Fri. Nov 22nd, 2024

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கைகலப்பு ஏற்படும் அளவுக்கு முன்னாள் அமைச்சர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டதை பார்த்து மனம் நொந்து போனார்கள் அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள். அன்றைய தினமே டிசம்பர் 1 ஆம் தேதி செயற்குழுக் கூட்டமும் நடைபெறும் என்று அறிவித்ததால், அந்த கூட்டத்தில் என்ன களேபரம் நடக்குமோ என்று திக்.திக்..மனதோடு அதிமுக தொண்டர்கள் இருந்து வந்த நேரத்தில், நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் எந்தவிதமான சலசலப்பும் தலைகாட்டாததால், நிம்மதி பெருமூச்சுவிட்டனர். அதற்கும் மேலாக, தங்களை வழிநடத்தும் தலைவர்கள் வரும் நாட்களில் திருந்துவதற்கும் வாய்ப்பு இருக்கிறது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் ஒரு நிகழ்வும் நேற்றைய தினம் நடைபெற்றது. அதுதான், அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டிருப்பது.

 அதிமுகவை தோற்றுவித்த மறைந்த முதல்வர் எம்ஜிஆர் மீது வெறித்தனமாக பக்தி கொண்ட, மூத்த தலைவரான தமிழ்மகன் உசேன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்தாலும், அந்த பதவிக்கு அவரை தவிர்த்து வேறு ஒருவர் தகுதியானவர் இல்லை என்கிறார்கள் எம்ஜிஆர் காலத்து அதிமுக நிர்வாகிகள். அதேநேரத்தில், தள்ளாடும் வயதில் தமிழ்மகன் உசேனுக்கு அதிமுகவில் கிடைத்திருக்கும் அங்கீகாரம், இந்த நிலைக்கு உயர அவர் கொடுத்த தியாகத்திற்கு ஈடாகாது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தமிழ் மகன் உசேன் கடந்து வந்த அரசியல் பாதையை கலங்கிய கண்களுடனேயே விவரித்தனர்.

83 வயதில் தற்காலிக அவைத்தலைவராக நியமிக்கப்பட்ட தமிழ்மகன் உசேன், கடந்த 68 ஆண்டுகளாக முழுநேர அரசியல்வாதியாக பயணம் செய்து வந்ததில் பல லட்சம் ரூபாய் கடனாளியாகியிருக்கிறார் என்பதுதான் சோகமான செய்தியாகும். மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் தலைமையின் கீழ் அதிமுக செயல்பட்டு வந்த போது, கட்சி விழாவாக இருந்தாலும், பொதுக்கூட்டங்களாக   இருந்தாலும் ஆடம்பரமாகவே செலவு செய்து வந்துள்ளார் தமிழ் மகன் உசேன். வலுவான பொருளாதார பின்னணி இல்லாதவராக இருந்த  போதும், கட்சி விழாக்களுக்கு அடிக்கும் பதாகைகள் பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதில் குறியாக இருந்திருக்கிறார். அதற்காகவே பல லட்சம் ரூபாய் செலவழித்திருக்கிறார் தமிழ் மகன் உசேன் என்பதும், எம்.ஜி.ஆர் காலத்திலும், அதற்குப் பிறகு செல்வி ஜெயலலிதா காலத்திலும் அதிமுக ஆட்சியில் இருந்த போது கூட கவுன்சிலர் பதவியைகூட வகித்தவர் கிடையாது தமிழ் மகன் உசேன். ஆனால், கட்சி சார்பில் அறிவிக்கப்படும் விழாக்களாக இருந்தாலும், பொதுக்கூட்டங்களாக இருந்தாலும், போராட்டமாக இருந்தாலும், முதல்நபராக நின்று உழைத்த அவர்,  தன்னுடைய மொத்த அரசியல் வாழ்க்கையையும் கடன் வாங்கியே செலவு செய்து வந்துள்ளார்.

இப்படி கட்சிக்காக பல லட்சம் ரூபாயை அவர் வீணடித்ததை கண்டு அவரது வாரிசுகள் மனம் வெறுத்துப் போய்விட்டனர். குடும்பத்தின் முன்னேற்றத்தை கவனிக்காமல், கட்சி, கட்சி என ஓடிக் கொண்டிருந்ததால், தமிழ்மகன் உசேனின் வாரிசுகள் சந்தித்த இன்னல்கள் ஏராளம்…ஏராளம்..

செல்வி ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில் அதிர்ஷ்டவசமாக ஒருமுறை அவரை பாளையங்கோட்டை சட்டமன்ற வேட்பாளராகவும் அறிவித்தார். ஆனால், அவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாகவே, மதிமுக பிரமுகரை சந்தித்தாக எழுந்த புகாரையடுத்து, அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை வேட்பாளராக அறிவித்த சோகமும் அப்போது ஏற்பட்டது உண்டு. அதைவிட கொடுமை அந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 2016 ஆம் ஆண்டில்  அவர் வகித்து வந்த வக்ஃபு வாரிய தலைவர் பதவியையும் ராஜினாமா செய்திருந்ததுதான். 

இப்படி தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ ஆகும் அதிர்ஷ்டம் அவருக்கு கை கூடாதபோது, ராஜ்ய சபா எம்.பி.யாகிவிட வேண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு (2019 ம் ஆண்டு    ) தீவிரமாக முயற்சித்தார். தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அரசியலில் தனக்கு ஜுனியர் என்ற போதும்கூட ராஜ்ய சபா எம்.பி யாக ஒருமுறையாவது வாய்ப்பு கொடுங்கள் என்று இரண்டு தலைவர்களின் வீடுகளுக்கும் மாறி மாறி சென்று படியேறி, கெஞ்சாத குறையாக கேட்டார்.

