Mon. Nov 25th, 2024

தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் அனைத்துத் தற்காலிக ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனச் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள் சிலர் வழக்கு தாக்கல் செய்தனர். அதில், பல ஆண்டுகளாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கானோரை பணிநிரந்தரம் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கோரி இருந்தனர். அந்த மனு மீதான இருதரப்பு வாதங்கள் முடிந்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அந்த வழக்கில் தீர்ப்புக் கூறினார்.

கூட்டுறவுச் சங்கங்களில் தற்காலிகமாகப் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்குத் தொடுத்தவர்களுக்கு மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள அனைத்துக் கூட்டுறவுச் சங்கங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தீர்ப்பை 8 வாரத்தில் செயல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்உத்தரவிட்டார்.