Sun. Nov 24th, 2024

சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது புதிய கல்லூரிகள் துவங்குவது, பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை அனைத்துக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் எழுப்பினர். அவர்களின் கேள்விகளுக்கு உயர்க்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி விரிவாக பதிலளித்தார்.

அவர் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள பாலி டெக்னிக் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 616 இடங்கள் உள்ள நிலையில் 56 ஆயிரத்து 501 இஇடங்கள்தான் நிரம்பியுள்ளன. காலியிடங்கள் மட்டும் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 115 இடங்கள் இருக்கின்றன. பாலிடெக்னிக் கல்லூரிகளைப் போலவே பொறியியல் கல்லூரிகளிலும் பல ஆயிரம் காலியிடங்கள் இருக்கின்றன. இவற்றை முழுமையாக நிரப்ப வேண்டும். இதற்காகதான் முதல் அமைச்சர், நான் முதல்வன் திட்டத்தை அறிவித்து உயர்க்கல்வியுடன் தொழில் மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகிய மூன்று துறைகளும் இணைத்து இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வரும்காலத்தில் தேவைக்கு ஏற்ப புதிய கல்லூரிகள், புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். 16 புதிய கல்லூரிகளுக்கு புதிதாக கட்டடங்கள் கட்டுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 55 கல்லூரிகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முதல்வர் அனுமதி அளித்திருக்கிறார்.
அரசு கல்லூரிகளே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து புதிய கலைக்கல்லூரிகள் தொடங்க வேண்டும் என முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 6 புதிய கல்லூரிகள் மற்றும் நடப்பாண்டு அறிவிக்கப்பட்ட 10 புதிய கல்லூரிகள் என சேர்த்து மொத்தம் 16 புதிய கல்லூரிகள் விரைவாக கட்டி முடிக்கப்படும். பண்ருட்டி அருகே வடலூரில் புதிய அரசு கலைக்கல்லூரி துவக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அரசு கலைக்கல்லூரி அமைப்பதற்கான நிதி, தொடர் செலவினங்கள், ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இதுபோன்ற செலவினங்களால் புதிதாக ஒரு கல்லூரியை துவக்குவதற்கு வருடத்திற்கு 20 கோடி ரூபாய் செலவாகும். நிதிநிலைமை பொறுத்து மேலும் புதிய கல்லூரிகள் துவக்குவதற்கு வரும் காலங்களில் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் க.பொன்முடி பதிலளித்தார்.


பொன் ஜெயசீலன் (அதிமுக எம்எல்ஏ)
நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3 ஆயிரத்து 500 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். விலங்கியல், தாவிரவியல், வேதியியல், தமிழ் இலக்கியம் போன்ற புதிய பாடப்பிரிவுகளை உருவாக்கி தர வேண்டும்.
அமைச்சர் க.பொன்முடி: புதிய பாடப்பிரிவுகளை துவக்குவதற்கு முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார். மேலும் ஆராய்ச்சி படிப்பான பிஹெச்டியை 10 கல்லூரிகளில் துவக்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கூடலூர் கல்லூரியில் புதிய பாடப்பிரிவு மற்றும் ஆசிரியர் நியமனம் ஆகியவற்றை துவங்குவதற்கான செலவினங்களை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தே எடுத்துக் கொள்ளலாம் என கூறியிருப்பதால், அந்த கல்லூரியின் முதல்வர் இதுதொடர்பாக வேண்டுகோள் அறிக்கையை அனுப்பி வைத்தால், அந்த கல்லூரியை உள்ளடக்கிய துணைவேந்தர், கல்லூரி இயக்குனர் ஆகியோரின் பரிந்துரைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு கேள்வி பதில் நேரத்தின் போது பல்வேறு துறை ரீதியிலான கேள்விகளை சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பினர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்கள் விரிவான பதில்களை வழங்கினர்.