Sun. Nov 24th, 2024

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் இன்று காலை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அந்த அலுவலகத்தில் துணை ஆணையராக இருந்த நடராஜன் மீது அவரது துறையைச் சேர்ந்த கீழ்நிலை அலுவலர்கள் பல்வேறு புகார்களை லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

குறிப்பாக கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்கு ஒவ்வொரு அலுவலரிடம் இருந்து தலா ரூ. 5 லட்சம் வீதம் லஞ்சம் கொடுத்தால்தான் பதவி உயர்வு வழங்கும் உத்தரவில் கையெழுத்திடுவேன் என நடராஜன் வற்புறுத்தி வருவதாக லஞ்ச ஒழிப்புபோலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இன்று காலை மெரினா கடற்கரையில் உள்ள எழிலக வளாகத்தில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென்று சென்று துணை ஆணையர் நடராஜன் அலுவலக அறை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தினர். பலமணிநேரம் நீடித்த இந்த சோதனையின் முடிவில் நடராஜன் அறையில் இருந்த 35 லட்சம் ரூபாய் அளவுக்கு லஞ்சப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம் செல்லும் வழியில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் துணை ஆணையர் அந்தஸ்திலான அதிகாரியின் அலுவலக அறைக்குள்ளே இருந்தே கட்டு கட்டாக 35 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த அரசு அதிகாரிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து, துணை ஆணையர் நடராஜனுக்கு சொந்தமான அவரது வீடு மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் சோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளையும், அவரது அலுவலக அறையில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.