அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் கூடிய அதிமுக நிர்வாகிகள், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்ட படுதோல்வி குறித்து விவாதித்தார்கள். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அக்கட்சி நிர்வாகிகள் வழங்கினார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற, அதாவது வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் மீண்டும் கட்சியில் இணைத்து வலுவாக இயக்கமாக மாறினால்தான் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு, வரும் தேர்தல்களில் வெற்றி பெற முடியும் என அந்த தீர்மானத்தில் வலியுறுத்தி இருந்தனர்.
ஆனால், வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர் சென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஆதி ராஜாராம் பகிரங்கமாகவே தெரிவித்தார்.
இதனிடையே, தேனி மாவட்ட அதிமுக தீர்மானம் குறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் நேரடியாகவே எடப்பாடி பழனிசாமி விவாதித்தார். அப்போது ஏற்கெனவே அதிமுக செயற்குழு மற்றும் மாவடடச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்று ஏகமானதாக எடுத்த முடிவை எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், தேனி மாவட்ட அதிமுக தீர்மானத்தை ஆதரித்து கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி கருத்து தெரிவித்தார். இந்த வரிசையில், ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.ராஜா, நேற்று வி.கே.சகிகலாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் பின்னணியில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாகவும், அவரின் சம்மதம் பெற்ற பிறகே வி.கே.சசிகலாவை ராஜா சந்தித்ததாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், எடப்பாடி பழனிசாமியிடம் புகார் தெரிவித்தனர்.
ஓ.ராஜா வழியில் விழுப்புரம் மாவட்ட அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் வி.கே.சசிகலாவை சந்தித்து பேசினார்கள். இந்த சந்திப்பு குறித்த தகவல் வெளியானவுடன் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், தனது மாவட்ட நிர்வாகிகளை உடனடியாக கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என இரட்டை தலைமையிடம் வற்புறுத்தினார்.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை நீக்கி, ஓ.பி.எஸ், இ.பி.எஸ். ஆகிய இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
வி.கே.சசிகலாவை சந்தித்தனர் என்ற புகாரின் பேரில் விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை நீக்கிய அதிமுக தலைமை, அதற்கு முன்பாகவே வி.கே.சசிகலாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து ஏன் நீக்கவில்லை என்ற குரல் அதிமுக முன்னணி தலைவர்களிடம் இருந்தே எழுந்தது.
இதனையடுத்து, இன்று காலை, வி.கே.சசிகலாவை எந்தவொரு அதிமுக நிர்வாகிகள் சந்தித்தாலும், அவர் எவ்வளவு செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும், கட்சி தலைமை நடவடிக்கை எடுக்காது என்பதை ஒட்டுமொத்த அதிமுக நிர்வாகிகளுக்கும் தெரிவிக்கும் வகையில், தேவி மாவட்ட ஆவின் தலைவராக உள்ள ஓ.ராஜா, அதே மாவட்டத்தில் இலக்கிய அணி செயலாளரான எஸ்.முருகேசன் உள்ளிட்ட நான்கு அதிமுக நிர்வாகிகளை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி ஓபிஎஸ்ஸும், இபிஎஸ்ஸும் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
வி.கே.சசிகலாவை அதிமுகவில் ஒருபோதும் சேர்க்க மாட்டோம் என அதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் ஒன்று கூடி எடுத்த முடிவுக்கு எதிராக, அவ்வப்போது வி.கே.சசிகலா விவகாரத்தை கையில் எடுத்து கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை அடுக்கி வரும் நேரத்தில், அவரது சகோதரர் ஓ.ராஜாவே, வி.கே.சசிகலாவை நேரில் சந்தித்திருப்பதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை எடப்பாடி பழனிசாமி.
ஏற்கெனவே, இதே விவகாரத்தில் அதிமுக மூத்த நிர்வாகி அன்வர் ராஜாவை, கட்சியின் அடிப்படை பதவியில் இருந்து நீக்கியதைப் போலவே, ஓ.ராஜாவையும் உடனடியாக நீக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி நேரடியாக ஓ.பன்னீர்செல்வத்திடம் வற்புறுத்தினார் என்றும் அவரது அழுத்தத்தை தாங்க முடியாமல்தான், தனது சகோதரரை அதிமுகவில் இருந்து நீக்கும் உத்தரவில் தானே கையெழுத்திட வேண்டியிருக்கிறதே என்ற மனவருத்தத்தில்தான் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புக் கொண்டார் என்கிறார்கள் இருவருக்கும் நெருக்கமான அதிமுக மூத்த நிர்வாகிகள்.
கடந்த மூன்று நாட்களாக தேனி உள்பட தென் மாவட்டங்களில் வி.கே.சசிகலாவுக்கு ஆதரவாக அதிமுகவிற்குள்ளேயே நிர்வாகிகள் வெளிப்படையாக பேசி வருவதற்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார் என்றும் இந்த விவகாரத்தை சாதாரண ஒரு விஷயமாக பார்க்க முடியாது என்றும் அதிமுக நிர்வாகிகள் கட்சி கட்டுப்பாட்டை மீறி பேசுவதையும், தனித்து செயல்படுவதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் ஓ.பன்னீர்செல்வத்திடம் கண்டிப்பான குரலிலேயே எடப்பாடி பழனிசாமி தெரிவித்துவிட்டார் என்றும் கூறுகிறார்கள் கொங்கு மண்டல அதிமுக நிர்வாகிகள்.