புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்கள் பதவி விலகிவிட்டனர். மேலும், இரண்டு எம்.எல்.ஏ.க்களும் பதவி விலகியுள்ளனர். இதனால், காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாக பா.ஜ.க. என்.ஆர்.காங்கிரஸ்,அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று முன்தினம் துணை நிலை ஆளுநரின் செயலாளரிடம் மனு கொடுத்தனர்
முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு, பெரும்பான்மையை சட்டப்பேரவையில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
புதுச்சேரியில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்ததால், கூடுதல் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்ட ஆந்திர ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று காலை பதவியேற்றார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டத்திற்குட்பட்டு செயல்படுவேன் என்று கூறினார். இந்நிலையில் சில மணிநேரங்கள் கடந்த நிலையிலேயே, புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிப்.22ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சட்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமிக்கு ஆளுநர் பிறப்பித்த உத்தரவில் கெடு விதித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பை வீடியோ பதிவு செய்யவும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், ஆளும் காங்கிரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஆளுநர் கடித விவரம்….
காங்கிரஸ் 10, தி.மு.க. 3 என மொத்தம் 13 பேரை கொண்டுள்ள முதல்வர் நாராயணசாமி அரசுக்கு, சுயேட்டை எம்.எல்.ஏ., ஒருவரின் ஆதரவோடு 14 பேர் உள்ளனர். இதே எண்ணிக்கையில், பா.ஜ.க., அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களும் உள்ளனர். இரண்டு தரப்பிலும் சமபலத்தில் உள்ள நிலையில், காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை சுயேட்டை எம்.எல்.ஏ., திரும்ப பெற்றால், முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதி என்கிறார்கள் புதுச்சேரியில் உள்ள மூத்த ஊடகவியலாளர்கள்.
கே.எஸ்.அழகிரி கண்டனம்.
இதனிடையே, ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உத்தரவு தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க ஆளுநர் மூலம் முயற்சி செய்கிறது மத்திய அரசு என குற்றம் சாட்டியுள்ளார்.