சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு விசாரணை விறுவிறு….
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அப்போது, சிறையில் உல்லாநமான இருப்பதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுப்பதற்காக சிறை அதிகாரிகள் சிலருக்கு ரூபாய் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக புகார் எழுந்தது.
அதன்பரில், அப்போது சிறைத்துறை டிஐஜி ஆக பதவி வகித்த ரூபா, சிறைச்சாலையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, சட்டத்திற்குப் புறம்பாக சசிகலா, இளவரசி ஆகியோரின் அன்றாட நடவடிக்கைகள் இருந்ததை கண்டறிந்தார். சிறை விதிபடி சீருடை இல்லாமல், விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து சிறைச்சாலையை விட்டு வெளியேறி சுற்றுலா செல்வதைப் போல பெங்களுர் நகரைச் சுற்றிவிட்டு சிறைச்சாலைக்கு திரும்பியதையும் சிசிடிவி கேமிரா பதிவு மூலம் கண்டுபிடித்தார்.
அதனைத்தொடர்ந்து, சிறைத்துறை விதிகளை மீறியதாகவும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாகவும் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு எதிராக கர்நாடக அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தார். அதன்பேரில், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணைக்கு குழுவும், டிஐஜி ரூபாவின் குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தி, அரசிடம் விசாரணை அறிக்கையை சமர்பித்தது.
இதனிடையே, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா என்பவர், சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலா உள்ளிட்டோருக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் என உத்தரவிட்டது.
சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா, இளவரசி ஆகிய இருவருக்கும் எதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது. சசிகலா, இளவரசி ஆகியோர் மார்ச் 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.
அதன்பேரில், இன்று அதிகாலை வி.கே.சசிகலாவும், இளவரசியும் சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் சென்று, அங்குள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். கர்நாடக போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பித்து கொள்ள சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் முன்ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஜாமீன் மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் சசிகலா, இளவரசி ஆகியோருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.