தமிழகத்தில் உள்ள திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பை வழங்குவதற்கு தேவையான திட்டங்களை வகுத்து, சிறப்பான முறையில் செயல்படுத்தும் பொருட்டு, கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி, திருநங்கைகள் நல வாரியம் ஒன்றை அமைத்து உத்தரவு பிறப்பித்தார்.
அந்த நல வாரியத்தின் தலைவராக, சமூக நலன் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சரும், துறையின் முதன்மைச் செயலாளர் துணைத் தலைவராகவும், சமூக நல இயக்குநர் உறுப்பினர்- செயலாளராகவும் இருப்பர். மேலும், அரசுத் துறைகளின் பிரதிநிதிகள் அலுவல் சார் உறுப்பினர்களாகவும், திருநங்கைகள் அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுகின்றனர்.
அதன்படி, அண்மையில் அலுவல் சாரா உறுப்பினர்களாக 13 திருநங்கைகளை நியமித்து தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்தது.
இந்நிலையில், அலுவல் சாரா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட ஏ.ரியா, டி.பியூட்டி, ஆர்.அனுஸ்ரீ, சத்யஸ்ரீ சர்மிளா, எம்.நிலா, எம்.ராதா, பிரியா பாபு, கே.அருணா, பி.மோகனாம்பாள் நாயக், டாக்டர் எஸ்.சுதா, கே.அருண் கார்த்திக், செல்வம் முனியாண்டி, வித்யா தினகரன் ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
இந்த சந்திப்பின் போது, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநில திட்டக் குழு உறுப்பினர் முனைவர் நர்த்தகி நடராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.