காவிரி டெல்டா மாவட்டங்களில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பூஜ்யம் என்ற அளவில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ள 182 கிராமங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விளக்கம் கேட்டு வேளாண்துறை முதன்மை செயலாளர் சமயமூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர்
பி ஆர்.பாண்டியன் இன்று சென்னையில் வேளாண்மை துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தி ஐஏஎஸ்,ஸை நேரில் சந்தித்து காவிரி டெல்டாவில் காப்பீடு செய்த விவசாயிகள் இழப்பீடு வழங்குவதில் 182 கிராமங்களுக்கு ஜீரோ என கணக்கிட்டு இழப்பீடு வழங்க மறுத்து இருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், முதலமைச்சரின் கவனத்திற்கு இந்த விவகாரத்தை கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சமயமூர்த்தியிடம் கோரிக்கை மனுவும் வழங்கப்பட்டது.
இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாகவும் பாதிக்கப்பட்ட கிராமங்களில் பாதிப்பு குறித்து முழு விளக்கம் கேட்டு அதற்கான முழு ஆதாரங்களைப் பெற்று விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். உடனடியாக வேளாண் துறை இயக்குனர் மற்றும் காப்பீட்டு நிறுவன அலுவலர்களுக்கும் முழு ஆதாரங்களோடு விடுதல் கிராமங்களில் ஆய்வறிக்கை குறித்த அறிக்கையை அளிக்க வேண்டும் என முதன்மை செயலாளர் சமயமூர்த்தி உத்தரவிட்டார்.
பின்னர் இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு குறித்து அவசர நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் உறுதியளித்தார்.
முதன்மை செயலாளருடனான சந்திப்பின் போது பி.ஆர்.பாண்டியனுடன், சென்னை மண்டல தலைவர் விகேவி. துரைசாமி செயலாளர் சைதை சிவா,மயிலாடுதுறை மாவட்ட தலைவர் சீர்காழி வைத்தியநாதன், உயர்மட்டக்குழு உறுப்பினர் சுதா தர்மலிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.