தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்….
திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், திரைப்பட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். திமுக முன்னணி தலைவர்களால் சின்னவர் என்று பாசமாக அழைக்கப்படும் உதயநிதி ஸ்டாலின், வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாகவே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுவிடுவார் என்று வெளிப்படையாகவே மகிழ்ச்சி கொப்பளிக்க பேசி வருகிறார்கள், திமுக இளைஞரணி முன்னணி நிர்வாகிகள். ஆனால், அவரது ரசிகர்கள் பல்லாயிரக்கணக்கானோர், அவரின் அரசியல் பயணம் உச்சத்தை நோக்கி போய் கொண்டிருப்பதை எண்ணி, மிகுந்த சோகத்தில் இருப்பதாக நல்லரசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பின்னணி என்ன? தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் மனம் திறந்து பேசினார்கள்.
உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ என்ற அங்கீகாரத்தை அடைவதற்கு முன்பாகவும், திமுக மாநில இளைஞரணி என்ற மாபெரும் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாகவும், அவரது திரைப்படங்களைப் பார்த்து அவரது ரசிகர்களாக ஆனோம். அதுவும் அதிமுக ஆட்சிக்காலத்தில் அவர் திரையுலகில் அறிமுகமானார். அப்போதைய ஆளும்கட்சியின் எதிர்ப்பை சம்பாதிப்போம் என்ற போதும் கூட, அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் அவரது திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான போது, போஸ்டர் அடித்து, கட் அவுட்டுகளுக்கு ஆளுயர மாலைகள் அணிவித்து மேள தாளம் முழங்க திருவிழா போல கொண்டாடினோம். அவரது ரசிகர்களில் பெரும்பான்மையானோர் 25 வயதிற்குட்பட்டவர்களாகதான் இருக்கிறோம். இளம்வயது ஹீரோக்களில் முன்னணியில் இருப்பவர்களுக்கு இணையாக உதயநிதி ஸ்டாலினுக்கும் ரசிகர் பட்டாளம் இருக்க வேண்டும் என்பதற்காக, கடுமையாக உழைத்து வருகிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் உதயநிதி ரசிகர் மன்றங்கள், குக்கிராமங்களிலும் கூட உதயமானது. எதிர்காலத்தில் அரசியலுக்கு வருவார், அவரது தந்தை முதல்வர் ஆவார் என்று எந்தவிமான கனவுகளும் எழாத காலத்திலேயே பல்லாயிரக்கணக்கானோர் உதயநிதி ஸ்டாலினின் ரசிகர் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமிதம் அடைந்தோம். பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் நடித்த முதல் படமான ஆதவனில் இருந்து அவரது ரசிகராக இருக்கிறோம். அவர் நடிக்கும் படங்களுக்கு மட்டுமின்றி அவர் தயாரிக்கும் படங்களையும் கூட குடும்பத்தினரோடு, நண்பர்களோடு சென்று பலமுறை பார்த்து ரசித்திருக்கிறோம்.
இப்படி அவரது செல்வாக்கு உயர வேண்டும் என்பதற்காக கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக உழைத்துக் கொண்டிருக்கும் உயிருக்கு உயிரான ரசிகர்களை, உள்ளாட்சித் தேர்தலின் போது துளியும் கண்டு கொள்ளவில்லை என்பதுதான் எண்ணற்ற ரசிகர்களுக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்திவிட்டது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் இருந்து அரசியலில் தீவிர கவனம் செலுத்தி வரும் உதயநிதி ஸ்டாலின், 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், திமுகவின் முன்னணி தலைவர்களின் வாரிசுகள் எம்பி வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்காக, அவரது தந்தையான தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கடுமையாக போராடி, அவருக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுத் தந்தார் என்பதை அறிந்து மகிழ்ந்தோம்.
அதேபோல, திமுக மாநில இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டபோதும், திமுக முன்னணி நிர்வாகிகளின் வாரிசுகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் வகையில், இளைஞரணியில் மாநில, மாவட்ட அளவில் பொறுப்புகளை கொடுத்து, நட்பு வட்டத்திற்கும், முன்னணி நிர்வாகிகளின் வாரிசுகளின் தியாகத்திற்கும் மிகப்பெரிய மரியாதை கொடுத்துள்ளார், உதயநிதி ஸ்டாலின்.
அந்த நடவடிக்கைகளை எல்லாம் பார்த்து உள்ளுக்குள்ளேயே உற்சாகமான ரசிகர்கள், தன்னுடைய விசுவாசிகளை ஒருபோதும் கைவிட மாட்டார் உதயநிதி என்பதால், அவரது ரசிகர்களாக காலரை தூக்கி விட்டுக் கொண்டு, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக கடுமையாக உழைத்தோம்.
திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்ற காலத்திலேயே, உதயநிதியும் அமைச்சராக பதவியேற்பார் என்று ஆவலாக இருந்தோம். ஆனால், அவர் அமைச்சராக பதவியேற்காமல், திரைத்துறைக்கே முக்கியத்துவம் கொடுத்ததால், எங்களுக்கு எல்லாம் இரட்டிப்பு மகிழ்ச்சிதான். ஆனால், அந்த தருணங்கள், குறுகிய காலத்திலேயே குன்றிப் போனதுதான் மிகுந்த துயரத்தை தந்துள்ளது என்று கூறி அமைதியானார்கள் உதயநிதியின் ரசிகர்கள்.
சில விநாடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பேசினார்கள். அவர்களின் குரல்களில் விரக்தி இழையோடியது.
இளைஞரணியில் திமுக குடும்பத்து வாரிசுகளுக்கு பதவிகள், சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது நட்பு வட்டத்திற்கு எம்எல்ஏ பதவி என திமுக தலைமையோடு சண்டைப் போட்டு பதவிகளை வாங்கிக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின், கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது, அவரது ரசிகர்கள் வட்டாரத்தை ஒட்டுமொத்தமாக உதறிவிட்டதுதான் பெரும்பான்மையான ரசிகர்களுக்கு மிகுந்த வருத்ததை ஏற்படுத்திவிட்டது.
மாநகராட்சி, நகராட்சி போன்ற அமைப்புகளின் கவுன்சிலர்கள் பதவிக்கு ஆசைப்படாத ரசிகர்கள், பேரூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் பதவிக்கு போட்டியிட ஆர்வமாக தயாரானார்கள். அதற்காக ஒன்றிய செயலாளர் முதல் மாவட்டச் செயலாளர்கள் வரை அணுகி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டபோது எங்களை எல்லாம் ஒரு பொருட்டாகவே அவர்கள் மதிக்கவில்லை. அதனால் மனம் நொந்துபோன ரசிகர்கள், இளைஞரணி நிர்வாகிகளின் பரிந்துரையை நாடி சென்ற போதும் ஏமாற்றமே மிஞ்சியது.
இத்தனைக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடிகர் விஜய் ரசிகர்களுக்கு தலைமையில் இருந்தே பச்சைக்கொடி காட்டப்பட்டது. அவர்களும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு பல இடங்களில் நின்று வெற்றிப் பெற்றுள்ளார்கள். அரசியல் கட்சியே ஆரம்பிக்காத நடிகர் விஜயே தனது ரசிகர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகப் பொறுப்பை ஏற்க வேண்டும் என ஆர்வம் காட்டியபோது, முதல்வரின் புதல்வரான உதயநிதி ஸ்டாலின், தனது ரசிகர்கள் உள்ளாட்சி அமைப்புகளில் குறைந்த எண்ணிக்கையிலாவது பொறுப்பு ஏற்க வேண்டும் என்ற சிந்தனை இல்லாமல் ஒதுக்கி கொண்டதுதான் மேற்கு மற்றும் தென் மாவட்ட ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசியலில் அவர் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாக அவரை சந்திப்பது எளிதாக இருந்தது. ஆனால், திமுக இளைஞரணி செயலாளராகவும், எம்எல்ஏவாகவும் அவர் பதவியேற்ற பிறகு அவரை சந்திப்பது என்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய போராட்டமாக மாறியிருக்கிறது.
உள்ளாட்சித் தேர்தலில் விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல, உள்ளூரில் செல்வாக்கு மிக்கவர்கள் எல்லோரும் சுயேட்சையாக போட்டியிட்டு கவுன்சிலராக ஆகியிருப்பதைப் பார்த்து, உதயநிதி ரசிகர்களான எங்களுக்கும் அரசியல் ஆசை துளிர்விட்டுவிட்டது. எங்களைப் போன்றவர்கள் ரசிகர் என்ற அந்தஸ்தோடு நின்று கொண்டாலும் கூட கொஞ்சம் வசதி படைத்த ரசிகர்கள், அரசியலில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இருப்பதால், எதிர்காலத்தில் எப்படியும் அரசியல் கட்சி துவங்கிவிடுவார் நடிகர் விஜய் என்று உறுதியாக நம்புவதால், அவரது ரசிகர்களாக அடையாளம் காட்டி கொள்ள துடிக்கிறார்கள்.
துடிப்புமிக்க உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தை மாவட்ட அளவிலான நிர்வாகிகள் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறோம். படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து மனம் விட்டு பேச நேரம் கிடைக்கும் போது, விஜய் ரசிகர் மன்றத்திற்கு தாவ துடிக்கும் அவரது ரசிகர்களின் நிலையை விரிவாக எடுத்துகூற ஆலோசனை நடத்தி கொண்டிருக்கிறோம் என்று ஒரே மூச்சாக தங்கள் மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்டினார்கள் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற முன்னணி நிர்வாகிகள்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழியில் ரசிகர்களை சிந்தாமல் சிதறாமல் தக்க வைத்துக் கொள்வாரா உதயநிதி ஸ்டாலின்?