சென்னையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின விழாவின் போது தமிழ்த்தாய் பாடலுக்கு எழுந்து நிற்காமல், அவமரியாதை செய்த ரிசர்வ் வங்கி பணியாளர்கள் சிலரின் நடவடிக்கைக்கு அரசியல் கட்டுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சென்னையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியபோது எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ், காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸும், ரிசர்வ் வங்கி பணியாளர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி:
சென்னையில் இந்திய ரிசர்வ் வங்கியில் நடைபெற்ற குடியரசு நாள் விழாவில் தமிழ்த்தாய் பாடல் இசைக்கப்பட்ட போது, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தத் தவறியுள்ளனர். அதுமட்டுமின்றி அவ்வாறு செய்யத் தேவையில்லை என்றும் கூறியுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.
தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாடு அரசின் மாநிலப்பாடலாக கடந்த திசம்பர் 17-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு எழுந்து மரியாதை செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திட்டமிட்டே இதை செய்ய மறுத்திருப்பது தமிழ்த்தாயை அவமதிக்கும் செயல்
மத்திய அரசு அதிகாரிகளாக இருந்தாலும் தமிழகத்தில் தமிழ்நாட்டின் விதிகளை மதிக்க வேண்டும். தமிழ்த்தாயை அவமதித்தவர்களை மன்னிக்கக்கூடாது. இதுகுறித்து புகார் வந்தால் தான் நடவடிக்கை எடுப்போம் என அரசும், காவல்துறையும் காத்திருக்காமல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்!
இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
ரிசர்வ் வங்கி பணியாளர்களுக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், ரிசர்வ் வங்கியின் தமிழக கவர்னர் எஸ் எம் சாமி நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை இன்று நேரில் சந்தித்து விளக்கமளித்தார்.