Sun. Nov 24th, 2024

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பென்னலூரைச் சேர்ந்த இந்திரா (வயது 54) என்பவர், நேற்று பென்னலூர் பேருந்து நிலையத்தில் காத்து நின்றார். அப்போது, அவரை நெருங்கி வந்த 2 வடமாநில இளைஞர்கள் திடீரென்று அவரது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். அப்போது இந்திரா அலறியபடியே கூச்சலிட்டார்.

அவரின் சத்தம் கேட்டு அங்கிருந்த மக்கள் விரைந்து சென்று வழிப்பறி கொள்ளையர்களை மடக்கி பிடிக்க முயன்றனர். ஆனால், வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவன் திடீரென மறைத்து வைத்து இருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக்காட்டி பொதுமக்களை மிரட்டினான்.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பின்வாங்கியதையடுத்து, கண்இமைக்கும் நேரத்தில் வழிப்பறி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி பென்னலூர் ஏரி அருகே காட்டுக்குள் மறைந்துவிட்டனர். தகவல் அறிந்த காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுதாகரன் தலைமையில் காவல்துறையினர் நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்ற விசாரணை நடத்தினர். தொடர்ந்து, காட்டுக்குள் பதுங்கிய கொள்ளையர்களை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட 10 தனிப்படை காவலர்கள், கொள்ளையர்களை பிடிக்க முனைப்பான தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே கொள்ளையர்கள் தப்பி ஓடும்போது துப்பாக்கியில் இருந்து கீழே விழுந்த தோட்டாக்களை போலீசார் கைப்பற்றினர். கொள்ளையர்கள் பதுங்கிய இடம் அடர்ந்த மரம், செடி கொண்ட காட்டுப்பகுதி என்பதால் டிரோன் கேமரா (பறக்கும் கேமரா) உதவியுடன் கொள்ளையர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.

இந்த தேடுதல் வேட்டையின் ஒருபகுதியாக துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொள்ளையர்களில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மற்றொரு கொள்ளையனை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். என்கவுன்டரில் பலியான கொள்ளையன் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்கஷா என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.