Sun. Apr 20th, 2025

ஊரடங்கு தளர்வு நீட்டிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்குப் பின்னர், கோயில்களில் அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் அனுமதிப்பது உள்ளிட்ட பல்வேறு தளர்வுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

பண்டிகைக் காலங்களில் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக கடைகளுக்கு செல்வதைக் கருத்தில் கொண்டு, இன்று முதல் ஏற்கனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 11.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள் ( Tuition Centres ) அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

பின்வரும் செயல்பாடுகளுக்கு 1-11-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது:

மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தலாம்.

தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் ( Private Exhibitions ) உரிய கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்படலாம்.

மழலையர் விளையாட்டு பள்ளிகள் ( Play Schools ), நர்சரி பள்ளிகள் ( LKG , UKG ), அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படலாம்.

காப்பாளர் , சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி.

திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் பங்குபெற அனுமதி.

இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி.

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும் என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.