தமிழக அரசியலில் அ.தி.மு.க.விற்குள்ளும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் நிலவும் குழப்பங்கள், பிப்ரவரி 14 ஆம் தேதி பிரதமர் மோடியின் சென்னை வருகைக்குப் பின்னர் முடிவுக்கு வந்துவிடும் என்று நல்லரசு தமிழ் செய்தியில் ஏற்கெனவே சிறப்புக் கட்டுரையாக வெளியிட்டிருந்தோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்தையே, பிரதமரின் வருகை நிர்ணயிக்கும் என்றும் அதில் சுட்டிக் காட்டியிருந்தோம். பிப்ரவரி 16 ஆம் தேதி 5 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. எனும் கட்சிக்குள்ளும், பொதுமக்கள் மத்தியிலும் ‘தான்’ ஒரு அசைக்க முடியாத அரசியல் சக்தி என்பதை மீண்டும் நிரூபித்து இருக்கிறார் என்கிறார்கள், அரசியல் கள ஆய்வாளர்கள்.
பிப்ரவரி 14 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அரசு விழாவிற்குப் பின்னர், அங்கு தனியறையில் ஏறக்குறைய 20 நிமிடங்கள் தங்கியிருந்த பிரதமர் மோடி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது முதல்வர் தரப்பில் இருந்து மூன்று முக்கிய அம்சங்கள், பிரதமரின் கவனத்திற்கு எடப்பாடி பழனிசாமி கொண்டு சென்றதாக கூறுகிறார்கள் அவரின் நலம் விரும்பிகள்.
‘முதலாவது அம்சம், வரும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றிப் பெறும். அதற்கான களச் சூழல்தான் தமிழகத்தில் நிலவுகிறது என்பதை பிரதமருக்கு புள்ளி விபரங்களோடு தெளிவுப்படுத்தியுள்ளார் முதல்வர். இரண்டாவதாக, தி.மு.க. ஆட்சிக்கு வராமல் தடுத்து, அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றால் தனது தலைமையில் அ.தி.மு.க. தேர்தலை சந்திக்க வேண்டும். அதற்கு மத்திய அரசு உறுதுணையாக நிற்க வேண்டும் என்பதுதான். மூன்றாவதாக, அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கு பெரும்பான்மையான மக்கள் தயாராக இருக்கிற நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது தலைமையை (முதல்வர் வேட்பாளர் இ.பி.எஸ்) மனப்பூர்வமாக ஏற்று, அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்கு உண்மையாக பாடுபட வேண்டும், தென் மாவட்டங்களில் சாதி அரசியலை முன்னெடுக்க கூடாது’ என்பதையும் பிரதமரிடம் சுட்டிக் காட்டியுள்ளார், முதல்வர். ‘அ.தி.மு.க.வுக்கும், மத்திய அரசுக்கும் விசுவாசமானவராக தன்னை காட்டிக் கொள்ளும் ஓ.பி.எஸ்., அதே மனநிலையோடு தேர்தலை எதிர்கொள்ள முன்வந்தால், சசிகலா மற்றும் அவரது கூட்டத்தினரால் அ.தி.மு.க.வுக்கோ, கூட்டணிக்கோ எள்ளளவும் பாதிப்பு வந்து விடாது’ என்பதையும், பிரதமரிடம் தெளிவுப்பட கூறியுள்ளார் முதல்வர்.
முதல்வர் தெரிவித்த கருத்துகள், தமிழகத்தில் நிலவும் அரசியல் தட்ப வெப்ப நிலை குறித்து மத்திய உளவுத்துறை வழங்கியுள்ள அறிக்கையின் சாரம்சங்களோடு ஒத்துப் போனதால், எடப்பாடி பழனிசாமியை தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்திச் சென்றுள்ளார் பிரதமர் மோடி.
‘பிரதமருடனான இ.பி.எஸ்.ஸின் தனிப்பட்ட சந்திப்பு குறித்து, டெல்லியில் இருந்து சென்னை புறப்படுவதற்கு முன்பே துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு டெல்லியில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த உரையாடலின் போது, இதற்கு முன்பிருந்த நளினமான வார்த்தைகள் இடம்பெறாமல் கடுமையான வார்த்தைகள் பரிமாறப்பட்டதாகவும், அதனால்தான், விழா மேடையில் பணிவுமிக்க மனிதராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மிகவும் மெனக்கெட்டார் ஓ.பன்னீர்செல்வம்’ என்கிறார்கள் டெல்லி ஊடகவியலாளர்கள்.
முதல்வரின் சந்திப்புக்குப் பின்னர், பங்காரு அடிகளாரையும் பிரதமர் சந்தித்துப் பேசியுள்ளார். வெளிப்பார்வைக்கு இது ஆன்மிகச் சந்திப்பாக தெரிந்தாலும், இந்த சந்திப்பின் பின்னணியில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸின் ‘ராஜதந்திரம்’ உள்ளதாக கூறுகிறார்கள் மேல்மருவத்தூர் சித்தர் பீட நிர்வாகிகள் சிலர். எடப்பாடி பழனிசாமியோடு அரசியலையும் கடந்த பல்வேறு அம்சங்களில் ஒத்துப்போனதால்தான், அவரை தூக்கிக் கொண்டாடும் மனநிலைக்கு ராமதாஸ் வந்துவிட்டார் என்று புன்னகைக்கிறார்கள் பா.ம.க. முன்னணி நிர்வாகிகள்.
