Sat. Nov 23rd, 2024

தமிழ்நாட்டில் ஏறக்குறையாக 75 சதவீதம் பேருக்கு சொந்த வீடு உள்ளது என்றும் நமது மாநிலம் ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்துக்கு நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று பதிலளித்து உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு பல்வேறு திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகம் வளர்ந்த மாநிலம் என்பதையே பல்வேறு ஆராய்ச்சிகள் தெளிவுப்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கைபேசி வைத்துள்ளதாகவும், 75 சதவீதத்துக்கு மேற்பட்டோருக்கு தமிழகத்தில் சொந்த வீடு உள்ளதாக ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. ஊரகப் பகுதியில் சொந்த வீடு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், நகர்ப்புற பகுதிகளில் குறைவாகவும் இருக்கிறது. சொந்த வீடு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் 15 சதவீதிம் பேர்தான் அரசாங்கம் வழங்கிய குடியிருப்புகளில் உள்ளனர். 66% சதவீதம் பேர் இருசக்கர வாகனம் வைத்திருப்பதோடு, 50 % வீடுகளில் குளிர்சாதன பெட்டி உள்ளதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளதையும் நிதியமைச்சர் சுட்டிக்காட்டி பேசினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஒரு மாவட்டத்திற்கு இன்னொரு மாவட்டம் தமிழகத்திற்குள்ளேயே ஏற்றத்தாழ்வுடன் இருப்பதுதான் அரசுக்கு மிகப்பெரிய கவலையாக உள்ளது. வேலைவாய்ப்பு விவகாரத்தில் மட்டும் 52% சதவீதம் அளவுக்கு வேலை தேடும் இடங்களில் மக்கள் இல்லை. ஊரகம் மற்றும் நகர்ப்புறங்களில் ஆதரவற்ற நிலையில் முதியோர்கள் 15% சதவீதமாக உள்ள நிலையில், மருத்துவ உதவித்தொகை, மனம் விட்டு பேசுவதற்கு வாய்ப்பு இல்லாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு தேவைகள் உள்ளன. சென்னையில் கிடைக்கும் வருவாயை விட தருமபுரி மாவட்டத்தில் உள்ள முதியவர்களுக்கு மாதந்தோறும் கிடைக்கும் வருவாய் குறைவாக இருப்பதும் கவலைக்குரிய அம்சமாகும். மாவட்டம் வாரியாக முதியோருக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகளும் குறைக்கப்பட வேண்டும்.

இப்படி அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்வதற்கு தேவை இருப்பதால், அதை உள்வாங்கிய நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது.

இவ்வாறு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து பேசினார்.