Sun. Nov 24th, 2024

நல்லரசு தமிழ் செய்திகள், தனது பணியை தொடங்கிய ஜனவரி முதல் நாளில் இருநது இன்றைய தேதி வரை தொடர்ந்து அனைத்து செய்திகளையும் வாசித்து வருபவரும் நமது நலம் விரும்பியுமான மூத்த ஊடகவியலாளர், அவ்வப்போது பாராட்டுகளையும், அதிகளவு குட்டுகளையும் வைத்து வருபவர். அவரின் ஆலோசனைகளையும், விமர்சனங்களையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு, அவரது அனுபவ அரசியலை உள்வாங்கி, அதை முழுமையாக செயல்படுத்த முடிந்தளவு முயற்சித்து வருகிறோம். அந்தவகையில், நல்லரசு தமிழ் செய்திகள் இணைய தளம், கட்சி சார்புடையதா எனபதை பரிசோதிக்கும் வகையில் இந்த படங்களை அனுப்பி வைத்திருப்பாரோ என நாம் எண்ணுகிறோம். ஏனெனில் ஒரு செய்திக்கட்டுரைக்காக, நாம் எந்த புகைப்படத்தையும் இதுவரை பிரத்யேகமாக வடிவமைத்து வெளியிட்டது இல்லை. அந்த வகையில், அவர் வடிவமைத்து அனுப்பி வைத்த இரண்டு புகைப்படங்களும், சொல்லாமல் பல செய்திகளை உள்ளகத்தே மறைத்து வைத்திருக்கிறது என்பது உணர முடிகிறது.

 இன்றைய சூழலில் இதைப் பற்றியும் பதிவு செய்ய வேண்டியது, அவசியமாகிறது. அதைவிட, அவசரமாகவும் இந்த செய்தி மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று நல்லரசு தமிழ் செய்திகள் இணையத் தளம் ஆவலாக இருக்கிறது.

முதல் புகைப்படம்…

உண்மையிலேயே ஆச்சரியத்திற்குரிய ஒன்றுதான். திராவிட முன்னேற்றக் கழகத்தை தொடங்கிய பேரறிஞர் அண்ணா, எந்த சூழ்நிலையிலும், தன்னுடைய முடிவை யார் மீதும் திணித்தது கிடையாது என்று அனுபவமிக்க அரசியல்வாதிகள் கருத்து தெரிவிக்கின்றனர். ஆழ்ந்த அறிவு கொண்ட எண்ணற்ற தம்பிமார்களை அவர் படைத் தளபதிகளாக வைத்திருந்தார். மறைந்த நாவலர் நெடுஞ்செழியன், என்.வி.நடராஜன், மதியழகன், ஈ.வி.கே.சம்பத், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர், தி.மு.க.வின் கொள்கைகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பி வந்தனர்.

அப்படிபட்ட தளபதிகளைக் கொண்டதால்தான் பேரறிஞர் அண்ணா, தான் உயிரோடு இருக்கும் காலத்திலேயே தம்பி வா, தலைமை ஏற்க வா என்று உரிமையோடு, உண்மையான உள்ளத்தோடு அழைத்தார். அந்தளவுக்கு அவருக்கு அரசியல் வாழ்க்கையில் பரந்த மனப்பான்மை இருந்தது.

பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பிறகு தி.மு.க. வின் தலைமைப் பொறுப்பை ஏற்ற கலைஞர் மு.கருணாநிதி, அண்ணாவின் தம்பிகளை தன்னருகில் வைத்துக் கொண்டிருந்தாலும் கூட, அவர்களை முழுமையாக நம்பாமல் அல்லது அவர்கள் எல்லாம் தனக்கு விசுவாசத்தோடு இருக்க மாட்டார்கள் என்று கருதியதாலோ என்னவோ, தனக்கென தனித்துவமிக்க, விசுவாசமிக்க, படைத் தளபதிகளை உருவாக்கிக் கொண்டார். அந்த படை ஆதிக்கம் செலுத்தியவுடனேயே, அதற்கு முன்பு தி.மு.க. பயணித்து வந்த ஜனநாயக பாதையில் இருந்து முழுமையாக விலகத் தொடங்கியது.

