Mon. Nov 25th, 2024

புதுச்சேரியில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, அவர், ஒவ்வொருவரின் எண்ணம் போல்தான், செயல்களும், செயல்களுக்கு ஏற்பதான் வளாச்சியும் அமையும் என்று கூறினார்.

தொடர்ந்து, மாணவிகள்தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கப் போகிறார்கள் என்பதால், தனி மனித வாழ்வோடு, சமுதாய வாழ்வையும் ஒன்றாக பார்க்கிற மனப்பாங்கை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்தியாவில் ஒவ்வொரு தனிமனிதனின் உணர்வையும் மதிப்பதுதான் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு கிடைத்த மிகச் சிறப்பு என்றும் கூறினார்.

பல்வேறு மொழிகள், பல்வேறு கலாச்சாரங்கள், பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ள இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்பதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என்று அவர் தெரிவித்தார்.

பின்னர், ராகுல் காந்தி மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி உங்கள் தந்தை கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி, எனது தந்தையை இழந்தது என் இதயத்தை பிழந்தது போல் இருந்தது. உங்களில் யாரேனும் தந்தையை இழந்திருந்தால் எனது வலி உங்களுக்கு தெரியும். என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை என்று தெரிவித்தார்.
முன்னதாக கல்லூரி மாணவிகளிடம் பேசிய ராகுல் காந்தி, நீங்கள் என்னை சார் என்று அழைக்க வேண்டாம். கல்லூரியின் முதல்வர், ஆசிரியர்களை சார் என்று அழையுங்கள். என்னை ராகுல் சார் என்று அழைக்க வேண்டாம். ராகுல் அண்ணா என்று வேண்டுமானால் கூப்பிடுங்கள் என்றார். ராகுல் காந்தியின் அழைப்பை அடுத்து அவரை ராகுல் அண்ணா, ராகுல் அண்ணா என்று கல்லூரி மாணவிகள் அழைத்து உற்சாகமாக கலந்துரையாடினார்கள்.