இதற்கு முன்பு, கலைஞர் மு. கருணாநிதி தலைமையில் கூட்டணி வைத்தபோதும் சரி, செல்வி ஜெயலலிதா தலைமையில் கூட்டணி வைத்த போதும் சரி, தேனிலவு முடிவதற்கு முன்பே, இருவரை பற்றியும் கரித்துக் கொட்டிய ராமதாஸ், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட கடுமையாக கூறாமல் கடந்து போவதில் இருந்தே ராமதாஸிடம் ஏற்பட்டுள்ள மனமாற்றத்தை புரிந்து கொள்ளலாம் என்கிறார்கள், அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள்.
எடப்பாடி பழனிசாமி மீது தனக்கு எந்த நெருடலும் இல்லை, அவரோடு இணைந்து தேர்தலை எதிர்கொள்ள பா.ம.க. தயாராக இருக்கிறது என்பதை பட்டுவர்த்தனமாக பிரதமர் மோடிக்கு வெளிப்படுத்தும் சிக்னலாகதான், பங்காரு அடிகளாரின் சந்திப்பை சொல்கிறார்கள் பா.ம.க. முன்னணி நிர்வாகிகள். எப்போதுமே தன் மீது அரசியல் நிழல் விழுந்துவிடக் கூடாது என்பதில் மிக,மிக கவனமாக இருக்கும் பங்காரு அடிகளார், இதற்கு முன்பு எப்போதும் இல்லாத நடைமுறையாக, பிரதமர் மோடியை தேடி வந்து சந்தித்திருக்கிறார். பிரதமர் மோடிக்கு முன்பாக இருந்த பிரதமர்கள், குடியரசுத் தலைவர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என உயர்ந்த மனிதர்கள் பலர், மேல்மருவத்தூருக்குச் சென்றுதான் பங்காரு அடிகளாரை சந்தித்து ஆசிப் பெற்றிருக்கிறார்கள். அப்படிபட்ட நேரங்களில், அவர்களுக்கு ஆகச் சிறந்த ஆன்மிக குருவாக காட்சியளித்தவர்தான், பங்காரு அடிகளார்.
ஆனால், பிரதமர் மோடியுடனான சந்திப்பில் ஆன்மிகத்துடன் அரசியல் வாடையும் வீசியிருக்கிறது. தன் அடிமனதில் தேங்கியிருக்கும் பா.ம.க. அபிலாஷைகளை ஆன்மிகத்தின் பெயரால், பிரதமருக்கு கடத்துவதற்கான கருவியாக, மருத்துவர் ராமதாஸால் இயக்கப்பட்டவர்தான் பங்காரு அடிகளார் என்கிறார்கள் மேல்மருவத்தூர் சித்தர் பீட நிர்வாகிகள். பங்காரு அடிகளாருடன் அவரது மனைவியார் லட்சுமி பங்காரு அடிகளாரும் உடன் சென்று சந்தித்த இந்த சந்திப்பு, ஆன்மிகத்தையும் கடந்தது என்கிறார்கள் அவர்களது குடும்பத்தோடு உறவாடி வரும் சித்தர் பீட நிர்வாகிகள்.
அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதில் மட்டுமல்ல, அ.தி.மு.க.வின் ‘ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமியே இருக்க வேண்டும்’ என்ற நிலைக்கு, மருத்துவர் ராமதாஸ் இறங்கி வந்து பல வேலைகளை செய்து கொண்டிருக்கிறார் என்பதற்கு, பிரதமர் மோடி பங்காரு அடிகளார் சந்திப்பையும் உதாரணமாக கூறுகிறார்கள் பா.ம.க. முன்னணி நிர்வாகிகள்.
அ.தி.மு.க.விற்குள்ளேயும், வெளித் தளங்களிலும் தனக்கு எதிரான அரசியல், நாளுக்கு நாள் வலுவடைந்து வருவதை மிக காலதாமதமாக உணர்ந்துக் கொண்டிருக்கிறார் ஓ.பி.எஸ். என்று கூறும் அவரது விசுவாசிகள், 2016 ல் ஓ.பி.எஸ்., எந்த ஆயுதத்தை கையில் எடுத்து, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினாரோ, அதே ஆயுதமான சசிகலா எதிர்ப்பு என்ற ஆயுதத்தைதான் தற்போது வலுவாக பிடித்துக் கொண்டிருக்கிறார் இ.பி.எஸ். என்பது பிரதமர் மோடி வருகைக்குப் பின்னர்தான் ஓ.பி.எஸ்.ஸுக்கு முழுமையாக புரிந்திருக்கிறது. அதனால்தான், இதுவரை இ.பி.எஸ்.ஸோடு முட்டிக் கொண்டிருந்த ஓ.பி.எஸ்., மறுநாளே பரிசுத்தமானவராக தன்னை மாற்றிக் கொண்டார்.
