Sun. Nov 24th, 2024

திமுக ஒன்றிய உறுப்பினர் 5 லட்சம் ருபாய்…

மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருக்கு 15 லட்சம் ரூபாய்..

உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்ற 9 மாவட்டங்களில் வெற்றிப் பெற்ற திமுக உறுப்பினர்களை ஏலம் எடுக்கும் சத்தம்தான் நேற்றில் இருந்து அதிகமாக கேட்டுக் கொண்டிருக்கிறது.

திமுகவிற்குள்ளாகவே எழுந்துள்ள இந்த குதிரைப் பேரத்தை மிகுந்த ஆதங்கத்தோடு பேசி வருகிறார்கள், விசுவாசமிக்க உடன்பிறப்புகள்…

இதன் பின்னணி இதுதான்…

9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரைக்காக மக்களை தேடிச் செல்லாத போதும் கூட, கடந்த 5 மாத கால திமுக ஆட்சியின் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக, அவரின் விரும்பத்திற்கு ஏற்ப 100 சதவீத வெற்றியை வாக்காளர்கள் தந்துள்ளார்கள்.

இன்று காலை 7.40 மணி நிலவரப்படி, 9 மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களின் மொத்த இடங்களான 140 ல் 136 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதேபோல, ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கான மொத்த எண்ணிக்கையான 1,381ல் 865 இடங்களை திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியின் பின்னணியில் திமுக அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோரின் உழைப்பும் இருந்திருக்கிறது என்றாலும் கூட, ஒட்டுமொத்தமான தீர்ப்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் ஆட்சிக்கான நற்சான்றிதழ்தான் என்று தமிழக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

5 மாதத்திற்கு முன்பு ஆளும்கட்சியாக இருந்த அதிமுகவை, 9 மாவட்ட வாக்காளர்கள் சுத்தமாக துடைத்து எறிந்து விட்டார்கள் என்பதுதான் தேர்தல் முடிவுகள் உணர்த்தும் பாடமாக இருக்கிறது.

கிராமங்கள்தான் நாட்டின் முதுகெலும்பு என்று கூறியுள்ளார் மகாத்மா காந்தி. அவரின் நோக்கத்தையும், திமுக மீது வாக்காளர்கள் வைத்துள்ள நம்பிக்கையையும் நிறைவேற்ற வேண்டிய மாபெரும் பொறுப்பு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது. முதல்வர் அரியாசனத்தில் அமர்ந்து ஆட்சி செய்யும் தலைமைச் செயலகத்தை மட்டுமே நேர்மையான ஆட்சியாளர்களின் கரங்களில் ஒப்படைத்திருப்பது மட்டுமே போதுமானதாக இருக்காது. கிராம அளவிலும் நேர்மையான நிர்வாகம் நடைபெற வேண்டும் என்றால், நாட்டின் முதுகெலும்பாக திகழும் உள்ளாட்சி அமைப்புகளின் தலைமைப் பொறுப்புகளிலும் நேர்மையின் மீது தீராத தாகம் கொண்டவர்களை அமர வைக்க வேண்டும்.


உள்ளாட்சித் தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பே, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கான போட்டி, பணத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பதை அறிந்து திமுக தலைமை மீது உண்மையான பக்தியும், விசுவாசம் கொண்டவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். 9 மாவட்டங்களிலும் வெற்றிப் பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு ஜனநாயக ரீதியில் தலைவர்களை தேர்ந்தெடுக்காமல், அமைச்சர்கள் தங்களின் விசுவாசிகளை தலைவர் பதவியில் அமர்த்த தீயாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களாலும், கட்சியினராலும் விரும்புகிற தலைவரை புறக்கணித்துவிட்டு, தங்களுக்கு அடிமைகளாக இருப்பவர்களை மட்டுமே தலைவர் பதவிக்கு அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களும் பரிந்துரைக்கிறார்கள் என்பதுதான் 9 மாவட்டங்களில் இருந்து வரும் குற்றச்சாட்டாக உள்ளது.


