Sat. Nov 23rd, 2024

தமிழ்நாடு அரசில் பணிபுரியும் ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் தங்கள் சொத்து விவரங்களை வரும் ஜனவரி 31 ஆம் தேதிக்குள் முழுமையாக அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ் உத்தரவிட்டிருந்தார்.

அவரின் நடவடிக்கைக்கு பலதரப்புபட்ட மக்களிடம் இருந்து பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் மனம் திறந்து பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸுக்கு பாராட்டு தெரிவித்து நடிகர் விஜயகாந்த் தனது முகநூலில் தெரிவித்துள்ள பதிவின் விவரம் இதோ….

தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகள், தாங்கள் வாங்கிய அசையா சொத்துகள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்களில் வாங்கிய சொத்துகள் விவரங்களை வருகிற ஜனவரி 31 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தலைமைச் செயலாளர் திரு.இறையன்பு IAS அறிவுறுத்தியுள்ளது வரவேற்கதக்கது.இதுபோன்ற செயல் வெளிப்படை தன்மையையும், ஊழல் இல்லாத நிர்வாகத்தையும், கொண்டு செல்ல வழிவகுக்கும்.ஐஏஎஸ் அதிகாரிகள் என்பவர்கள் நாட்டை வழிநடத்தும் உயர்ந்த பதவிகளில் பணியாற்றுகிறார்கள், அவர்களே வெளிப்படை தன்மையோடு தங்களை அடையாளபடுத்திக் கொண்டால், அவர்களுக்கு கீழ் செயல்படும் மற்ற அதிகாரிகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும்.

இந்த நடைமுறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில், அனைத்து அரசு உயரதிகாரிகளும், தங்களது சொத்து விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.இதுபோன்ற ஓர் அறிவிப்பை வெளியிட்ட தலைமை செயலாளர் திரு. இறையன்புவிற்கு தேமுதிக சார்பில் நன்றி.

இந்த நடைமுறை பெயரளவிற்கு இல்லாமல் இதில் விடா முயற்சியுடன், கண்டிப்புடன் செயல்பட்டால் வெளிப்படையான, ஊழலற்ற நிர்வாகம் அமைவதில் ஐயம் இல்லை.

இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

.