Sun. Nov 24th, 2024

அ.தி.மு.க.வை தோற்றுவித்த மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு, ஏறத்தாழ 30 ஆண்டுகள் அ.தி.மு.க வின் கட்டு குலையாமல் காப்பாற்றி வந்தவர் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா. 2016 ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு நெருக்கடி வந்தபோது, மிகவும் நெருக்கடியான காலத்தில் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, கடந்த 4 ஆண்டுகளாக எண்ணற்ற நெருக்கடிகளுக்கு மத்தியில் அ.தி.மு.க. ஆட்சியை வழிநடத்தி வந்திருக்கிறார், வருகிறார். அவர் மீண்டும் முதல்வராக பதவியேற்கக் விட மாட்டோம் என கங்கணம் கட்டிக் கொண்டு ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவும், அவரது உறவினர் டி.டி.வி.தினகரனும் ஒற்றைக் குறிக்கோளோடு அரசியல் செய்து வருவதைக் கண்டு, அவர்களால் அடையாளப்படுத்தப்பட்ட, வளர்க்கப்பட்ட, அ.தி.மு.க. முன்னணி தலைவர்களே மனம் வெதும்பி குமறி வருகிறார்கள்.

அதுவும் களநிலைக்கு மாறாக இருவரின் சதிராட்டங்களும் இருப்பதாக கொந்தளிக்கும் அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர்கள், இருவரின் சதிவேலைகளுக்கு தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் துணை போவதைக் கண்டு ஆத்திரமடைந்து, அதே ஆவேசத்துடன் நம்மிடமும் பேசினார்கள். அவர்களின் ஆதங்கத்தை சூடு குறையாமல் அப்படியே இங்கு பரிமாறுகிறோம்.

“சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி வெளியே வருகிறார் சசிகலா என்பதை அறிந்திருந்தும் இரண்டு தவறுகளைச் செய்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஒன்று ஜனவரி மாதம் டெல்லிச் சென்றிருந்த இ.பி.எஸ்., சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் இணைத்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு சாதூர்யமாக பதில் சொல்லியிருக்கலாம். அதைவிட்டுவிட்டு, 100 சதவிகிதம் வாய்ப்பு இல்லை என்று சொன்னது முதல் தவறு. அந்த நேரத்தில் அவர் மனதில் இருந்து ஆணவம், அ.தி.மு.க.வில் இன்றைக்கும் இருக்கும் சசிகலாவின் விசுவாசிகளின் மனதை புண்படுத்திவிட்டது.

இரண்டாவது தவறு, சிறையில் இருந்து விடுதலையாகி வரும் சசிகலா, நேராக எங்கே செல்வார் என்பது எல்லோருக்கும் தெரியும். அம்மா சமாதிக்குதான் நேரடியாக சசிகலா செல்வார். அது நியாயமானதும் கூட. ஏனெனில் 2017 ல் ஆட்சிப் பொறுப்பை ஏற்கிற சூழ்நிலையில் சிறைக்கு அனுப்பப்பட்டவர் சசிகலா. மத்திய பா.ஜ.க. அரசின் சதித்திட்டத்தால், அவரது எதிர்காலமே கேள்விக்குறியான நேரம் அது. அதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான், அம்மா சமாதிக்கு சென்றபோது, ஆவேசத்தை வெளிப்படுத்தும் விதமாக அம்மா சமாதியில் அடித்து சத்தியம் செய்தார் சசிகலா. அவருக்கு ஏற்பட்ட வலியும், வேதனையும் கடந்த நான்காண்டு சிறை வாழ்க்கையில் குறைந்திருக்கலாம், அல்லது அதிகப்படுத்தியிருக்கலாம்.

சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலா, அவரது விருப்பத்திற்கு ஏற்ப என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும் என்று எடப்பாடி பழனிசாமி அமைதியாக இருந்திருக்க வேண்டும். இன்றைய அ.தி.மு.க. அரசில், கட்சியில், சசிகலாவுக்கு நன்றிக்கு உரியவர்களாக இருக்க வேண்டியது எடப்பாடி பழனிசாமி தானே தவிர, ஓ.பன்னீர்செல்வமோ மற்றவர்களோ கிடையாது. இந்த இரண்டு தவறுகளை செய்யாமல் இருந்திருந்தால், சசிகலாவை விட, டி.டி.வி.தினகரனை விட, ஒட்டுமொத்த அ.தி.மு.க.வினர் மனதிலும் எடப்பாடி பழனிசாமி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார். 4 ஆண்டு காலம் மிகுந்த ராஜதந்திரத்துடன் ஆட்சியையும், அ.தி.மு.க.வையும் காப்பாற்றியவருக்கு, சசிகலா விவகாரத்தில் செய்த இரண்டு வரலாற்றுப் பிழைகளால், இப்போது அவரது தலையையே விலை கொடுக்க வேண்டியிருப்பதை நினைத்துதான் பரிதாப படுகிறோம்” என்று நொந்து கொண்டார் அந்த அ.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர்.

சிறிருநேர ஆசுவாசத்திற்குப் பிறகு மீண்டும் அவர் பேசினார். “தேர்தலையொட்டி, தமிழ்நாடு முழுவதும் சுற்றி வருகிறோம். மக்களிடம் இன்றைக்கும் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்கு இருக்கிறது. குறிப்பாக இலைக்கு வாக்களித்த கிராம மக்கள், மீண்டும் இரட்டை இலைக்கேதான் வாக்களிப்போம் என்று உரிமையோடு உரக்கவே சொல்கிறார்கள். அவர்களிடம் எந்த தயக்கத்தையும் பார்க்க முடியவில்லை. அதேபோல, தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் எடப்பாடி என்ற பெயர் பொதுமக்களின் மனதில் ஆமாகவே பதித்து இருப்பதையும் பார்க்க முடிகிறது. கொங்கு மண்டலத்தில் அவரது பெயர் எப்படி பரவியிருக்கிறதோ, அதற்கு இணையாகவே வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களிலும் அனைத்து தரப்பினரிடமும் பரவியிருக்கிறது. இப்படிபட்ட நேரத்தில், சசிகலாவை கிள்ளுக்கீரையாக நினைத்து எடப்பாடி செயல்படுவதுதான் தென்மாவட்டங்களில் மட்டும் அ.தி.மு.க.வினரிடையே அதிகமான சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதை காண முடிகிறது.

சசிகலாவை சீண்டாமல் இருந்து, சில பல நிபந்தனைககளுடன் அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வோடு இணைக்க முன்வந்திருந்தால், எடப்பாடி பழனிசாமி ஆகச் சிறந்த ராஜதந்திரியாக விஸ்வரூபம் எடுத்திருப்பார். சசிகலாவும் சாந்தம் அடைந்திருப்பார். துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் விருப்பமும் நிறைவேறியிருக்கும். பெரிய அண்ணன் போல செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசும், எடப்பாடி பழனிசாமியை மேலும் உற்சாகப்படுத்தியிருக்கும். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, தன்னை அம்மாவை விட (ஜெயலலிதா) மிஞ்சிய தலைவராக நினைத்துக் கொண்டார். இதன் விளைவு, வரும் தேர்தலில் எதிரொலிக்கும்.

