தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
தெற்கு இரயில்வே பணிகளுக்குத் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு இந்தி மொழிப் பேசுவோர் நியமிக்கப்பட்டிருப்பதை மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தெற்கு இரயில்வேயில் இரயில் உதவி ஓட்டுநர் பணிகளுக்கான தேர்வு நடைபெற்று அதில் பங்கேற்ற 54 தமிழர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால், இவர்கள் அனைவரையும் காத்திருப்புப் பட்டியலில் வைத்துவிட்டு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் இரயில்வே தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 54 இந்தி மொழிப் பேசுபவர்கள் தெற்கு இரயில்வே பணிகளுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் பெற்ற மதிப்பெண்களைவிட, தமிழர்கள் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் அவர்களை ஒதுக்கிவிட்டு இந்தி மொழிப் பேசுபவர்களை நியமித்தது ஓரவஞ்சனையாகும்.
தெற்கு இரயில்வே தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் வேலை வாய்ப்பை எத்தகைய காரணமுமின்றி பறித்ததோடு, தெற்கு இரயில்வே பகுதியில் பேசப்படும் எந்த மொழிகளையும் அறியாத இந்திக்காரர்களை அங்குப் பணியில் நியமிக்கும் இந்தி வல்லாதிக்கப் போக்குக்கு எடுத்துக்காட்டாகவும் இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது. இத்தகைய பாரபட்சமான போக்கு மாநிலங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்திவிடும் என்பதை இந்திய ஒன்றிய அரசு கொஞ்சமும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் இதைக் கண்டித்து இரயில்வே துறை அமைச்சருக்கும், தெற்கு இரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதியிருப்பதைப் பாராட்டுகிறேன். அத்துடன் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்களும் கட்சி வேறுபாடில்லாமல் ஒன்றிணைந்து கூட்டாக நாடாளுமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்புவதோடு, ஏற்கெனவே நியமிக்கப்பட்ட இந்திக்காரர்களை உடனடியாக விலக்கி அவர்களின் இடங்களில் தேர்வு செய்யப்பட்ட தமிழர்களை நியமிக்குமாறு வற்புறுத்தவேண்டுகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கித் தேர்வு எழுதி, அதில் தேர்வு செய்யப்பட்ட 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் பெங்களூர் அரசு வங்கிகளில் நியமனம் செய்யப்பட்ட போது, அவர்களை பதவியேற்க அனுமதிக்காமல் கன்னட அமைப்புகள் விரட்டியடித்தன. ஒன்றிய அரசும் அதற்குப் பணிந்து அந்த இடங்களில் கன்னடர்களையே நியமித்தது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவ்வாறு பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.