தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்விக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு விலக்கு மசோதாவை,குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழக ஆளுநர் என்.ரவி உடனடியாக பதவி விலக வேண்டும் என மக்களவை திமுக தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தினார்.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அரசின் நிதி நிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தொடரில், ஆளுநர் என்.ரவியின் தன்னிச்சையான போக்கு குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து , திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு பேசினார். அப்போது அவர், தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகளின் ஒப்புதலோடு ஒருமித்த உணர்வோடு நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் தமிழக ஆளுநர் என்.ரவி தேவையில்லாமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
இதே போன்று மேலும் 6 மசோதாக்களையும் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் என்.ரவி காலம் தாழ்த்துகிறார். இந்தியாவில் காட்டாட்சியாக நடக்கிறது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் என். ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும், இல்லையெனில் அவராக பதவி விலக வேண்டும்.
இவ்வாறு டி.ஆர்.பாலு எம்பி வலியுறுத்தினார்.