தமிழ்நாட்டில் ஆளும்கட்சியான திமுகவை பற்றியும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவைப் பற்றியுமே அச்சு, காட்சி ஊடகங்கள் உள்பட அனைத்து ஊடகங்களிலும் நாள்தோறும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. திராவிட கட்சிகளுக்கு இணையாகவே தமிழக காங்கிரஸ் கட்சியிலும் ஆள், அம்பு, சேனை, படை, பரிவாரம், அதிகாரம் ஆகியவற்றை பயன்படுத்தி தலைமை பொறுப்பை கைப்பற்ற நடக்கும் மோதலை பிரதான ஊடகங்களும் கண்டு கொள்வதில்லை, வாட்ஸ் அப், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களும் கூட கண்டு கொள்வதில்லை என்று கவலை தோய்ந்த முகத்தோடு புலம்பினார், பிரபல காங்கிரஸ் தலைவரின் இளம் வாரிசு ஒருவர்.
நல்லரசுக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருந்த அவரிடம் பேசினோம். அவரின் வேதனைக்குரலை அப்படியே இங்கு பதிவு செய்கிறோம்.
தமிழகத்தில் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சி உயிர்ப்போடு இருக்கிறது என்றால், அதற்கு முக்கியமான, முதன்மையான காரணம், திமுக கூட்டணியில் இடம் பெற்று எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என பலர் நடமாடிக் கொண்டிருப்பதால்தான். 60 ஆண்டுகளுக்கு மேலான திராவிட ஆட்சி காலத்தில், காங்கிரஸ் கட்சி தனது செல்வாக்கை தொடர்ந்து இழந்து கொண்டே வருகிறது.
பொதுமக்களிடம் செல்வாக்குள்ள, ஆளுமையுடைய பிரமுகரை அடையாளம் கண்டு அவரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமித்து, நீண்ட காலத்திற்கு செயல்பட அனுமதித்து, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக, பருவ நிலை மாற்றத்திற்கு ஏற்ப தொழில் செய்வதைப் போல, தேர்தலை மனதில் வைத்து அரசியல் ரீதியாக முடிவெடுப்பதால், இன்றைக்கு திமுகவின் துணை பிரிவுகளில் ஒரு அணியாக மாறியிருக்கிறது தமிழக காங்கிரஸ்.
இந்த நிலையில்தான், 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து, தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட கே.எஸ்.அழகிரி, இரண்டு ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் தொடர்கிறார். இனியும் அவரது தலைமை தொடரக் கூடாது என்று தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள் உள்பட இளம் தலைமுறை தலைவர்களும் காங்கிரஸ் மேலிடத்திற்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களில் சிலர் மற்றும் எம்.பி.க்களாக உள்ள இளம் தலைவர்கள், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை பிடிக்க, மறைமுகமாக கூட இல்லாமல், நேரடியாகவே களத்தில் இறங்கி, கே.எஸ். அழகிரியை நீக்கிவிட்டு தங்களை தமிழக காங்கிரஸின் தலைவராக நியமிக்க வேண்டும் என்று அவரவர் சக்திக்கு ஏற்பட படை திரட்டிக் கொண்டு டெல்லி தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
அந்த பட்டியலில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் புதல்வர் கார்த்தி, முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் புதல்வர் விஷ்ணு பிரசாத், டாக்டர் செல்லகுமார், ஜோதிமணி உள்பட பலர் முதன்மையாக உள்ளனர். இவர்களில் கார்த்தி சிதம்பரம், தனது தந்தையை போல அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும், டெல்லி அரசியலிலும் அதிகமாக ஈடுபாடு காட்ட விரும்பாமல், தமிழக அரசியலுக்குதான் அதிகமாக முக்கியத்தும் கொடுத்து வருகிறார்.
அதற்கு முக்கிய காரணம், 30 ஆண்டு காலத்திற்கு மேலாக காங்கிரஸ் தலைமையோடு ப.சி. நெருக்கமாக இருந்தபோதும், தமிழகத்தில் அவருக்கிருந்த தனித்த செல்வாக்கு அண்மைகாலத்தில் கிடுகிடுவென குறைந்துவிட்டது.
அதேபோல, அவரின் ஆதரவாளர்களின் எண்ணிக்கையும் சொற்பமாகதான் இருந்து வருகிறது. டெல்லியிலும் செல்வாக்கு சரிவு, தமிழகத்திலும் செல்வாக்கு சரிவு என அரசியலில் இறங்கு முகத்தில் உள்ள தனது தந்தையின் நிலையை எண்ணி மனம் வெதும்பிக் கொண்டிருக்கிறார் ப.சிதம்பரத்தின் புதல்வர் கார்த்தி எம்.பி.
இப்படிபட்ட சூழலில், ப.சிதம்பரத்தை நம்பி அரசியல் செய்து கொண்டிருக்கும் எஞ்சிய ஆதரவாளர்களையும் இழந்து விடாமல், காப்பாற்றிக் கொள்ள இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார் கார்த்தி சிதம்பரம். அவர் நேரடியாக களத்தில் குதித்து இருப்பதால், இளைஞர் காங்கிரஸ் தேர்தலை உன்னிப்பாக கவனிக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இன்றைக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருப்பவர் முன்னாள் எம்.பி. ஜே.எம். ஹாரூணின் புதல்வர் அசன். இவரின் பதவிக் காலம் விரைவில் நிறைவு பெறவுள்ளது. இந்த நிலையில், அசன் பதவியில் தனது ஆதரவாளரான ஜெரால்டை அமர வைக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் கார்த்தி சிதம்பரம். இதற்காக தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தி, மாநிலம் முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கும் இளைஞர் காங்கிரஸுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணியில் முழுமையாக ஈடுபடும் வகையில் வழி நடத்தி வருகிறார்.