கலைஞர் மு.கருணாநிதியின் விருப்பு, வெறுப்புக்கு  ஏற்ப, அந்த படை இயங்கத் தொடங்கியது. அந்த படைக்கு தி.மு.க. என்ற மாபெரும இயக்ககத்தின் மீதான விசுவாசத்தைவிட, கலைஞர் மீதான விசுவாசமும், பக்தியும் அதிகமாக இருந்ததால், தி.மு.க.வில் தனிமனித ஆதிக்கம், வழிபாடு கோலோச்சத் தொடங்கியது. அதன விளைவுதான், தி.மு.க.வில் இருந்து மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வெளியேறினார். அவரைப் போல பல முன்னணி தலைவர்களும், கலைஞர் மு. கருணாநிதியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக, அடுத்தடுத்து தி.மு.க.வை விட்டு வெளியேறினார்கள்.

இருப்பினும், தன்னுடைய தனித்துவமிக்க ஆற்றல்களால், தி.மு.க. எனும் எஃகு கோட்டைக்கு எந்த சேதாரமும் இல்லாமல் கட்டி காப்பாற்றி வந்தார் கலைஞர். உடன்பிறப்பே என்று அவர் அழைக்கும் ஒற்றைச் சொல்லுக்கு உயிரையே கொடுக்கும் பெருங்கூட்டம், அவரது தலைமையையே பெரிதும் கொண்டாடியது. அந்த நிலையிலும், பேராசிரியர் க. அன்பழகன், தன்னை விட்டு பிரிந்து விடுவார் என்று கருதிய நேரங்களிலும், உருக்கத்தோடு பேசி, உண்மையான பாசத்தை வெளிப்படுத்தியும், அவரை அரவணைத்து, தன் பக்கமே நிறுத்திக் கொண்டார். அதேபோல, இரண்டாம் கட்ட தலைவர்களாக, ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்ட சிலரையும் தனது நம்பிக்கைக்குரிய தளபதிகளாக எப்போதும் கூடவே வைத்திருந்தார்.

தி.மு.க முன்னாள் பொருளாளர் சாதிக்பாட்சா போன்ற பல முன்னணி தலைவர்கள் மறைந்த போது, அவர்கள் இடத்தில், குடும்ப உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல், பொது நலனே குறியாக இருந்தவர்களுக்கே, தன்னைச் சுற்றியிருக்கும் பாதுகாப்பு கேடயமாக வைத்துக் கொண்டார் கலைஞர் மு.க கருணாநிதி. இந்த வகையில், விதிவிலக்காக இருந்தவர் மறைந்த மத்திய அமைச்சரும், கலைஞரின் மனசாட்சியுமான முரசொலி மாறன். தொடக்க காலம் முதலே கலைஞரின் அனைத்து சோதனைகளிலும், சாதனைகளிலும் உடனிருந்த மாறன், உறவை விட உடன்பிறப்பாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் தனிப்பட்ட ஆர்வம் காட்டியவர்.

அரசியலில் சூறாவளி வீசியப் போதெல்லாம், அவரின் ஆலோசனைகள், தி.மு.க. எனும் கப்பல், கவிழ்ந்துப் போகாமல் காப்பாற்றியிருக்கிறது என்று அவரோடு சம காலத்தில் பயணித்த மூத்த ஊடகவியலாளாகள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில், தனிப்பட்ட முறையில் கலைஞரிடம் பேசும் போதோ, பொதுக்குழு, செயற்குழு போன்ற கட்சியின் முக்கியக் கூட்டங்களிலும் யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்காமல் தனது மனதில் பட்டதை பட்டென்று போட்டு உடைத்து விடுவார் முரசொலி மாறன். அவை, கட்சியின் வளர்ச்சிக்கும், ஆத்ம பரிசோதனைககக்கும் பல நேரங்களில் உதவியாகவும், உரமாகவும் அமைந்திருக்கிறது. அவரால் அடையாளம் காட்டப்பட்ட சிஷ்ய பிள்ளைகள்தான் திருச்சி சிவாவும், ஆ. ராசாவும். இருவருமே, திராவிட கொள்கைகளில் ஆழ்ந்த ஞானம் கொண்டவர்களாக, சிறந்த பேச்சாற்றலைக் கொண்டவர்களாக, ஆகச் சிறந்த சிந்தனைவாதிகளாக இருக்கிறார்கள் என்று புகழுகிறார்கள் கட்சியின் முன்னணி நிர்வாகிகள்.

