Fri. Nov 22nd, 2024

முல்லைப்பெரியாறில் புதிய அணை கேரள ஆளுநர் முகமதுஆரிப்கானை திரும்ப பெற வலியுறுத்தி தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்களில் பிப்ரவரி 21ல் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என பிஆர் பாண்டியன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாட்டில் கூடங்குளம் அணு உற்பத்தி நிலையம் 1,2 அணு உலைகள் கடந்த பல ஆண்டுகளாக மின் உற்பத்தி செய்து வருகிறது. அதிலிருந்து வெளியேறக்கூடிய அணுக்கழிவுகளை ரஷ்யா தானே திரும்ப எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் செய்து அனுமதி பெற்றது. ஆனால் அணுக்கழிவுகளை திரும்ப எடுத்துச் செல்லாமல் உற்பத்தி நிலைய வளாகத்திற்குள்ளேயே சேமிக்கப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பேராபத்து ஏற்படும் என அஞ்சி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 3,4வது அணு உலைகளுக்கான உற்பத்தி துவங்கப்பட உள்ளது. அதிலிருந்து வெளியேறக்கூடிய கழிவுகளையும் அங்கேயே சேமிப்பதால் பேராபத்து ஏற்படும் என பொதுமக்கள் போராடி வருகிறார்கள். இதனை மத்திய அரசு கவனத்தில் கொண்டு அணுக்கழிவுகளை மக்கள் வசிப்பிடம் இல்லாத பாலைவனப் பகுதியில் பாதாள கட்டமைப்புகளை உருவாக்கி அதற்குள் சேமித்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழக முதலமைச்சரின் கடிதத்தை ஏற்று செயல்பட பிரதமர் மோடி முன்வரவேண்டும். அதுவரையிலும் 3,4 அணு உலைகள் செயல்பாட்டிற்கு தடை விதிக்க தமிழக அரசு முன் வர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவோம் என்றும், 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்கி வைக்க அனுமதிக்க மாட்டோம் என கேரள சட்டமன்றத்தில் அம்மாநில ஆளுநர் முகமது ஆரிப் கான் பேசி இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவரது செயல் அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது மட்டுமின்றி அண்டை மாநில உறவுகளை சீர்குலைக்கும் நடவடிக்கையாகும்.
உச்ச நீதிமன்றத்தில் முல்லைப் பெரியாறு குறித்த அனைத்து வழக்குகளும் ஒன்றிணைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிற நிலையில் இவரது கருத்து உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயலாக அமைந்துள்ளது. இவரது கருத்தால் ஒட்டுமொத்த தமிழகமும் போராட்டக் களத்திற்கு தள்ளப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளா தமிழகம் இடையேயான உறவுகளை சீர்குலைக்கும் இவரது நடவடிக்கையை குடியரசுத் தலைவர் அனுமதிக்கக்கூடாது. அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக பேசியுள்ள ஆளுநர் முகம்மது ஆரிப்கானை திரும்பப் பெற குடியரசு தலைவர் முன்வர வேண்டும் என வலியுறுத்தி வரும் 21ஆம் தேதி தேனி மதுரை சிவகங்கை ராமநாதபுரம் விருதுநகர் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

மத்திய அரசு நேற்று (18.02.2022) முதல் அணை பாதுகாப்பு மசோதா செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே மசோதா குறித்து பாராளுமன்றத்தில் தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் அணைப் பாதுகாப்பு மசோதா செயல்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் குடியரசு தலைவர் அனுமதி வழங்கியுள்ளதாக வந்திருக்கிற செய்தி கூட்டாட்சித் தத்துவத்திற்கு முரணானதாக உள்ளது.

குறிப்பாக இந்தியாவில் உள்ள பல்வேறு நதிநீர் ஆணையங்களைவிட தன்னாட்சி அதிகாரம் கொண்ட தனிச்சிறப்பு பெற்றது காவிரி மேலாண்மை ஆணையம் ஆகும். மற்ற ஆணையங்கள் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ளது. காவிரி ஆணையம் மட்டும் மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்ததையடுத்து உச்ச நீதிமன்றம் தன் நேரடி கட்டுப்பாட்டில் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து செயல்படுத்தி வருகிறது. தற்போது ஆணையம் தன்னாட்சி அதிகாரத்தோடு செயல்படுகிறது.

இந்நிலையில் அணைகள் பாதுகாப்பு மசோதா என்கிற பெயரில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம் பறிக்கப்படுமா? ஆணையம் அணை பாதுகாப்பு அமைப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படுமா? என்பது குறித்து தமிழக முதலமைச்சர் தெளிவான விளக்கத்தை விவசாயிகளுக்கு வழங்க முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம் என்றார்.

மேற்கண்டவாறு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.