Fri. Nov 22nd, 2024

சென்னை மாநகரில் வரலாறு காணாத வகையில் ஒரு நாளில் 20 செ.மீ. அளவுக்கு கனமழை கொட்டி தீர்த்ததால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தரை தளத்தில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். விடிய விடிய பெய்த மழை காலை 10 மணிக்கு பிறகு குறைந்துள்ளதால், அன்றாட தேவைகளுக்கான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்த வண்ணம் உள்ளனர்.

இரு சக்கர வாகனங்களில் செல்வோர், சாலைகளில் தேங்கி நிற்கும் வெள்ள நீரில் சாகசம் போல வாகனங்களை செலுத்தி கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் சாலை பள்ளங்களிலும் மழை நீர் நிறைந்திருப்பதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தவறி விழுந்து விபத்திற்குள்ளான நிகழ்களும் நடைபெற்றிருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
ஒட்டுமொத்தமாக சென்னை மாநகர தெருக்கள் அனைத்துமே பெருக்கெடுத்து ஓடும் ஆறுகளைப் போல காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் காணவும், வெள்ள நீர் வெளியேற்ற பணிகளை துரிதப்படுத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடி கள ஆய்வில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர் பாபு, தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ், ஆகியோரும் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


வடசென்னையில் கொளத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட பல்வறு பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வரும் முதல்வர், பொதுமக்களிடமும் வெள்ள பாதிப்பு குறித்து கேட்டறிந்து வருகிறார். சாலைகளில் தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். தாழ்வான பகுதிகளில் தங்கியுள்ள மக்களை, விரைந்து மீட்டு பள்ளிகள், சமுதாய கூடங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விரைந்து வழங்க வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல, வெள்ள பாதிப்பால் அவதியுற்று வரும் மக்களுக்கு தேவையான அனைத்து நிவாரண உதவிகளையும் விரைந்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுமக்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்க வேண்டும் என திமுகவினருக்கும் முதல்வர் அறிவித்துள்ளார். அரசு அதிகாரிகளுடன் இணைந்து திமுக எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுததுள்ளார்.

சென்னையை சுற்றியுள்ள புழல், பூண்டி உள்ளிட்ட அனைத்து ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. செம்பரபாக்கம் ஏரியும் நிறைந்து வழிவதால், அதில் இருந்தும் உபரி நீரை திறந்து விட, பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.