தாரை இளமதி, சிறப்புச் செய்தியாளர்…
திமுக அரசு மீதான உண்மையான விமர்சனங்களை வரவேற்கிறோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினே அடிக்கடி கூறி வரும் நேரத்தில், திமுகவின் உட்கட்சி விவகாரங்களில் நடக்கும் அத்துமீறல்களையும், ஆட்சி நிர்வாகத்தில் நடைபெறும் முறைகேடுகளையும் மிகுந்த தைரியத்தோடு சுட்டிக்காட்டுவதில் அச்சு ஊடகங்களும், தொலைக்காட்சி ஊடகங்களும் தவறி வருகின்றன என்ற குற்றச்சாட்டு அனைத்து தளங்களிலும் அதிகமாக எதிரொலிக்க தொடங்கிவிட்டன.
அதுவும் குறிப்பாக சமூக ஊடகங்களில், தொழில்முறை ரீதியான ஊடகங்கள் குறித்து முன் வைக்கப்படும் விமர்சனங்கள் மிகவும் தரம் தாழ்ந்து இருந்தாலும் கூட அதில் மறைந்திருக்கும் உண்மையை அவ்வளவு எளிதாக புறம் தள்ளிவிட முடியாத நிலையில்தான் இருந்து வருகிறது. திறந்து மனதுடன் இந்த விமர்சனங்களை ஆராய்ந்தால், திருந்த வேண்டியது அவதூறு விமர்சனங்களை முன்வைப்பவர்கள் இல்லை என்பதும், ஊடகத்தை வாழ்வியலாக கொண்டுள்ளவர்கள்தான் தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதும் உரைக்கும்.
கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தல் தொடர்பாக நான் அவசரப்பட்டு செய்தி வெளியிட வில்லை. கடலூரில் உள்ள ஊடக நண்பர்கள், பல ஆண்டுகளாக தோழர்களாக உள்ள அரசியல்வாதிகள், தங்கள் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியதை அடுத்துதான் கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலையொட்டி நடைபெற்ற ஜனநாயக விரோத செயல்களை துணிந்தே பதிவு செய்தேன். துணிந்தே என்ற வார்த்தைக்கு பின்னால் உள்ள அம்சம் என்னவென்றால், புலனாய்வு செய்திகளை முந்தி தரும் எந்தவொரு இதழ்களும், கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலையொட்டி அன்றாடம் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்ய முன்வரவில்லை என்பதைவிட ஆட்சியாளர்கள் கோபப்பட்டு விடுவார்களே என்று அச்சம் கொண்டார்கள் என்பதுதான் முக்கிய காரணம்.
இதுஒருபுறம் இருக்க, பிரபல நக்கீரன் இதழின் செய்திப்பிரிவை பல ஆண்டுகளுக்கு முன்பு தலைமையேற்று நடத்திய மூத்த ஊடகவியலாளர் காமராஜின் தலைமையின் கீழ் செயல்பட்டு வருவதாக கூறப்படும் மின்னம்பலம் இணைய இதழ், கடலூர் மாநகராட்சி மேயர் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக வெளியிட்ட செய்திகள், ஒருதலைபட்சமாக இருக்கிறது என்பதை கடலூரில் இருந்து கிடைத்த செய்திகள் உணர்த்தியதால்தான், எந்தவிதமானஆபத்தை எதிர்கொண்டாலும் பரவாயில்லை, ஜனநாயக விரோத செயல்களை ஊடகங்களால் அம்பலபடுத்த முடியும் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்ற உந்துதலின் காரணமாகவே நான் பதிவு செய்தேன்.
திமுக எம்எல்ஏ அய்யப்பனையோ, கடலூர் மாவட்ட திமுக பொருளாளர் குணசேகரனையோ ஒருமுறை கூட நான் நேரில் சந்தித்தது கிடையாது. சத்தியம் செய்ய வேண்டும் என்றால், இந்த நிமிடம் வரை இருவரிடமும் கைபேசியில் கூட பேசியது கிடையாது.
எல்லாவற்றும் மேலாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிரத்யேக தூதராக இரவோடு இரவாக கடலூர் சென்ற திமுக துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை கூட , உட்கட்சி ஜனநாயகத்தை நிலை நாட்ட தவறிவிட்டார் என்பதுதான் எனக்கு மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியது.
