Fri. Nov 22nd, 2024

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரின் கைதை கண்டித்து அவரது மகன் ஜெயவர்தன் உள்ளிட்ட அதிமுகவினர் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு இரவு 7 மணிக்குச் சென்ற காவல்துறையினர், திமுக நிர்வாகியை தாக்கிய வழக்கில் கைது செய்ய வந்திருப்பதாக கூறி ஜெயக்குமாரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக தகவல் பரவியவுடன் அதிமுக நிர்வாகிகள், அவரது இல்லம் முன்பு திரண்டு காவல்துறையினருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் எங்கே அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்ற தகவலை கூட காவல்துறையினர் தெரிவிக்க மறுப்பதாக அவரது மகன் ஜெயவர்தன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் குற்றம் சாட்டினர்.

இரவு 10 மணியளவில் கூட ஜெயக்குமார் எங்கே வைக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவலை காவல்துறையினர் முறைப்படி தெரிவிக்கவில்லை என்று கூறி ஜெயவர்தன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நுங்கம்பாக்கம் காவல்நிலையம் முன்பு தரையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் காவல்துறையினர் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

நுங்கம்பாக்கத்தில் திடீர் என்று அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் அந்த வழித்தடத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளளது.

இதனிடையே, ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.