Fri. Nov 22nd, 2024

இந்திய பொருளாதாரம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதல பாதாளத்தில் உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துளளார்.

சிவகங்கையில் காங்கிரஸ் சார்பில் இன்று பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு 5 முறைதான் முழுமையான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். அந்த மரபுக்கு மாறாக, தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. அரசு இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யாமல், முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்போவதாக செய்தி வருகிறது. முதல்வர் மரபை மீறக் கூடாது. அப்படி மீறினால் சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவிப்போம்.

நான்கு ஆண்டுகள் 9 மாதங்கள் ஓய்வில் இருந்துவிட்டு, கடைசி 3 மாதங்களில் பல அறிவிப்புகளை வெளியிடுவது தேர்தல் வேடிக்கை மத்தாப்புதான். மத்திய பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட ஒதுக்காமல் தேர்தலுக்காக தமிழகம், கேரளாவிற்கு பல ஆயிரம் கோடியில் திட்டங்களை அறிவித்துள்ளனர். இந்தியப் பொருளாதாரம் இரண்டு ஆண்டுகளாக சரிந்து அதலபாதாளத்தில் உள்ளது. இவர்களால் இந்தியப் பொருளாதாரத்தை தலைநிமிரச் செய்ய முடியாது. அதற்கான உத்தியும் கிடையாது, புத்தியும் கிடையாது.

பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்திற்கும் ஒத்துப்போகாதநிலையில், இடையில் டிடிவி தினகரன் நுழைகிறார். இதனால் அதிமுகவில் குழப்பம் உள்ளது. தேர்தலில் ஜெயலலிதாவைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு இரண்டு தரப்பினர் வர உள்ளனர். அவ்வாறு வந்தால் நமது கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதி”.

இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.