கடந்த இரண்டு மாதங்களில் நல்லரசுவில் வெளியான செய்திகளுக்கு கிடைக்காத வரவேற்பு, கடலூர் மேயர் தேர்தல் செய்திக்கு மகத்தான வகையில் கிடைத்துள்ளது. இரண்டு நாளில் 7 ஆயிரம் பேர் படித்துள்ள நிலையில், நல்லரசுவில் வெளியிடப்பட்ட செய்தியை, அப்படியே நகல் எடுத்து முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பல நூறு பேர் பரப்பி உள்ளனர். ஆக மொத்தத்தில் அநீதிக்கு எதிரான குரலுக்கு சுயநலம் பார்க்காத மக்கள் ஆதரவாக நிற்கிறார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழ்நாட்டை கடந்து வட மாநிலங்கள், உலகத்தின் பல மூலைகளில் வாழ்ந்து வரும் தமிழ் மக்களும்கூட, கடலூர் மேயர் தேர்தல் பற்றி நல்லரசு வெளியிட்டுள்ள செய்திகளை நாள்தோறும் படித்து வருகிறார்கள் என்பது நல்லரசுக்கு கிடைத்த வெற்றி என்று சொல்வதைவிட எவ்விதமான பின்விளைவுகள் ஏற்பட்டாலும் உண்மையை உரக்க சொல்ல வேண்டும் என்ற உறுதியை ஓய்வு காலத்திலும் வலிந்து கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்துள்ளது.
நல்லரசுவில் வெளியிடப்பட்ட செய்தியில் நேர்மை இருக்கிறது என்பதை இன்றைய தினம் வெளிவந்துள்ள ஜுனியர் விகடன் கட்டுரை நிரூபித்துள்ளது.
ஆதாரங்கள் இருந்தால்தான் செய்தியை வெளியிடுவோம் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்காமல், நடக்கும் நிகழ்வில் அறம் இல்லை என்று கூக்குரல் எழுப்பும் மக்களின் குரல்களை பதிவு செய்கிற துணிச்சல், ஊடகவியலாளர்களுக்கு எப்போதும் இருக்க வேண்டும். ஆனால், உண்மையை உரக்க சொல்ல வேண்டும் என்ற எண்ணமுடைய ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை அரிதாகி வரும் இன்றைய தேதியில், பத்தாண்டுகளுக்குப் பிறகு ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ள திமுகவில், மூத்த தலைவர்களுக்கு இருக்கும் அலட்சியம் போல, இளம் தலைமுறை அரசியல்வாதிகளான உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனிடமும் இருக்கிறதோ என்ற அச்சம் தான் என்னைவிட திமுகவில் உள்ள பல்லாயிரக்கணக்கான நேர்மையான திமுக நிர்வாகிகளிடம் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கு மாற்றாக திமுக ஆட்சிக்கு வர வேண்டும். அப்போதுதான் முந்தைய ஆட்சி காலத்தில் குற்றம் இழைத்தவர்கள் பொதுமக்கள் முன்பு அம்பலப்பட்டு போவார்கள் என்ற அடிப்படையில், திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று எண்ணியவர்களில் நானும் ஒருவன். அப்படிபட்ட நல்லெண்ணத்திற்கு மாறாக, திமுக ஆட்சிக்கு எதிராக, பத்தாண்டு காலம் ஆட்சியில் இல்லாததால், காய்ந்த மாடு கம்பங் கொல்லையில் புகுந்த கதையாகிவிட்டது என்று இன்றைய நாட்களிலேயே விமர்சனங்கள் எழ தொடங்கிவிட்டன.
இந்த அவப்பெயரை துடைத்தெறியும் முழுப் பொறுப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருந்தாலும் கூட, 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும், 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்காக பல்வேறு வியூகங்களை வகுத்து வெறித்தனமாக களப்பணியாற்றிய, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ ஆகட்டும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனசாட்சி என்று அடையாளப்படுத்தப்பட்ட அவரது மருமகன் சபரீசனாகட்டும், இருவருமே உள்ளாட்சித் தேர்தலை பற்றி துளியும் கவலைப்படவில்லை என்பதுதான் மிகவும் வேதனையை தருகிறது என்கிறார்கள் மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலத்து திமுக முன்னணி நிர்வாகிகள்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்லின் போது, திமுகவிற்குள்ளேயே மாவட்டந்தோறும் எழுந்த குளறுபடிகளை சரி செய்வதற்காக, மிகவும் மெனக்கெட்டதுடன், மாவட்டங்களில் உள்ள திமுக முன்னணி நிர்வாகிகள், கட்சிக்கு துரோகம் இழைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட துணிந்த போது, அந்தந்த மாவட்டங்களுக்கே நேரில் சென்று, அங்கேயே முகாமிட்டு, திமுகவின் வெற்றியை உறுதி செய்வதற்கான வியூகங்களை வகுத்ததுடன், விசுவாசமிக்க திமுக நிர்வாகிகள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என அழுத்தமான பாதையை உருவாக்கி தந்தார்கள். அல்லது மனம் நொந்து போனவர்களை ஆறுதல்படுத்தி, கட்சித் தலைமை உங்களை என்றைக்குமே கைவிடாது என்று ஆறுதல் கூறி ஆற்றுப்படுத்தினார்கள்.
