திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராஜா.
அறிமுகமே தேவையில்லை.. செல்போன் இருக்கும் வரை ஆ.ராஜாவின் பெயரும் தமிழகம் முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நிலைத்து இருக்கும்.
தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அழுத்தம் திருத்தமாக வாதம் புரியும் வல்லமை பெற்ற இளம் தலைவர்களில் முதன்மையானவராக இன்றைய காலத்தில் இருப்பவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராஜாதான் என்று பாராட்டினால், அவரது சமவயதுடைய திமுக முன்னோடிகள் கூட கோபித்துக் கொள்ள மாட்டார்கள்.
இதைவிட ஆ.ராஜாவை பெருமைப்படுத்த வேண்டும் என்றால், திமுகவின் தலைவராகும் தகுதிகூட அவருக்கு இருப்பதாக ஒரு கூட்டத்தினர் செய்திகளை பரப்பி கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இங்கு நினைவு கூரலாம்.
இப்படி உங்களுக்கு என்று ஒரு ஆதரவுக் கூட்டம் மாநிலம் முழுவதும் உங்கள் அருமை, பெருமைகளை எல்லாம் பரப்பி, திமுகவில் பெரும் ஆதரவுக் கூட்டத்தை உருவாக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
மாவட்டந்தோறும் உங்களின் ஆதரவாளர்கள் தலையெடுக்க ஆரம்பிக்க, பழம்பெரும் திமுக நிர்வாகிகள், உங்களை பகைத்துக் கொள்ள கொள்ள வேண்டி வருமே என்று அமைதிகாத்து வருகிறார்கள்.
அண்மைகாலத்தில் கோவை மாவட்டத்தில் உங்களின் ஆதரவாளர் ஒருவர், முதுபெரும் திமுக நிர்வாகிகள் எல்லோரையும் எதிர்த்துக் கொண்டு அரசியல் செய்து வருவதால், கோவை மாவட்ட திமுகவே கலகலத்து போயிருக்கிறது.
கடந்த ஜூன் மாதம் உங்கள் துணைவியார் உயிரிழந்த போது உங்கள் எதிரிகள் கூட சோகமாகி உங்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்கள். உங்களின் இழப்பை திமுகவில் உள்ள எல்லோருமே தங்கள் குடும்பத்தில் ஏற்பட்ட துயர நிகழ்வாக கருதி துடிதுடித்தனர்.
இப்படி திமுகவிலும், அகில இந்திய அரசியலிலும் உங்களுக்கு என்று பிரத்யேகமான ஒரு இடத்தை அடைவதற்காக கடந்த 25 ஆண்டுகளில் நீங்கள் பட்ட சிரமங்கள் கொஞ்சம் நஞ்சமல்ல.
1996 ஆம் ஆண்டில் முதல்முறையாக எம்.பி. ஆக தேர்வானவுடனேயே, கலைஞர் மு.கருணாநிதியின் மனசாட்சியான மறைந்த முரசொலி மாறன் பரிந்துரையின் பேரில் உங்களுக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது.அன்று முதல் இன்று வரை உங்களுக்கு சுக்கிர திசைதான். இடையில் 15 மாதங்கள் வலி மிகுந்தவையாக இருந்தாலும், ஒட்டுமொத்த அரசியல் வாழ்க்கையில் வளர்ச்சி, அதிவேகம்தான்…
ஆனால், 2021 ஆம் ஆண்டு உங்களுக்கு துயரம் மிகுந்த ஆண்டாகவே மாறிவிடுமோ என்று உங்கள் நலம் விரும்பிகள் வருத்தத்தோடு பேசிக் கொண்டிருந்த நேரத்தில், உங்கள் புதல்வி மூலம் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டிருப்பதும், அது உருவாக்கிய உற்சாகமும் உங்கள் நட்புலகத்தை கடந்து பலதரப்பினரையும் மகிழ்ச்சியில் திக்கு முக்காடு செய்து கொண்டிருக்கிறது.
புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கு ஏற்ப, உங்கள் வழியிலேயே உங்கள் புதல்வியும் சட்டப்படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து இருக்கிறார். உங்கள் தந்தை உங்களுக்கு உருவாக்கி கொடுக்க முடியாத வாழ்க்கையை, நீங்கள் உங்கள் புதல்விக்கு உருவாக்கி தந்திருக்கிறீர்கள். எவ்வளவு உன்னதமான தருணமிது.
உங்களைப் போல, ஒட்டுமொத்த திமுகவின் குடும்பத் தலைவரான, திமுக தலைவரும், முதல்வரும் நெஞ்சம் நிறைந்த சந்தோஷத்தோடு மேற்படிப்புக்காக லண்டன் செல்லும் உங்கள் புதல்வியை வாழ்த்தி, வழியனுப்பி வைத்திருக்கிறார். உங்கள் டிவிட்டர் பக்கத்தில் நீங்கள் பகிர்ந்திருக்கும் புகைப்படங்களை பார்த்து பார்த்து நெஞ்சுருகும் உங்கள் நலம் விரும்பிகள், உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதே சந்தோஷத்தோடு அவர்களும் அதனை தங்களது டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு. அரதப்பழசானதுதான் என்றாலும் கூட, இப்போது ஏனோ நினைவுக்கு வருகிறது.
ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பதை இந்த இடத்தில் கொஞ்சம் பொருத்தி பார்க்க வேண்டியிருக்கிறது.
உங்கள் புதல்விக்கு கிடைத்திருக்கும் உயர்க்கல்வி போன்ற வாய்ப்பு கூட வேண்டாம். சராசரியான ஒரு பட்டப்படிப்பை சிரமம் இல்லாமல் நிறைவு செய்யும் அளவிற்கு உங்களின் பிறந்த மண்ணை உள்ளடக்கிய மாவட்டமாக இருந்தாலும் சரி, உங்களை இரண்டு முறை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்த மாவட்டமாக இருந்தாலும் சரி…பத்து, பதினைந்து விளிம்பு நிலை குழந்தைகளை நீங்கள் படிக்க வைத்து ஆளாக்கியிருந்தால், உங்கள் புதல்வியைப் போல அவர்களையும் புகைப்படம் எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்தால், உங்களின் சமுதாய தொண்டை பின்பற்றி, மற்ற அரசியல்வாதிகளும், தொழில் நிறுவன உரிமையாளர்களும் எண்ணற்ற ஏழைக் குழந்தைகளுக்கு உயர்க்கல்வி கற்கும் வாய்ப்பை உருவாக்கி தருவதற்கான உத்வேகம் ஏற்படும்…
அனைத்தும் அறிந்தவர் நீங்கள்…
உங்களுக்கு அறிவுரை கூற தமிழகத்தில் தகுதியுள்ளவர்கள் யார் இருக்கிறார்கள்..?
நல்லரசுவின் சிறிய வேண்டுகோள்….நிறைவேற்றி வைப்பீர்கள் என நம்புகிறோம்…..