நாமக்கல் கவிஞர் என்று புகழ் மாலை சூட்டப்படும் இராமலிங்கம் பிள்ளை, 1988 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி மோகனூரில் பிறந்தார். நாமக்கல்லில் ஆரம்பக் கல்வியும், கோயம்புத்தூரில் உயர்நிலைக் கல்வியும் பயின்ற அவர், திருச்சியில் கல்லூரிப் படிப்பை மேற்கொண்டார். இளம்வயதிலேயே ஓவியம் வரைதல், கவிதை புனைதல் உள்ளிட்ட கற்பனைத் திறனில் அசாத்திய திறமை பெற்றிருந்த இராமலிங்கம் பிள்ளை, 1930 ஆம் ஆண்டு நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரக போராட்டத்தினையொட்டி எழுதிய கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்ற உணர்ச்சி மிகுந்த கவிதை வரிகள், சுதந்திர போராட்டத்திற்கு மிகப்பெரிய எழுச்சியாக அமைந்தது.
1906 ஆம் ஆண்டில் இருந்து சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்காற்றிய அவர், 1914 ல் திருச்சி மாவட்ட காங்கிரஸ் செயலாளராகவும், அதனைத்தொடர்ந்து நாமக்கல் காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பு ஏற்று அந்நியருக்கு எதிராக களப் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்.
தொடர் போராட்டங்களின் காரணமாக 1932 ஆம் ஆண்டில் ஓராண்டு சிறைத் தண்டனையும் அனுபவித்தார்.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாக, அவரின் தியாகத்தை போற்றும் வகையில், சென்னையில் 1945 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராட்டு விழா கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர், திரு.வி.க., பி.ராமமூர்த்தி, கல்வி போன்றவர்கள் பங்கேற்று இராமலிங்கம் பிள்ளைக்கு பெருமை சேர்த்தனர். இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, அரசவைக் கவிஞர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு முதல் 1962 ஆம் ஆண்டு வரை தமிழக சட்ட மேலவை உறுப்பினராக பதவி வகித்தார். 197 ஆம் ஆண்டில் பத்ம பூஷன் பட்டமும் மத்திய அரசால் வழங்கப்பட்டது.
காஞ்சி அஞ்சலி எனும் தலைப்பில் நாமக்கல் கவிஞர் எழுதிய கவிதை தொழுதி, பெரும்பான்மையான மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
நீண்ட நெடும் புகழோடு வாழ்ந்து வந்த நாமக்கல் கவிஞர் 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி காலமானார்.
அவரின் 133 வது பிறந்தநாளான இன்று அவருக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் நாமக்கல்லில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவு நூலகத்தில் அவரது திருவுருச் சிலைக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் எம் மதிவேந்தன், திமுக எம்.பி. கேஆர்என் ராஜேஷ் குமார், மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) துர்கா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, அங்கு தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியையும் அமைச்சர் உள்ளிட்ட பிரமுகர்கள் நேரில் பார்வையிட்டனர்.