கிராமங்களைத் தவிர்த்து நகரப் பகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு எதிரான அதிருப்தி அலை அதிகமாக வீசிக் கொண்டிருக்கிறது. அங்கெல்லாம் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகளே, அமைச்சர்கள் மீதும், எம்.எல்.ஏ.க்கள் மீதும் கடும் அதிருப்தியிலேதான் உள்ளனர். மீண்டும் அதே அமைச்சர்கள், அதே எம்.எல்.ஏ.க்கள் களம் கண்டால், நிச்சயம் அவர்களுக்கு ஓட்டுப் போட அவர்கள் முன்வர மாட்டார்கள். மனம் வெதும்பி போகும் அவர்கள், அ.ம.மு.க.வுக்குதான் ஓட்டுப் போடுவார்கள். இப்படி ஓட்டுப் போடும் போது ஒரு தொகுதிக்கு குறைந்த பட்சம் 5 ஆயிரம் வாக்குகள் டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க.வுக்கு கிடைக்கும். இந்த 5 ஆயிரம் வாக்குகளும் அ.தி.மு.க. போட்டியிடும் அத்தனை தொகுதிகளிலும் பதிவாகி, அ.தி.மு.க. வெற்றியை பாதிக்கும். அப்போது ஆட்சிக்கு மீண்டும் வரும் வாய்ப்பை அ.தி.மு.க. இழக்கும்.

அந்த நேரத்தில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பொங்கும் கோபத்தால், பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் அப்படியே கூண்டோடு சசிகலா பக்கம் தாவுவார்கள். இப்படிபட்ட நேரம் நிச்சயம் உருவாகும் என்பதை யூகித்துதான் சசிகலா மௌனமாக இருக்கிறார். எடப்பாடியோடு நேரிடையாக மோதி பார்க்க வேண்டும் என்ற எண்ணமே சசிகலாவுக்கு இப்போது இல்லை. வரும் தேர்தலிலும் அவர் போட்டியிடப் போவதில்லை. அ.தி.மு.க.வுக்கும், இரட்டை இலைச் சின்னத்திற்கும் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கும் அவர், ஒருபோதும் வேறு சின்னத்தில், அதுவும் தான் சந்திக்கிற முதல் தேர்தலில் போட்டியிடுகிற அளவுக்கு சசிகலா ஒன்றும் முட்டாள் இல்லை.

சசிகலாவிற்கு இருக்கும் அதே சிந்தனைதான் டி.டி.வி.தினகரனுக்கும் இருக்கிறது. அவரும், அவரது கட்சியைச் சேர்ந்தவர்களும் வரும் தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவார்கள். அவர்களால், 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, அதன் கூட்டணி கட்சிகளுக்கும் அழிவை ஏற்படுத்துவார்கள். ஊர், ஊராகச் சுற்றி வரும் நாங்கள், மக்களின் நாடித் துடிப்பை, அ.தி.மு.க. கட்சிக்காரனின் ஆதங்கத்தை அறிந்து கவலையில் ஆழ்த்திருக்கும் போது, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமும் துடிக்க வேண்டாமா? உண்மையான அ..தி.மு.க ரத்தம் ஓடினால், அப்படிதானே இருக்க வேண்டும். ஆனால், அவருக்கும் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவது பிடிக்கவில்லை. அதனால்தான், கள்ள மௌனம் சாதித்துக் கொண்டிருக்கிறார்.

ஊர், உலகமே தேர்தல் திருவிழாவில் களைகட்டிக் கொண்டிருக்கிறது..கட்சிதான் குடும்பம் என்று நாங்கள் இருந்தாலும் வயிற்று பிழைப்புக்காக ஊர் ஊராக இரட்டை இலைக்கு வாங்கு கேட்கிறோம்.. எங்களை விடுங்கள் சார், நடிகை விந்தியா ஊர் ஊராக சென்று தி.மு.க.வை கிழித்து தொங்கப் போடுகிறார். அவர் என்ன வயிற்றுப் பிழைப்புக்காகவா பேசுகிறார்? அம்மா மறைவுக்குப் பிறகு அவர் அமைதியாகிவிட்டார். இப்போதைய தலைமை அவரை வலிந்து போய் வற்புறுத்தி அழைத்தது.அதன் காரணமாகவும், அம்மா மீதான பக்தி காரணமாகவும் இன்றைக்கு ஊர் ஊராக இரட்டை இலைக்கு வாக்கு கேட்கிறார்..அம்மா மீதும் அ.தி.மு.க மீதும் இன்றைக்கும் அவருக்கு பக்தி இருக்கிறது..அம்மா உயிரோடு இருந்த காலத்திலேயே நடிகை விந்தியா, ஒரு கவுன்சிலர் பதவிக்குக் கூட ஆசைப்பட்டவர் கிடையாது.

