Sun. Nov 24th, 2024

1991 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி சென்னை வந்தார். ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த போது, மனித வெடிகுண்டால் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இலங்கையைச் சேர்ந்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். சென்னையைச் சேர்ந்த பேரறிவாளனுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

ராஜிவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 26 பேருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த தூக்குத் தண்டனை உத்தரவை நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய நான்கு பேரை தவிர்த்து 19 பேரை தண்டனை காலம் நிறைவடைந்ததாக கூறி உச்சநீதிமன்றம் விடுதலை செய்ய உத்தரவிட்டது. மேலும், ராபர்ட், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய மூன்று பேருக்கு எதிரான தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக மாற்றியும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் உத்தரவிட்டது.

2000 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் உத்தரவின் பேரில், நளினி மீதான தூக்குத்தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் தங்கள் மீதான தூக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். குடியரசுத் தலைவர்களுக்கும் கருணை மனுக்களை அனுப்பினர்.

2000 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான போராட்டத்தில் உச்சநீதிமன்றத்தின் மூலம் பேரறிவாளன் உள்ளிட்ட 3 பேருக்கும் நியாயம் கிடைத்தது. மூவரின் கருணை மனுக்களையும் எந்தவிதமான காரணமும் இன்றி நிலுவையில் வைத்திருந்ததால், மூவரின் மீதான மரணத்தண்டனையை ரத்து செய்து, அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு ரத்து செய்தது. மேலும் 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவு எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என அவரது தாய் அற்புதம்மாள் உள்பட தமிழ் தேசிய வாதிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

இதனிடையே உடல் நலம் பாதிக்கப்பட்ட பேரறிவாளனுக்கு மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக, பரோலில் விடுவிக்கப்பட வேண்டும் என அவரது தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனையேற்று, தமிழக அரசு இதுவரை 8 முறை அவருக்கு பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என பேரறிவாளன் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த வாரம் பேரறிவாளனை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க உத்தரவிட்டது.

இதனையடுத்து, பேரறிவாளன் இன்று ஜாமீனில் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அவரைக் கண்டதும் நெகிழ்ச்சியடைந்த அவரது தாயார், தமிழ் தேசியவாதிகள்,வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர் பேரறிவாளனை ஆரத்தழுவி வரவேற்றனர்.

முழுமையான விடுதலைக்கான போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள்; அற்புதம்மாள் உருக்கமான வேண்டுகோள்….