முந்தைய அதிமுக ஆட்சியில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சராக பதவி வகித்த பி.தங்கமணி வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக அவருக்கு சொந்தமான 69 இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே ஆலம்பாளையத்தில் உள்ள தங்கமணிக்கு சொந்தமான வீடு மற்றும் உறவினர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களிலும் தனித்தனி குழுவாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதேபோல, சென்னை, கோவை, ஈரோடு, சேலம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் முனைப்பான சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
தங்கமணியை தவிர்த்து, அவரது மனைவி, மகன் ஆகியோர் மீதும் வருமானத்திற்கு அதிமாக சொத்து குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர். அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 4 கோடியே 85 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்து குவித்துள்ளதாக, அவருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரது மகன் தரணிதரன் 2 வது குற்றவாளியாகவும், அவரது மனைவி சாந்தி 3 வது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தங்கமணியும், அவரது குடும்பத்தினரும் கிரிப்டோகரன்ஸில் கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்திருப்பதாகவும், அவரது மகன் பரணிதரன் முருகன் எர்த் மூவர்ஸ் என்ற தனியார் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்திருப்பதகாவும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தங்கமணியின் மருமகன் தினேஷ். அவரது தந்தை பெயர் சிவ சுப்பிரமணியன். அவருக்கு சொந்தமான நிறுவனத்தின் பெயர் எம்ஆர்எல் லாஜிஸ்டிக்ஸ். இந்த நிறுவனத்தில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 100 லாரிகள் கொள்முதல் செய்யப்பட்டு வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த நிறுவனம் குறுகிய காலத்தில் அபார வளர்ச்சிப் பெற்றதற்கு பி.தங்கமணி முறைகேடாக செய்துள்ள முதலீடுதான் காரணம் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கரூர் விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, மருத்துவர் விஜயபாஸ்கர் ஆகியோர் மீதும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியுள்ளனர் என்பது நினைவுக்கூரத்தக்கது.