நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடியுள்ளது..
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், சட்டப்பேரவையில் இடம் பெற்றுள்ள திமுக, காங்கிரஸ், பாமக, விசிக, பாஜக, மதிமுக உள்ளிட்ட 13 கட்சிகள் பங்கேற்றுள்ளன.
திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகன், அதிமுக சார்பில் சி.விஜயபாஸ்கர், காங்கிரஸ் சார்பில் செல்வபெருந்தகை, விசிக சார்பில் சிந்தனைச் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர்..
பாஜக சார்பில் வானதி சீனிவாசன், பாமக சார்பில் ஜி.கே.மணி, மதிமுக சார்பில் சதன் திருமலைக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்..
பாஜக வெளிநடப்பு
நீட் விவகாரம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்தது. இதுதொடர்பாக வானதி சீனிவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆளும் கட்சியான திமுக கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போதே நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
அப்போதே எங்கள் கருத்துகளை முழுமையாக பேச முடியாததால் வெளிநடப்பு செய்தோம்.
நீட் தேர்வால் இடஒதுக்கீட்டை விட அதிகமாக இடங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர்.
ஆரம்ப கட்டத்தில் நீட் தேர்வினால் சில பிரச்னைகள் இருந்ததை மறுக்கவில்லை.
மாணவர்கள் கஷ்டப்படுவதாக அவர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது. இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்..
அதிமுக துணை நிற்கும்
நீட் தேர்வு விவகராத்தில் அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் அதிமுக துணை நிற்கும் என்று அக்கட்சி எம்எல்ஏ விஜயபாஸ்கர் தெரிவித்தார்..
நீட் தேர்வு ரத்து நிலைபாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது.
நீட் விலக்கு பெறும் வரை மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி மையங்களை அதிகரிக்க வேண்டும்.
மாணவர்கள் தவறான எண்ணங்களுக்கு செல்வதை தவிர்க்க உளவியல் பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் கூறினார்..