அந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றிப் பெற்று, முறையே எம்பி, எம்எல்ஏ ஆன அனைத்து திமுக பிரபலங்களும் நேரடியாக பொதுமக்களிடம் எல்லாம் நாளும் தொடர்பில் இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் என்பது, திமுகவின் அடிமட்டத்தை அசைக்க முடியாத அஸ்திவாரமாக்கக் கூடியது. கிராமங்களில் உள்ள வார்டுகள் முதல் மாநகராட்சி மன்றங்களுக்கான மாமன்ற உறுப்பினர்கள் வரை 50 சதவீதம் அளவிற்காவது நீதி நேர்மையை கடைப்பிடிக்க கூடியவர்களாக இருந்ததால்தான், திமுக ஆட்சி மீதும் திமுக கட்சி மீதும் பொதுமக்கள் வைத்துள்ள உள்ள நம்பிக்கை மேலும் மேலும் அதிகமாகும்..
இப்படி மாநிலம் முழுவதும் திமுகவுக்கு அசைக்க முடியாத செல்வாக்கை உருவாக்கி தரக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை, உதயநிதி ஸ்டாலினும், சபரீசனும் துளிகூட அக்கறை செலுத்த வில்லை என்பதால், போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் துவங்கி உள்ளாட்சி அமைப்புகளின் தலைமை பொறுப்புக்கு தேர்வு செய்வது வரை, திமுக மாவட்டச் செயலாளர்களும், அமைச்சர் பெருமக்களும் தங்களுக்கு அடிமை சேவகம் செய்யும் திமுகவினரையே பெருமளவில் தேர்வு செய்து, பொதுமக்களிடம் நற்பெயரை பெற்றுள்ள விசுவாசமிக்க திமுக நிர்வாகிகளை அவமானப்படுத்தி உள்ளனர்.
அதைவிட மிகவும் கொடுமையானது, தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்களிடையே பொதுசேவையில் அக்கறையுள்ள திமுகவினரை புறக்கணித்துவிட்டு, பணமே பிரதானம் என்ற கொள்கையுடையவர்களுக்கு தலைமை பொறுப்பு கிடைக்கும் வகையில், திமுக தலைமையின் அறிவுரைகளை மீறி அல்லது ஏமாற்றும் வகையில் துணிந்தே செயல்பட்டிருக்கிறார்கள் மூத்த நிர்வாகிகள் என்பதற்கான புகார்கள், திமுக தலைமைக்கு எட்டிய நேரங்களிலும் கூட, அவற்றையெல்லாம் பற்றி அறிந்திருந்த போதும், கட்சிக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்களை அழைத்து ஒரு பேச்சுக்கு கூட இளம் தலைவர்களான இரண்டு பேரும் கண்டிப்பு காட்ட கூட துணியவில்லை என்பதுதான் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள திமுக முன்னணி நிர்வாகிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.
திமுக தலைமைக்கு மிகவும் அறிமுகமானவர்கள் கூட, தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை நேரில் கூறி மன ஆறுதல் தேடிக் கொள்வதற்கு கூட வாய்ப்பு கிடைக்காத நேரங்களில், இளம் தலைவர்களான இரட்டையர்களையும் சந்திக்க முடியவில்லை என்பதுதான் மாவட்ட அளவில் மட்டுமே கட்சிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் திமுக நிர்வாகிகளின் சோக குரலாக இருந்து வருகிறது.
2026 சட்டப்பேரவை தேர்தலிலும் திமுகவே வெற்றிப் பெற வேண்டும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியே தொடர வேண்டும் என்ற குரல், உட்கட்சிக்குள் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பொதுமக்களோடு நேரடியாக தொடர்புடையே உள்ளாட்சி அமைப்புகளின் தலைமைப் பொறுப்பு, நல்லவர்கள் கையில் இருக்க வேண்டும் என்ற சிந்தனையே இல்லாமல், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவும், சபரீசனும் இந்தளவுக்கு பாராமுகம் காட்டியதை எப்படி எடுத்துக் கொள்வது என்று மனம் நொந்து கூறுகிறார்கள் திமுகவின் உண்மையான விசுவாசிகள்.