அதன் வெளிப்பாடுதான், பிப்ரவரி 15 ஆம் தேதியன்று கோவையில் முதல்வர் பழனிசாமியோடு இணைந்து அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற இலவச திருமண விழாவில் கலந்துகொண்டது மட்டுமின்றி, இ.பி.எஸ்.ஸின் ஆட்சியைப் பற்றி முதல்முறையாக மனம் திறந்து ஓ.பி.எஸ். பாராட்டியும் பேசியிருக்கிறார். அந்த பேச்சு, மேடைக்கான பேச்சு அல்ல, தனக்கு தானே போட்டுக் கொண்டிருந்த தலைவர் என்ற இமேஜை, அதே மேடையில் உடைத்தெறிந்துவிட்டேன் பாருங்கள் என்று சொல்வதற்கு அடையாளமாகவும் அவரது உடல்மொழிகள் பிரதிபலித்தன. தனது அரசியல் எதிர்காலமே இனிமேல் இப்படிதான் பயணிக்கும் என்பது, இ.பி.எஸ்., ஆதரவாளர்களுக்கு மட்டுல்ல, சசிகலா கூட்டத்திற்கும் தெளிவுப்பட உணர்த்தியிருக்கிறார் ஓ.பி.எஸ். என்கிறார்கள் அவரது விசுவிவாசிகள்.
ராமதாஸுடன் கை கோர்த்தன் மூலம், வடக்கு மாவட்டங்களில் அ.தி.மு.க.வின் வெற்றியை உறுதிப்படுத்தி விட முடியும் என்ற நம்பிக்கையில் உள்ள இ.பி.எஸ்., பிரதமர் மோடி மூலம் ஓ.பி.எஸ்.ஸையும் தன் வழிக்கு கொண்டு வந்துவிட்டார். ஓ.பி.எஸ்.ஸின் சமரசத்தால் தென் மாவட்டங்களில் சமுதாய ரீதியாக எழும் எதிர்ப்புகளையும் சமாளித்துவிட முடியும் என்ற நம்பிக்கைக்கு வந்துவிட்டார் இ.பி.எஸ். என்கிறார்கள், சேலம் மாவட்ட அ.தி.மு.க.முன்னணி தலைவர்கள். அதற்கு மற்றொரு காரணமும் உண்டு என்று அவர்கள் நமட்டு சிரிப்புடன் திரைமறைவில் நடந்த ஒரு காய் நகர்த்தலையும் போட்டு உடைத்தார்கள். .
“தென் மாவட்டங்களில் சசிகலா மற்றும் ஓ.பி.எஸ். சார்ந்திருக்கும் சமுதாய மக்களின் மனவுணர்களைத் துல்லியமாக தெரிந்து கொள்ள, தனக்கு விசுவாசமான ஒரு படையை தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து பல்ஸ் பார்த்திருக்கிறராம் இ.பி.எஸ். தேவர் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களில் எல்லாம் கள ஆய்வு மேற்கொண்டு திரும்பிய அவர், இ.பி.எஸ்.ஸின் செயல்பாடுகள், ஆட்சி நிர்வாகத்தைப் பற்றி பெருமையாக பேசுவதாகவும், மறைந்த அம்மாவின் ஆட்சி மீண்டும் தொடர வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் என்பதையும், சாதிப் பற்றைக் கடந்து இரட்டை இலைக்குதான் ஓட்டுப் போடுவோம் என்ற உறுதியோடு இருப்பதையும் அந்த படை விரிவாக இ.பி.எஸ்.ஸிடம் நெகிழ்ந்துப் போய் தெரிவித்திருக்கிறது.
தென் மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவான மனநிலையே இருப்பதால்தான், சசிகலா குடும்பத்தை துணிந்து எதிர்த்து நிற்கிறார் எடப்பாடி பழனிசாமி. அவரோடு துணை நின்றால் என்றைக்கும் மாப்பிள்ளைத் தோழனாக ஓ.பன்னீர்செல்வம் இருக்கலாம். அதற்கு மாறாக, தான்தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு, பரதன் என்றெல்லாம் இனிமேலும் பிதற்றிக் கொண்டிருந்தால், அ.தி.மு.க. எனும் திருமண பந்தியில் ஒருவேளை உணவைக் கூட சுவைக்க முடியாத நிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் தள்ளப்பட்டுவிடுவார்” என்கிறார்கள் சேலம் மாவட்ட அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள்
மாப்பிள்ளை இ.பி.எஸ்.தான்.. அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையதுதான் என்று கூட இனிமேல் ஓ.பி.எஸ்.ஸால் சொல்ல முடியாது போல…பரிதாபம்தான்…