பொன்னேரி ஆரணி ஆற்றில் ஆற்று மணலை சுரண்டுவதற்காக மணல் கொள்ளையர்கள் அமைத்த சாலை வழியாக இரவு நேரங்களில் கனிம வளங்கள் கொள்ளை போவதற்கு சட்டவிரோதமாக துணைபோகும் அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஆரணி ஆற்றின் மாண்பை காக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
ஆரணி ஆறு 114.8 கி.மீ.நீளம்…
திருவள்ளூர் மாவட்டத்தின் நீர் ஆதாரமாக விளங்கும் ஆரணி ஆறு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கரணித் மலை பகுதியிலிருந்து துவங்கி பிச்சாட்டூர் அணையின் முனைப்பை கடந்து தமிழக பகுதிகளான ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக இலஷ்மிபுரம் அணைக்கட்டை அடைந்து அதன் வழியாக பழவேற்காடு பகுதியில் வங்கக்கடல் சென்று சேருகிறது. ஆற்றின் மொத்த நீளம்,114.8 கி.மீ ஆகும்.
12 டிஎம்சி தண்ணீர் வீண்?
ஆற்றின் கரைப்பகுதியில் 4,500 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது லட்சுமிபுரம், பாடலீஸ்வரம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணைகளில் தலா 5,000 கன அடி தண்ணீர் மட்டுமே சேகரிக்க முடியும், இந்த ஆற்றில் போதிய தடுப்பணைகள் இல்லாததால் ஆண்டுதோறும் பெய்யும் மழையின் அளவை பொருத்து 7 முதல் 12 டி எம் சி தண்ணீர் வரை வீணாகச் சென்று கடலில் கலக்கிறது இந்த நிலையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தொடர் மணல் கொள்ளை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து பூமியில் உப்புநீர் அதிகரித்து வருவதால் மூன்று போகம் விளைந்த நிலத்தில் தற்போது ஒரு போகம் பயிர் செய்வதே கடினமாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துவருகின்றனர்.
மணல் கொள்ளையர் சட்ட விரோதம்…
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் ஆரணி ஆற்றில் எஞ்சியுள்ள ஆற்று மணலை யும், சுரண்டுவதற்காக மணல் கொள்ளையர்கள் பொன்னேரி அரசு பேருந்து பணிமனை எதிரே சுடுகாட்டு செல்லும் பாதையில் ஆரணி ஆற்றின் குறுக்கே பெரிய பாறைகளை கொட்டி அதன்மீது மணலை பரப்பி சமப்படுத்தி 10 அடி உயரத்திற்கு மணல் கடத்தல் லாரிகள் வந்து செல்வதற்காக சட்டவிரோதமாக சாலையை அமைத்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயிகள் ஏற்கனவே காலநிலை மாற்றத்தால் காலம் மாறி திடீர் திடீரென கன மழை பெய்து வரும் நிலையில் அதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது நீரோட்டம் தடைபட்டு ஆற்றின் கரை உடைந்து பல கிராமங்கள் நீரில் முழுகும் ஆபத்து உள்ளது.
விவசாயிகள் வாக்குவாதம்
இதுகுறித்தும், மணல் கொள்ளையர்கள் அமைத்த சாலையை அகற்றக் கோரியும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக நீர்நிலையை ஆக்கிரமித்து சாலை அமைத்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள், மற்றும் வட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சியரை பலமுறை புகார் தெரிவித்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மணல் கொள்ளையர்களுக்கு துணைபோவதாக குற்றம்சாட்டி கடந்த ( மார்ச்11 ம் தேதி ) அன்று பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இதற்கு பதில் அளித்து பேசிய பொதுப்பணித்துறை அதிகாரியான பாலு ஆற்றின் குறுக்கே சாலை அமைத்தது யார் ? என்று தனக்குத் தெரியாது என்றும் இரண்டு நாட்களில் அந்த சாலையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து இருந்தார். இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் மணல் கொள்ளையர்கள் ஏழை சிறு விவசாயிகளுக்கு பணத்தாசை காட்டி, குறைந்த தொகையைக் கொடுத்துவிட்டு அவர்களது நிலங்களை தற்காலிகமாக குத்தகைக்கு எடுத்து விளைநிலங்களில் ஜே சி பி எந்திரம் மூலம் 40 அடி ஆழத்திற்கு குழிதோண்டி அதில் உள்ள மணலை இரவு நேரங்களில் லாரிகள் மூலம் கொள்ளையடித்துச் சென்று கள்ள சந்தையில் ஒரு லோடு மணல் 80,000 முதல் 1, லட்ச ரூபாய் வரை விற்பனை செய்து வருவதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கனிமக் கொள்ளை
இந்த சட்ட விரோத கனிமக் கொள்ளை கும்பலுக்கு இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைப்பதால் அதில் ஒரு சிறு தொகையை கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்துவிட்டு தங்குதடையின்றி நமக்கு சோறு போடும் நீலத்தை சேதப்படுத்தி வருகின்றனர். இயற்கை வளமான ஆரணி ஆற்றையும், வேளாண் தொழிலை பாதுகாக்கவும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு விளைநிலங்களில் நடைபெறும் மணல் கொள்ளையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.