நரிக்குறவர்-இருளர் பயனாளிகள் 282 பேருக்கு ரூ.4.53 கோடி நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்….
விளிம்பு நிலையில் உள்ள நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த அசுவினி என்ற இளம்பெண் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, மாமல்லபுரம் அருகே உள்ள புகழ்பெற்ற ஸ்ரீதலசயன பெருமாள் கோயிலில் நடைபெற்ற அன்னதானத்தில் கலந்து கொள்ள சென்றார். அப்போது அவரை அன்னதானம் சாப்பிட அனுமதிக்காமல் அவர் உள்பட அவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை கோயில் நிர்வாகம் விரட்டியடித்துள்ளது.
அதுதொடர்பாக தனது ஆதங்கத்தை தனியார் யூ டியூப்பில் ஒன்றில் ஆவேசமாக பொங்கி தள்ளினார் அசுவினி. அவரின் ஆவேசப் பேட்டி சமூக ஊடகங்களில் தீயாக பரவியது. அதனைப் பார்த்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர், அடுத்த சில நாட்களில் அதே கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, அசுவினி உள்ளிட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அன்னதானத்திற்கு வரவழைத்து அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர். இந்த நிகழ்வு பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளும் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலும் உலகின் பல்வேறு நாடுகளிலும் பல லட்சம் மக்களால் பார்க்கப்பட்டது. அன்றைய சந்திப்பின் போது நரிக்குறவர் மக்களின் குறைகளை கேட்டறிந்த அமைச்சர் சேகர்பாபு, அவர்களின் நிலைமையை முதல்வர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
முதல்வரின் உத்தரவின்பேரில், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் உள்ள நரிக்குறவர்கள் அதிகமாக வசிக்கும் பூஞ்சேரி கிராமத்தில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் நிறைவேற்றும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்றது. இதனைதொடர்ந்து, தீபாவளி திருநாளான இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்கள் வசிக்கும் பூஞ்சேரி கிராமத்திற்குச் சென்றார்.
அங்கு நடைபெற்ற அரசு விழாவில 282 நபர்களுக்கு ரூ.4.53 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். வங்கிக்கடன், வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, சாதிச் சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, நலவாரிய உறுப்பினர் சான்றிதழ், பயிற்சி சான்றிதழ் உள்ளிட்டவற்றை முதல்வரிடம் இருந்து பயனாளிகள் பெற்றுக் கொண்டனர். ஆனந்த கண்ணீர் மல்க முதல்வருக்கு விளிம்பு நிலை மக்கள் நன்றி தெரிவித்தனர்.
ஒற்றை மனுஷியாக குரல் கொடுத்து, தான் சார்ந்த சமுதாயத்தின் மீது அரசு நிர்வாகத்தின் பார்வையை திரும்பிய அசுவினிக்கும் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். அப்போது, தனது கையால் செய்த பாசி மணி மாலையை முதல்வருக்கு அணிவித்து மகிழ்ந்தார் அசுவினி. தொடர்ந்து மேடையில், நலத்திட்ட உதவிகள் மற்றும் அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்றிட உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார் அசுவினி.
விழா நிறைவடைந்தவுடன் அனைத்து பயனாளிகளுடன் அமர்ந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், செல்ஃபி எடுக்க ஆர்வமுடன் முன்வந்த பெண்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுக்க அனுமதித்தார். தொடர்ந்து அசுவினி உள்ளிட்ட பல்வேறு குடும்பத்தினர் வசிக்கும் வீடுகளுக்கே நேரில் சென்று, அவர்களின் வாழ்க்கை தரத்தை ஆராய்ந்தார். தொடர்ந்து, அரசு சார்பில் அனைத்து வசதிகளும் செய்து தருவதுடன், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு அரசு எப்போதும் உறுதுணையாக நிற்கும் என உறுதியளித்தார்.
பூஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளார். அந்த கருத்துகள், நெருப்பை விட வெப்பம் அதிகமாக இருக்கிறது.
இவற்றையெல்லாம் செய்யும்போது, திராவிட இயக்கம் கடந்து வந்த நெருப்பாறு என் நினைவுகளில் நிழலாடுகிறது! ‘பெரியார் – அண்ணா – கலைஞர்’ ஆகியோரை நெஞ்சிலேந்தி அவர்களுக்கான உதவிகளை வழங்கினேன். நடமாடும் கோயில் திருப்பணி தொடரும்!
ஆயிரமாயிரம் ஆண்டுகள் சமூகத்தில் புரையோடிவிட்ட அழுக்குகளைக் களைந்து, சமூகநீதியை நிலைநாட்டி, மானுட ஒளியைக் காக்க நாம் பயணிக்க வேண்டிய தொலைவு இன்னும் உள்ளது.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.