ஊராட்சி ஒன்றியத்திற்கு தலைவரை தேர்ந்தெடுக்க திமுக உறுப்பினர்களிடையே குதிரைப் பேரம் தொடங்கிவிட்டது என்று கூறும் வட மாவட்டத்தில் உள்ள திமுக முன்னணி நிர்வாகிகள், வெற்றிப் பெற்றுள்ள ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய உறுப்பினருக்கும் 5 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை வழங்க தயாராகிவிட்டார்கள். அதேபோல, மாவட்ட பஞ்சாயத்துக்கான தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக ஒரு பஞ்சாயத்து உறுப்பினருக்கு 10 லட்சம் ரூபாயில் இருந்து ஏலம் தொடங்கியிருக்கிறது. அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் கூட வழங்க தயாராக இருக்கிறார்களாம் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை குறி வைத்துள்ள திமுக பிரமுகர்கள்.


இப்படிபட்ட கடுமையான போட்டியில் கூட குதிரை பேரம் நடத்தும் அளவுக்கு பணவசதி படைத்தவர்களால் கூட, தனித்து நின்று தலைவர் பதவியை கைப்பற்றி விட முடியாது. மாவட்ட செயலாளர் அல்லது மாவட்ட அமைச்சர்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே ஊராட்சி ஒன்றியத் தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியை கைப்பற்ற முடியுமாம். 9 மாவட்டங்களிலும் இதே நிலைதான் என்றாலும், தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு மேல் சக்தி வாய்ந்தவராக, அந்தந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் (நெல்லை, தென்காசி நீங்கலாக) இருக்கிறார்களாம். இந்த 9 மாவட்டங்களிலேயே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில்தான் சத்தம் அதிகமாக கேட்கிறது.


திமுக பொதுச் செயலாளராகவும், நீர்வளத்துறை அமைச்சராகவும் உள்ள துரைமுருகன், தனக்கு விசுவாசமாக உள்ளவர்களை ஒன்றிய பெருந்தலைவர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்க, தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களை அழைத்து மிரட்டும் தொணியில் பேசும் அளவுக்கு துணிந்து விட்டார் என்கிறார்கள் வேலூர் மாவட்ட திமுக முன்னோடிகள்.

இப்படி தடியெடுத்தவர் எல்லாம் தண்டல்காரராக மாறுவதை தடுக்க, திமுக ஆட்சி நேர்மையான பாதையில்தான் பயணிக்கும் என்று அடிக்கடி கூறிவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 9 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ஆகிய இரண்டு அமைப்புக்கும் நேர்மையானவரை தலைவராக நியமிக்க முன்வர வேண்டும். திமுக மீதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதும் நம்பிக்கை வைத்து அணி திரளும் இளைஞர்கள் கூட்டத்தை, திமுக பக்கமே நிலைத்து நிற்கும் வகையில், முதல்வரின் நடவடிக்கை அமைய வேண்டும் என்று கூறும் திமுக முன்னோடிகள், உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பு எப்படி 9 மாவட்டங்களில் உள்ள ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்களை அழைத்து ஆலோசனைகளை கேட்டாரோ, அதைபோலவே, தேர்தலில் வெற்றிப் பெற்ற அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து அவர்களின் கருத்துகளை கேட்க வேண்டும்.

பணக்காரர், அமைச்சருக்கு வேண்டியவர், மாவட்ட செயலாளருக்கு வேண்டியவர், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றவர் என்பதையெல்லாம் தகுதியாக கொள்ளாமல், பொதுவாழ்வில் நேர்மையோடு பணியாற்றும் அளவிற்கு மனதில் உறுதிப்பூண்டவர்களை தலைவர் பதவியில் அமர்த்த முன்வர வேண்டும் என்று அழுத்தமாக கூறுகிறார்கள். திமுக ஆட்சி மீது நம்பிக்கை வைத்து பெரும்பான்மையான வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். திமுக மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை நிலை நிறுத்த, நேர்மையான மக்கள் பிரதிநிதிகளை தலைவர் பொறுப்பில் அமர்த்துவாரா, முதல்வர் மு.க.ஸ்டாலின்.. தன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை ஒரு போதும் பொய்க்காது என்பதை நிரூபிப்பாரா, திமுக தலைவர் ?