Fri. Nov 22nd, 2024

17 மாநிலத்தில் பாஜக ஆட்சி……

மத்தியிலும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிதான் இருக்கு…

தமிழகத்தில் பாஜக மீது யாருக்காவது கை வைக்கிற துணிச்சல் இருக்கா…

பாஜக மீது கை வச்சு பார்க்கட்டும். வட்டியும் முதலுமாக திருப்பி கொடுப்போம்…..

அண்ணாத்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் வீர வசனத்திற்கே சவால் விடும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அண்மையில் பேசிய டயலாக்தான் இது….

இப்படி ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக இல்லாத மீசையை முறுக்கிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை, நேற்றிரவு சென்னையில் உள்ள அச்சு, காட்சி ஊடகங்களின் செய்தி ஆசிரியர்கள் பெரும்பான்மையானோர் ஒத்தையில் நின்று அவர் புலம்பும்படியாக விட்டுவிட்டனர் என்பதுதான் சென்னையில் ஹாட் டாக்….

இதன் பின்னணி இதுதான்….

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவியேற்று மூன்று மாதங்கள் கடந்து விட்டன.. கர்நாடக சிங்கம் என்று பாஜகவில் உள்ள ஒரு பிரிவினர் அவரை கொண்டாடிய நிலையில், . ஐபிஎஸ் அதிகாரியான அவர் மீது ஒருவிதமான ஈர்ப்பு பாஜகவில் உள்ள இளைஞர்கள் மத்தியில் இருந்தது. கர்நாடக காவல் துறை பணியில் இருந்து விலகிய அண்ணாமலை சிறிது காலத்திற்கு பிறகு பாஜகவில் இணைந்தார்.. அப்போதே தமிழக பாஜக துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது.. பாஜக மேலிடம் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையை வியப்புடன் பார்த்தனர் தமிழகத்தில் உள்ள பாஜக மூத்த தலைவர்கள் பலர்.

அப்போது தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகனும் அண்ணாமலைக்கு அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்தார். அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அண்ணாமலை தோல்வி அடைந்தார்.. அதேபோல் எல். முருகனும் வெற்றி வாய்ப்பை இழந்தார். .

அண்ணாமலையிடம் தமிழக பாஜகவை ஒப்படைப்பதற்காகவே எல். முருகனை மத்திய அமைச்சராக்கிய டெல்லி பாஜக மேலிடம், அண்ணாமலைக்கு மகுடம் சூட்டியது.. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த தமிழக பாஜகவில் உள்ள குறிப்பிட்ட ஒரு பிரிவைச் சேர்ந்த மூத்த தலைவர்கள், அண்ணாமலையோடு நெருங்கிப் பழகுவதையோ, அவரது தலைமையை ஏற்று செயல்படுவதற்கோ பெரிதும் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இப்படிபட்ட நேரத்தில்தான் யூ டியூப்பர் ஒருவருடனான அவரது பழக்கம், அதன் மூலம் ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள், ஆடியோக்கள் போன்றவை அண்ணாமலையின் ஒட்டுமொத்த இமேஜையும் டேமேஜ் செய்தது. அதில் இருந்து மீண்டு வருவதற்கே அவருக்கு பல நாட்கள் ஆனது. கடந்த பல நாட்களாக, யூ டியூப்பரிடம் கேவலப்பட்டு போன பழைய நிகழ்வுகளை எல்லாம் மறந்துவிட்டு, ஆளும்கட்சியான திமுகவுக்கு எதிராக பல்வேறு புகார்களை அண்ணாமலை கூறத் தொடங்கினார். எதிர்க்கட்சி அதிமுகவா இல்லை பாஜகவா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு நாள்தோறும் திமுக அரசுக்கு எதிராக ஏதாவது ஒரு குற்றச்சாட்டை கூறி, ஊடகப் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்து வருகிறார் அண்ணாமலை.