 அன்றைக்கு ஓ.பி.எஸ். நினைத்திருந்தால், முகமது ஜானுக்கு பதிலாக தமிழ் மகன் உசேனை எம்.பி.யாக்கியிருக்கலாம். ஆனால், அவர் துளியும் அக்கறை காட்டவில்லை. ஆனால், அதேநேரத்தில் வேலூர்  நாடாளுமன்றத் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்ற காரணத்தால், தமிழ் மகன் உசேனைவிட, முகமது ஜானை ராஜ்ய சபா எம்.பி.ஆக்கினால்தான், வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றங்களில் பெரும்பான்மையாக உள்ள இஸ்லாமியர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற கணக்கில், தமிழ் மகன் உசேனை ராஜ்ய சபா எம்.பி.யாக்காமல் தவிர்த்தார் எடப்பாடி பழனிசாமி.

இப்படி அதிர்ஷ்டத்தால் அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்த இரட்டையர்கள், அவரவர் சுயநலத்தின் அடிப்படையில், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவிகளை வழங்கியதால், வாழ்நாள் முழுவதும் அதிமுகவுக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தமிழ் மகன் உசேனுக்கு எம்.எல்.ஏ., எம்.பி. என்ற எந்தவொரு பதவியும் கிடைக்கவில்லை. இந்த இரண்டு பதவிகளில் ஏதாவது ஒன்று அவருக்கு கிடைத்திருந்தால், அந்த பதவிக்குரிய ஓய்வூதியமாவது தமிழ் மகன் உசேனுக்கு ஒரு நிரந்தர வருவாயாக இருந்திருக்கும்.

அரசியலே வாழ்க்கை என்று வரித்து கொண்டு, அதிமுகவுக்காக காலம் முழுவதும் உழைத்ததால் ஏற்பட்ட கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு கூடி, இன்றைக்கு அவரது தலைக்க மேல் வந்துவிட்டது.

இப்படி பொருளாதார நெருக்கடியால் விழி பிதுங்கி  கொண்டிருந்தாலும் கூட, எந்தவொரு தேர்தல் என்றாலும் கட்சித் தலைமை பிரசாரத்திற்கு அனுப்பி வைக்கிறதோ இல்லையோ, அதற்காக காத்திருக்காமல் தனது சொந்த பணத்தை செலவழித்து மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அதிமுக வேட்பாளர்களின் வெற்றிக்காக கடுமையாக பிரசாரம் செய்து வந்தவர்தான் தமிழ் மகன் உசேன்.

இன்றைக்கு அதிமுகவில் சாதாரண வட்ட செயலாளர்கள் கூட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களில் பவனி வந்து கொண்டிருக்கும் வேளையில், 83 வயதான காலத்திலும் கூட ஆட்டோவிலும் பேருந்துகளிலும், ரயில்களிலும்தான் பயணம் செய்து கொண்டிருக்கிறார் தமிழ்மகன் உசேன்.

அவருக்கு உள்ள கட்சி விசுவாசம், உண்மையான அன்புடன் பழகும் குணம், தலைமைக்கு கட்டுப்படும் மனப்பாங்கு போன்ற குணங்களில் இன்றைக்கு அதிமுகவில் உள்ள மூத்த தலைவர்களைவிட பலமடங்கு உயர்ந்தவர், மரியாதைக்குரியவர் தமிழ்மகன் உசேன்.

அந்த நற்குணங்களுக்காகவே, கட்சி தொடர்பான பல்வேறு அம்சங்களில் முரண்டு பிடித்துக் கொண்டிருக்கும் இரட்டையர்களான ஓ.பி.எஸ்.ஸும்,இ.பி.எஸ்.ஸும், தமிழ்மகன் உசேனை தேர்வு செய்வதில், ஒருமித்த உணர்வோடு இருந்திருக்கிறார்கள். மேற்கூறிய காரணங்களை கடந்து, இபிஎஸ்.ஸுக்கு எதிராக கடுமையாக பேசி, அதிமுகவில் கடும் குழப்பத்தை ஏற்படுத்திய அன்வர் ராஜாவை, கட்சியில் இருந்து நீக்கியுள்ள இந்தநேரத்தில், அதனை சமன் செய்ய, சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த தமிழ் மகன் உசேனை, தற்காலிக அவைத்தலைவராக நியமனம் செய்து பரிகாரம் தேடிக் கொண்டிருக்கிறார்கள் ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும்.

அதிமுகவில் உண்மையான விசுவாசிகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று தமிழ்மகன் உசேன் பெருந்தன்மையாக சொல்லியிருந்தாலும் கூட, அவருக்கு இருக்கும் பெருந்தன்மையில் கொஞ்சமாவது ஓ.பி.எஸ்.ஸுக்கும், இ.பி.எஸ்.ஸுக்கும் இருந்திருக்குமானால், அவைத்தலைவர் பதவியோடு, அதிமுக சார்பில் அவருக்கு ஒரு சில லட்ச ரூபாய் செலவழித்து ஒரு காரையும் வாங்கி கொடுத்திருக்கலாம்.

அதிமுகவின் அவைத்தலைவர்  ஆட்டோவில் பயணம் செய்கிறார் என்ற அவப்பெயரை நீக்குவதற்காவது கட்சி சார்பில்  தமிழ்மகன் உசேனுக்கு கார் ஒன்றை வெகுமதியாக வழங்கலாம்..

ஒரு சில லட்சங்களை செலவழிப்பதன் மூலம் கோடிக்கணக்கில் வைப்பு நிதியாக வைத்திருக்கும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாது.

One thought on “அதிமுக அவைத்தலைவர், ஒரு கோடி ரூபாய் கடனாளி?”

Comments are closed.