Sat. Nov 23rd, 2024

தெற்காசியாவில் சிறந்த மாநிலமாக தமிழகம் மேம்பட நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அபுதாபியில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசினார்.

அரசு முறைப்பயணமாக கடந்த 24 ஆம் தேதி சென்னையில் இருந்து துபாய் புறப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு 3000 கோடி ரூபாய் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், துபாய் எக்ஸ்போவில் தமிழக அரசின் அரங்குகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு வரலாற்று மிக்க நிகழ்வில் கலந்துகொண்டார். இதனைத்தொடர்ந்து நேற்றிரவு (மார்ச் 27) துபாயில் இருந்து சாலை மார்க்கமாக புறப்பட்டு அபுதாபி சென்றார்.

அரசு முறைப்பயணத்தின் நிறைவு நாளான இன்று அபுதாபியில் தொழில் அதிபர்களுடன் கலந்துரையாடல், 3000 கோடி ரூபாய் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் என பல்வேறு நிகழ்வில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கொண்டார். நிறைவாக, தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்ட அயல்நாடு வாழ் தமிழர்களின் மேம்பாட்டிற்காக தனிப்பிரிவு துவங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அபுதாயில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாசார மையத்தில்  தமிழ் சங்கம் சார்பில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ‘நம்மில் ஒருவர், நம்ம முதல்வர்’ என்ற தலைப்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு அபுதாபிவாழ் தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றினார்.  அப்போது அவர் கூறியதாவது: 

தமிழகத்தின் முதல் அமைச்சராக நான் இங்கு வந்துள்ளேன். முதல் அமைச்சர் பதவி என்று சொல்வதை விட தமிழக மக்கள் வழங்கிய பொறுப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் எங்களை முத்தமிழ் அறிஞர் கலைஞர், மக்கள் வழங்கும் பொறுப்பை பதவியாக பார்க்க கூடாது, அவர்களுக்கு பணியாற்ற வழங்கப்பட்ட பொறுப்பாகதான் பார்க்க வேண்டும் என்று கற்று தந்துள்ளார். பேரறிஞர் அண்ணாவும் மக்களிடம் செல். மக்கள் சொல்வதை கேள். மக்களோடு வாழ் என்றுதான் அரசியல் பாடத்தை கற்றுத் தந்துள்ளார். எனது துபாய் பயணத்தின் மீது அவதூறு பரப்பும் வேளையில் தமிழகத்தில் சிலர் ஈடுபட்டுள்ளனர். நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. ஆனாலும் நீங்கள் என்னை அரசியல் பேசாமல் செல்லாமல் அனுமதிக்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும். நான் துபாய்க்கு பணத்தை எடுத்து வந்ததாக இந்த பயணம் குறித்து  சிலர் அவதூறு பரப்புகின்றனர்.  நான் பணத்தை கொண்டுவரவில்லை; மக்களின் மனத்தை எடுத்து வந்துள்ளேன்.  உங்களில் ஒருவனாக நான் உள்ளேன், நம்மில் ஒருவனாக என்னை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். தமிழுக்கும், தமிழ் நலனுக்கும் எதிரானவர்களுக்கு நம்முடைய உணர்வுகள் புரியாது.

தமிழ்நாட்டை நோக்கி தமிழர்களின் மனங்களை ஈர்க்கும் பயணமாக எனது பயணம் அமைந்துள்ளது. வெளிநாட்டு பயணத்தை திசை திருப்ப வேண்டும் என சிலர் தவறான பிரசாரத்தை பரப்புகின்றனர்.  எனது ஐக்கிய அரபு அமீரகத்தின் வெற்றியை சிலரால் தாங்க முடியவில்லை.  தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்ற உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஒருபுறம் கடந்த காலம் மறுபுறம் எதிர்கால வளர்ச்சி ஆகியவற்றை கருத்தில் கொண்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இன்றிரவு அபுதாயில் இருந்து தனி விமானம் புறப்பட்டு நள்ளிரவில் சென்னை வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல் அமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டு 6000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை தமிழகத்திற்கு ஈர்த்து வந்துள்ள முதல்வரை நள்ளிரவில் வரவேற்க திமுகவினர் ஏராளமானோர் சென்னை விமானநிலைத்திற்கு திரளாக வந்துகொண்டிருக்கின்றனர்.