ஆளும்கட்சியான திமுக, தன்னை கண்டு பயப்படுவதாக தனது சிஷ்யர்களிடம் கூறி தமிழகத்தில் தவிர்க்க முடியாத தலைவர் நிலைக்கு வந்துவிட்டதாக, தனக்கு தானே சிம்மாசனமும் போட்டுக் கொண்டிருக்கிறார் அண்ணாமலை. நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும் என்பதை போல, தனது கெத்தை காட்டுவதற்காக அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் (தொலைக்காட்சி) செய்தி ஆசிரியர்களுடன் கலந்துரையாடுவதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

அவரின் மனதை குளிர வைப்பதற்காக, அக்கட்சியின் துணை தலைவர் கரு.நாகராஜன், அனைத்து ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களை தொடர்பு கொண்டு அழைத்திருக்கிறார். தனது அழைப்பை ஏற்று அனைத்து ஊடகங்களின் ஆசிரியர்களும் வந்திருப்பார்கள் என்று மிகுந்த ஆவலுடன் நட்சத்திர ஹோட்டலுக்கு வந்த அண்ணாமலைக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

பிரபல தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியர்கள் பலர், அண்ணாமலையின் அழைப்பை புறக்கணித்துவிட்டனர். அதேபோல, பிரபல ஆங்கிலம் மற்றும் தமிழ் நாளிதழ்களின் செய்தி ஆசிரியர்களும் நட்சத்திர ஹோட்டல் பக்கமே எட்டி பார்க்கவில்லை. கிட்டதட்ட ஒட்டுமொத்த ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களும் பாஜக தலைவரின் அழைப்பை புறக்கணித்திருந்தாலும், பாஜகவின் தயவில்லாமல் ஊடக தொழிலை தொடர்ந்து செய்ய முடியாத நிலையில் உள்ள சில தொலைக்காட்சிகள் மற்றும் அச்சு ஊடகங்களைச் சேர்ந்த செய்தி ஆசிரியர்கள், அண்ணாமலை அழைப்பை ஏற்று விருந்து நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

அதேபோல, செய்தி ஆசிரியர்கள் புறக்கணித்திருந்தாலும் கூட, அந்தந்த ஊடகங்களில் அரசியல் தொடர்பான செய்திகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் செய்தியாளர்கள், அண்ணாமலையின் விருந்து நிகழ்வில் தலையை காட்டியுள்ளனர்.

ஆவலுடன் எதிர்பார்த்த செய்தி ஆசிரியர்கள் தனது அழைப்பை புறக்கணித்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல், அனைத்து ஊடக நண்பர்களிடம் பாசம் பொங்க கலந்துரையாடியுள்ளார், அண்ணாமலை. அரசியலில் தனக்கு அனுபவம் குறைவு. தன்னுடைய அரசியல் செயல்பாடுகள் குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை எப்போது வேண்டுமானாலும் கூறலாம். அரசியல் வாழ்விலும், தனிப்பட்ட வாழ்விலும் குற்றம் குறையிருப்பின் அதை நேரடியாக தன்னுடைய கவனத்திற்கே கொண்டு வரலாம் என மிகுந்த பணிவோடு ஊடகவியலாளர்களுடன் அளவளாவியுள்ளார் அண்ணாமலை.

ஊடகவியலாளர்களின் அறிமுகம் தொடங்கி விருந்து நிகழ்வு முடியும் வரை உற்சாகமிகுந்த தலைவராக தன்னை காட்டிக் கொள்வதற்காக அண்ணாமலை பட்டபாடு இருக்கிறதே.. அடடா, என்னத்த சொல்ல…சூப்பர் நடிப்புதான். பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர்களின் புறக்கணிப்பை அண்ணாமலையால் கொஞ்சம்கூட ஜீரணித்து கொள்ள முடியவில்லை. விருந்து நிகழ்வு முடிந்த பின்பு, உற்சாகமின்றி அவர் வெளியேறிய காட்சி மிகவும் பரிதாபத்திற்குரியதாகதான் இருந்தது என்றார், அந்த விருந்து நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர் ஒருவர்.

பாஜக தலைவர் அண்ணாமலை.சாரே..இன்னும் வளரணும் சாமி….