ஆனால் அம்மாவால் அடையாளம் காட்டப்பட்டு மூன்று முறை முதல்வரான ஓ.பி.எஸ்., அமைதியாக இருக்கிறார்.. அவருக்கு நன்றாக தெரியும்.. இப்போது இரட்டை இலைக்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தால் இ.பி.எஸ்..முதல்வராகிவிடுவார் என்று.. அதனால் கள்ள மவுனம் சாதிக்கிறார். அவரது வழியில், அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கே.சி.வீரமணி உள்ளிட்ட பல அமைச்சர்கள், சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆதரவு மனநிலையில்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் சார்ந்த தேவர் சமுதாய மக்கள், அ.தி.மு.க.வுக்கு சசிகலாதான் தலைமை ஏற்க வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக ஒற்றைக் காலில் நிற்கிறாகள் என்ற பயம்தான் ஆட்டிப் படைக்கிறது. ஆனால், பச்சோந்தி போல அவ்வப்போது இடம் மாறும் அமைச்சர்களைவிட, எம்.எல்.ஏ.க்களை விட, தலைமைக் கழக நிர்வாகிகளை விட, அடிமட்ட தொண்டன் இன்றைக்கும் எடப்பாடி மீது விசுவாசமாகதான் இருக்கிறார். இந்த நான்காண்டு காலத்தில் அ.தி.மு.க.வின் செல்வாக்கு சரியாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி என்றுதான், தென் மாவட்டங்களில் உள்ள தேவர் சமுதாய அ.தி.மு.க. நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் எங்களிடம் பேசும் தெரிவிக்கிறார்கள்.

அதே சமயம், சின்னம்மாவை (சசிகலா) புறக்கணிக்கிறார்களே என்ற ஆதங்கமும் அவர்களிடம் மேலோங்கி இருக்கிறது. இந்த மனநிலையைதான் சசகிலாவும், டி.டி.வி.தினகரனும் அறுவடை செய்ய காத்திருக்கிறார்கள். அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் துணை போகிறார் என்பதுதான் எங்களுக்கு எல்லாம் மிகுந்த வலியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த நான்கு பேரும் எல்லா வற்றையும் மறந்து ஒன்றிணையாமல், அவரவர் சுயநலத்தினை மட்டுமே பார்த்தால், தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க உடைவதை அந்த ஆண்டவனாலும் தடுக்க முடியாது. மே மாதத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கட்டிக் காப்பாற்றிய அ.தி.மு.க.வாக ஒரு குடையின் கீழ் இருக்காது. சசிகலா அ.தி.மு.க., எடப்பாடி அ.தி.மு.க., பா.ஜ.க அ.தி.மு.க. என பல பிளவுகளாக சிதறிப் போகும். இப்படிபட் நிலை உருவானால், ஓ.பி.எஸ்.ஸின் கனவும் நிறைவேறாது. அவரது மகனை மத்திய அமைச்சராக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கும் சம்மட்டி அடி கொடுத்து விடுவார் பிரதமர் மோடி. ஓ.பி.எஸ்.ஸும், அவரது குடும்பமும் கூண்டோடு காவி வேட்டிதான் கட்டிக் கொள்ள வேண்டும். இது சத்தியம். நீங்கள் வேண்டுமானால் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று ஆவேசம் அடங்காமல் பேசினார் தலைமைக் கழக பேச்சாளர்.

கடைத் தேங்காயா? அ.தி.மு.க……