கார்த்தி சிதம்பரத்தின் குறிக்கோள் வெற்றியடைவதற்கு அவரது தந்தையின் எதிர் அணியில் உள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு உள்ளிட்ட மூத்த தலைவர்களும் ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதுதான், விசித்திரமான ஒன்று.
திருச்சி முன்னாள் எம்.பி. அடைக்கலராஜுக்கு உறவினர் என்ற அந்தஸ்தை மட்டுமே வைத்துக் கொண்டு அரசியல் செய்யாமல், ஜோஸ்வா ஜெரால்டு, பத்தாண்டுகளுக்கு முன்பிருந்தே தீவிரமாக காங்கிரஸில் செயல்பட்டு வந்துள்ளார்.
கல்லூரி மாணவராக இருந்த காலத்தில், காங்கிரஸின் மாணவர் பிரிவில் சேர்ந்தவர், தொடர்ந்து பத்தாண்டுகளுக்கு மேலாக பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்து கொண்டே முன்னேறி வந்து கொண்டிருக்கிறார். இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் ஜோஸ்வாவை வெற்றி பெற வைப்பதன் மூலம், தமிழக காங்கிரஸிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த வேண்டும் என்பதுதான் கார்த்தி சிதம்பரத்தின் முதன்மையான சிந்தனையாக இருந்து வருகிறது.
கே.எஸ்.அழகிரிக்கு அடுத்து தமிழக காங்கிரஸ் தலைவராகிவிட வேண்டும், அதிர்ஷ்டம் கை கொடுக்கவில்லை என்றால், அதற்கடுத்த முறையாவது தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை கைப்பற்றிவிட வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கும் கார்த்தி சிதம்பரம், அதற்கு முன்பாக இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ் உள்ளிட்ட துணை அமைப்புகளில் தனது ஆதரவாளர்களை தலைமை பதவியில் அமர வைத்து விட வேண்டும் என்று வெறித்தனமாக வேலை பார்த்து வருகிறார் கார்த்தி சிதம்பரம். ஆனால், அவரின் அனைத்து காய் நகர்த்தல்களையும் துவம்சம் செய்யும் வகையில் மேலும் மூன்று தரப்பும் தீவிரமாக களமாடிக் கொண்டிருக்கிறது என்பதுதான் சுவாரஸ்யமான ஒன்று.
அசன் மற்றும் ஜெரால்டு ஆகிய இருவரும் இளைஞர் காங்கிரஸ் தலைவராகி விடக் கூடாது என்பதற்காக, தற்போது மாநில பொதுச் செயலாளர்களாக உள்ள நவீன்குமார், நரேந்திர தேவ், விச்சு (எ) லெனின் பிரசாத் ஆகிய மூவரும் களத்தில் தீவிரமாக செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதில், நவீன்குமாருக்கு ஆதரவாக மாணிக் தாகூர் எம்.பி உள்ளிட்ட ஒன்றிரண்டு முன்னாள் தலைவர்கள் ஆதரவாக நிற்கிறார்கள். லெனின் பிரசாத்துக்கு காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி, சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகையும், ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கின்றனர். நரேந்திர தேவுக்கு டாக்டர் செல்லகுமார் எம்.பி. ஆதரவு தெரிவிக்கிறார்.
ஆக மொத்தத்தில் இளைஞர் காங்கிரஸ் பிரிவுக்கு தலைவரை தேர்வு செய்வதில் கூட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் நான்கு அணிகளாக பிரிந்து நிற்பதை கண்டு மனம் வெறுத்துப் போன தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, யார் ஜெயித்து வந்தாலும் தனக்கு ஆட்சேபனை இல்லை. தன்னுடைய தலைவர் பதவிக்கு எந்த சிக்கலும் வந்துவிடக் கூடாது. 2024ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் வரை தனது தலைமையே நீடித்துவிட வேண்டும் என்ற வேண்டுதலிலேயே முழுநேரத்தையும் செலவிட்டுக் கொண்டிருக்கிறார் என்று ஒரே மூச்சாக இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் நடைபெறும் கோஷ்டி மோதல்களை விரிவாக எடுத்துரைத்தார் அந்த இளம் வாரிசு.
இளைஞர் காங்கிரஸில் தலைவர் தேர்தலையொட்டி நடைபெற்று வரும் இந்த களேபரத்தை பற்றி இதர அரசியல் கட்சியில் உள்ளவர்கள் மட்டுமல்ல, அரசியல் கள ஆய்வாளர்களும் சீரியஸாக பார்க்கவில்லை என்பதுதான் வேதனையாக இருக்கிறது. கார்த்தி சிதம்பரத்தின் அரசியல் சாணக்கியதனம் காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்க்குமா? என்று அரசியல் கள ஆய்வாளர் ஒருவரிடம் கருத்து கேட்டோம். அவர் ரொம்ப கோபத்துடன் நல்லரசுக்கு வேற செய்தியே கிடைக்கலையா? காங்கிரஸ் இல்லாத தேசத்தை கட்டமைக்க, பிரதமர் மோடியும் அகில இந்திய பாஜக தலைவர்களும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் கூட, அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மக்களை கவர்ந்த தலைவர் ஒருவர் வாய்க்கவில்லை. இந்த லட்சணத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கும் நிலையில், இளைஞர் காங்கிரஸ் தலைவர் தேர்தல் பற்றி பேச வந்துவிட்டீர்கள் என்று கேட்டதைதான் தாங்கி கொள்ள முடியவில்லை..
மழைக்காலத்தில் நல்லரசுக்கு வந்த சோதனை இது….