிறார். இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதற்குக் கூட பாஜக நிர்வாகியைதான் தேர்வு செய்திருக்கிறார்கள் என்றால், ஆளுநர் மாளிகை முழுமையாக பாஜக அலுவலகமாகவே மாறிவிட்டது என பொங்குகிறார்கள் கல்வியாளர்கள்.

அவர்கள் புகைப்படங்களை முன்வைத்து குற்றம் சாட்டும் நபர் பிரசன்னா அழகர்சாமி. இவர் ஜெயா டிவியின் முன்னாள் ஊடகவியலாளர். அந்த தொலைக்காட்சியில் பணியாற்றிய காலம் முழுவதும் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவை கடவுளாகவே பூஜித்து வந்தவர். செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் அந்த தொலைக்காட்சியில் சில மாதங்கள் பணியாற்றிய அவர், பின்னர் அங்கிருந்து விலகி, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவில் ஐக்கியமானார்.

அந்தக் கட்சியின் ஐடி விங்கிலும் பணியாற்றினார். சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்தவுடனேயே அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டவர் பிரசன்னா அழகர்சாமி. சென்னை மாவட்ட பாஜக நிர்வாகியாக அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வந்தவர். அதிமுக, பாஜக என அரசியல் கட்சிகளில் தீவிரமாக பணியாற்றிய ஒருவரை, ஆளுநர் தலைமையில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டின் தொகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது எந்தவகையில் நியாயம் என்று கேள்வி எழுப்புகிறார்கள் கல்வியாளர்கள்.

துணைவேந்தர்கள் மாநாடு ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்வதற்காக நேற்றே உதகையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற பிரசன்னா அழகர்சாமி, ஆளுநர் மாளிகைக்குள் அமர்ந்து கொண்டிருப்பது போன்ற புகைப்படங்களையும் ஆளுநர் மாளிகை வளாகத்தில் நிற்பது போன்ற புகைப்படங்களையும் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.

பாஜக கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர், ஆளுநர் தலைமையில் நடைபெறும் பல்கலைக்கழக துணைவேந்தர் மாநாட்டின் தொகுப்பாளராக நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம், ஆளுநர் மாளிகை பாஜக கட்சி அலுவலகம் போலவே மாறிவிட்டது என்ற குமறுகிறார்கள் கல்வியாளர்கள்.