திமுக அமைச்சர் பொன்முடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை ஒருமையில் பேசியது மட்டுமின்றி காவல்துறையினரையும் நாகரிகமற்ற முறையில் பேசிய விவகாரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கலந்துகொண்டார்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொண்டபோது, கூட்டத்தின் ஒரு பகுதியில் இருந்து சி.வி.சண்முகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தனது பரப்புரைக்கு திமுகவினர்தான் இடையூறு செய்கின்றனர் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டிய சி.வி.சண்முகம், முழக்கங்களை எழுப்பியவர்களை நோக்கி ஆவேசமாக பேசினார். திமுக அமைச்சர் பொன்முடி பெயரை குறிப்பிட்டு ஒருமையில் சி.வி.சண்முகம் பேசியதுமட்டுமின்றி, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் தரக்குறைவான கருத்துகளை தெரிவித்தார்.
இதைவிட மிகவும் கீழ்த்தரமாக, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை நோக்கி ஆவேசமாக பேசிய சி.வி.சண்முகம், காவல்துறையினரை மிரட்டும் வகையிலும் குரலை உயர்த்தினார்.
சி.வி.சண்முகத்தின் அவதூறு பேச்சு குறித்து விழுப்புரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.