அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதனையடுத்து, மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடி நிர்வாகங்கள், மாநகராட்சி சட்ட நடைமுறைகளின் படி செயல்படும் வகையில், இரண்டு இடங்களையும் தலைமையிடமாக கொண்டு புதிதாக காவல்துறை ஆணையர் அலுவலகம் அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு துரிதமாக மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில் காவல்துறை உயரதிகாரிகள் பங்கேற்ற முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, உளவுத்துறை கூடுதல் இயக்குனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ள தாம்பரம் மற்றும் ஆவடியில் புதிய காவல்துறை ஆணையர் அலுவலகம் நிறுவது, அதன் எல்லைகள், நிர்வாக நடைமுறை உள்ளிட்டவை குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் முதல்வர் கருத்துகளை கேட்டறிந்தார்.
இரண்டு இடங்களையும் தலைமையிடமாக கொண்டு காவல்துறை ஆணையர் அலுவலகம் செயல்படும் போது, ஒவ்வொரு அலுவலக நிர்வாக எல்லைக்குள் தலா 3 துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு) பதவிகள் புதிதாக உருவாக்கப்படும். புதிதாக காவல்துறை ஆணையர் அலுவலகம் நிறுவப்பட்டவுடன், அதன் நிர்வாகத்தின் கீழ் வரும் துணை ஆணையர், உதவி ஆணையர், போக்குவரத்து பிரிவு துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான புதிய இடங்களும், பதவிகளும் உருவாக்கப்படும் என்று காவல்துறை உயரதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.