இவர்களுக்கு எல்லாம் மேலாக இன்றைய பொதுச் செயலாளர் துரைமுருகனும், முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமியும் கலைஞரின் நிழலாக வளர்ந்து, வாழ்ந்து, அவரது மனதுக்கு விருப்பமாக பணிகளையெல்லாம் சிரத்தில் தாங்கி செய்து முடிக்கும் வல்லவர்களாக இருநதார்கள். கட்சிப் பிரச்னையென்றாலும், குடும்பப் பிரச்னையென்றாலும் கூப்பிடு துரைமுருகனை, கூப்பிடு ஆற்காடு வீராசாமியை என்று கலைஞரால் உரிமையோடு அழைக்கும் அளவுக்கு, கலைஞரின் குடும்பம் வேறு, வாழ்க்கை வேறு, தங்கள் குடும்பம் வேறு, தங்கள் வாழ்ககை வேறு என்று துரைமுருகனும், ஆற்காடு வீராசாமியும் வாழ்ந்திருக்கவில்லை. மு.க.அழகிரி தொடர்புடைய மதுரை தினகரன் அலுவலகம் எரிப்பு நிகழ்வில், கலைஞர் மு.கருணாநிதிக்கும், முரசொலி மாறனின் மகன்களான கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரின் குடும்பத்திற்கும் ஏற்பட்ட விரிசல், எந்த காலத்திலும் ஒட்டவே ஒட்டாது என்று எல்லோரும் நினைத்திருந்த நிலையில, முரசொலி மாறனின் குடும்பத்தை மீண்டும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு கலைஞரின் மனதை கரைத்தவர் ஆற்காடு வீராசாமிதான் என்று அந்த காலத்திலேயே தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் பலரால் நினைவுக் கூறப்பட்டது.

இவற்றையெல்லாம் கடந்து, தனிப்பட்ட தனது சந்தோஷத்திற்காக கலைஞர் மு. கருணாநிதி எப்போதும் தன்னுடன் பெங்களூருக்கோ, மாமல்லபுரத்திற்கோ, ஏற்காட்டிற்கோ துரைமருகனையும், ஆற்காடு வீராசாமியையும் தான் அழைத்துச் சென்றார். கலைஞருக்கு அரசியலைக் கடந்து திரையுலக பிரபலங்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், நாடக நடிகர்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், சமூக சேவகர்கள் என எண்ணற்ற தளங்களில் நெஞ்சுக்கு நெருக்கமான எண்ணற்ற நண்பர்களுடன் கலைஞர் எப்போதும் நட்புப் பாராட்டி வந்தார். அந்த வகையில்,,இங்கு பதிவேற்றப்பட்டுள்ள புகைப்படம், உண்மையில் கலைஞர் மு கருணாநிதியின் தனிப்பட்ட அபிலாஷைகளுக்கும், அரசியல் பணிகளுக்கும் உரமாய் நிறக் உறுதுணையாக இருந்தவர்களைதான் சுமந்து கொண்டிருக்கிறது.

இரண்டாவது புகைப்படமே நிறைய சங்கதிகளைச் சொல்லும்.. விரிவாக நாம் விவரிக்க வேண்டியிருக்காது. இருந்தாலும், கலைஞர் மு.கருணாநிதியோடு ஒப்பிட்டு தன்னை ஆற்றல் மிக்க தலைவராக மு.க.ஸ்டாலினே அடையாளப்படுத்திக் கொள்ளாததால், அதுபோன்ற அங்கீகாரத்தை தேட முனைய வில்லை என்றாலும்கூட, கலைஞர் பாணியில் தி.மு.க.வை வழிநடத்திச் செல்ல சிறியளவும் முயறசிக்கவில்லை என்பதுதான் உண்மை.

புதிதாக பாதை உருவாக்குவது என்பது ஆற்றலாளர்களுக்கு மட்டுமே வாய்ந்த தலைமைப் பண்பு. அப்படிபட்ட சிரமம் இன்றைக்கு தி.மு.க.வின் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினுக்கு இல்லை. ஆனால், தன்னைச் சுற்றி அவர் வைத்திருக்கிற கூட்டம், அறிவு சார்ந்த கூட்டத்தினரிடம் மட்டுமல்ல, அவரது கட்சி தொண்டர்களிடமே வரவேற்பு பெறவில்லை என்பதுதான் துயரம்.  தி.மு.க. எந்த திசையை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை தீர்மானிக்கிற இடத்தில், மு.க.ஸ்டாலினைவிட அதிக வல்லமைப் பெற்றவர்களாக அவரது மனைவி துர்கா, அவரது மகன் உதயநிதி, அவரது மருமகன் சபரீசன் ஆகியோர்தான் இருக்கிறார்கள் என்பதை கடைக்கோடி தி.மு.க. தொண்டனும் அறிந்து வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறான்.

