தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இந்தியா – இலங்கைக்கு இடையே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதி முழுவதும் தனக்கு மட்டுமே சொந்தமானது போல சிங்கள அரசு கருதிக்கொண்டு தமிழக மீனவர்களைத் தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.
1980களின் தொடக்கத்திலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக்கொல்வதும், படுகாயம்படுத்துவதும், சிறைப்பிடிப்பதும் அவர்களின் படகுகள், வலைகள் ஆகியவற்றைச் சேதப்படுத்துவதும் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழக அரசும், தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் சிங்கள அரசின் இந்த அட்டூழியத்தைக் கண்டித்துக் குரல் எழுப்பியவுடன், அதை திசைத் திருப்பும் வகையில் தமிழக மீனவர்களுக்கு எதிராக இலங்கை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதாக ஒரு நாடகத்தை இராசபக்சே அரசு அரங்கேற்றியிருக்கிறது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் ஊடுருவி அத்துமீறி செயல்படும் அந்நிய நாட்டுப் படைகளுக்கு இந்தியப் படைகள் உடனுக்குடன் பதிலடிக் கொடுப்பதை போல, மன்னார் வளைகுடாப் பகுதியில் அத்துமீறும் சிங்கள கடற்படைக்குப் பதிலடிக் கொடுக்க இந்தியக் கடற்படை முன்வரவேண்டும். தொடர்ந்து பாதிக்கப்படும் தமிழக மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை சிங்கள அரசிடம் பெற்றுத்தரவேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு பழ நெடுமாறன் தமது அறிக்கையில் கூறியுள்ளார்.