மாநிலம் முழுவதும் தி.மு.க.வில் எந்த உட்கட்சிப் பஞ்சாயத்து என்றாலும், இன்றைக்கும் அங்குச் சென்று தீர்த்து வைக்கிற பிரமுகர்களாக, ஐ. பெரியசாமியும், கே.என்.நேருவும் இருக்கிறார்கள். இன்னும் சில பிரமுகர்களுக்கும் அவ்வப்போது அந்த பாக்கியம் கிடைப்பது உண்டு. ஆனால், கலைஞரோடு சமகாலத்தில் பயணித்து, அவரது கண்ணசைவுக்கு ஏற்ப செயல்பட்டு சோரம் போகாத கழக தளபதிகளாக இருந்த ஐ.பெரியசாமியும், கே.என்.நேருவும், உதயநிதியை தலையில் சுமத்துக் கொண்டு செல்கிற பரிதாப நிலை ஏற்பட்டிருப்பதை பார்த்துதான், சுயமரியாதை பாசறையில் பயின்ற, விசுவாசமிக்க தி.மு.க. நிர்வாகிகள் ரத்தக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

உதயநிதியின் உள்அரசியலையே ஏற்றுக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருக்கும் தி.மு.க. முன்னணி பிரபலங்கள் பலருக்கு, அவரின் நண்பரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சியிலும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தனது அதிகார எல்லையை விரிவுப்படுத்தி வரும் செயல்களை அறிந்து நொந்து போய்வுள்ளனர். அவரது வயதை விட இருமடங்கு தி.மு.க.விற்காக தியாகம் செய்த முன்னணி பிரமுகர்கள் கூட, அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்பு அடிமைப் போல நிற்கும் காட்சிகளைக் கண்டு நொந்து போய் இருக்கிறார்கள் மாவட்ட அளவிலான முக்கிய பிரபலங்கள்.

மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன், வெளிப்படையாக தி.மு.க.வில் ஆதிக்கம் செலுத்தாமல், உள்ளுக்குள் இன்னொரு முரசொலி மாறனாக வளர்ந்து வருகிறார். டெல்லி அரசியலை கையாளும் உரிமை அவருககுதான் பரிபூரணமாக வழங்கப்பட்டு இருக்கிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது உதயநிதி மற்றும் சபரீசன் ஆகியோரின் கடைக்கண் பார்வை பட்ட பலர், வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, இப்போது எம்.பி.க்களாக இருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள், அந்த தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இழந்த முன்னணி நிர்வாகிகள். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்திலும் அதேபோன்ற சூழல்தான் இருக்கிறது என கவலை தெரிவிக்கிறார்கள் பல மாவட்டச் செயலாளர்கள். தங்களுடைய எந்த பரிந்துரைகளையும் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொள்வதில்லை என்பதுதான் அவர்களின் பிரதான குற்றச்சாடடாக உள்ளது.

இப்படி குடும்ப உறவுகளால் சூழப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின், இரண்டாம் கட்ட தலைவர்களின் ஆலோசனைகளையோ, அறிவார்ந்த தி.மு.க. முன்னணி நிர்வாகிகளின் அறிவுரைகளையோ துளியளவுக்குக் கூட பொருட்படுத்துவதில்லை என்கிறாகள் அண்ணா அறிவாலய நிர்வாகிகள். கலைஞர் மு.கருணாநிதிக்குப் பிறகு தி.மு.க.வின் தலைவராக மு.க.ஸ்டாலின்தான் வர வேண்டும் என்று இருபது ஆண்டுகளுக்கு மேலாக குரல் கொடுத்த இரண்டாம் கட்ட தலைவர்கள், அனுபவமிக்க முன்னாள் அமைச்சர்கள் எல்லாம், மு.க.ஸ்டாலினுக்கு வரிசையில் நின்றுதான் வணக்கம் செலுத்த வேண்டிய நிலைதான், இன்றைக்கு உருவாகியிருக்கிறது.

இவையெல்லாம் வெளிப்படையாக பேசும் பொருளாக ஆகியிருப்பதாலும், சூடான விவாதத்தை கிளப்பி விட்டிருப்பதாலும்தான்,  கடந்த நான்காண்டுகளாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போன்றவர்களால், தி.மு.க.வையும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினையும் எளிதாக நையாண்டி செய்துவிட முடிகிறது.

இன்றைய தி.மு.க.வின் தலைவர் மு.க.ஸ்டாலின், பொது வெளியிலும், சமூக ஊடகங்களிலும் கேலிக்குரிய ஒருவராக சித்தரிக்கப்பட்டு வருவதற்கு வேறு யாரும் காரணமல்ல, அவரேதான காரணம்.  

கலைஞர் மு.கருணாநிதி சிதம்பரமாக இருந்தார். மு.க.ஸ்டாலின் மதுரையாக இருக்கிறார்.