Fri. Nov 22nd, 2024

வரும் 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேசினார். அதன் விவரம்:.

சேலம் மாவட்டத்தில் 16 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி 10வது வார்டு, பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 9வது வார்டு, 10 சிற்றூராட்சி தலைவர் பதவி மற்றும் 23 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் 35 காலி இடங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடைபெறுகிறது. .
வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கடந்த சட்டமன்றத் தேர்தலில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்றோம்.
சேலம் மாவட்டம் அதிமுத கோட்டை என்பதை தேர்தலில் நிரூபித்தீர்கள்.
அதேபோல் தற்போது நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் உழைத்து வெற்றி பெற வேண்டும் என்றார். அதற்கு தேனீக்கள் போலவும், எறும்புகள் போலவும் உழைத்து வாக்குகள் சிதறாமல் சிந்தாமல் பெற வேண்டும் என்றார்.
திமுக ஆட்சியில் கடந்த 4 மாதங்களில் ஏதும் செய்யவில்லை. திமுகவின் அராஜகத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். அதிமுகவினர் மீது வழக்குப் போடுவது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்பு போலீஸ் மூலம் சோதனை செய்வது போன்றவை மட்டுமே செய்துள்ளனர்.
வேண்டுமென்றே வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இவற்றுக்கெல்லாம் விடிவு காலம் வரும்.
வருகிற 2024ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்ட மன்றத்திற்கும் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஆயிரம் பேர் அமரக்கூடிய வகையில் நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அந்தவகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கடந்த தேர்தலில் எப்படி வெற்றி பெற்றோமே அதுபோல இந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் உழைத்து வெற்றி பெறச் செய்ய அனைவரும் உழைக்க வேண்டும்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் எதுவும் நிறைவேற்றவில்லை. அது பொய்யான தேர்தல் அறிக்கை என்பதை மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டும்.
அதிமுக ஆட்சியிலேயே 12,110 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் அதனை திமுக நடைமுறைபடுத்தாமல் விவசாயிகளை வஞ்சிக்கிறது.
அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் 435 மாணவர்கள் மருத்துவம், பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தோம். இதனை காப்பியடித்து தற்போது திமுக தருகிறது.
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த கூட்டத்தில் கழக அமைப்பு செயலாளர் செம்மலை, மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன், மாநகர செயலாளர் வெங்கடாசலம், மாநகர அவைதலைவர் பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர் மணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தை முடித்தபின் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்
அப்போது அவர் கூறியது.
ஊரக உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் இன்னும் திட்டமிடப்படவில்லை. 9 மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் அரசியல் கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை. எந்த ஆட்சியாக இருந்தாலும் வங்கியில் முறைகேடு நடந்தால் நடவடிக்கை எடுப்பார்கள். தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. அனைத்திலும் முறைகேடு நடைபெற்றதாக தெரியவில்லை.
திமுக, தனது தேர்தல் அறிக்கையை என்றைக்கும் நிறைவேற்றியதாக வரலாறு இல்லை. முதல் கையெழுத்து நீட் ரத்து செய்வேன் என்று கூறிய ஸ்டாலின் அதை செய்யவில்லை. நாங்கள் போட்ட தீர்மானத்தையே அவர்களும் சட்டசபையில் நிறைவேற்றியுள்ளனர். நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையை நம்பி 43 லட்சம் பேர் காத்திருந்தனர். தேர்தல் நேரத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது கூட்டுறவு வங்கி நகைக்கடன் மட்டும் ரத்து என்றும், அதற்கும் கட்டுபாடுகள் கூறுகின்றனர்.
2024-ல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற அடிப்படையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வர வாய்ப்பிருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டடத்த்தில் ஆயிரம் பேர் வரை அமரும் வகையில் கட்டப்படுகிறது. எனவே எம்.பிக்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் 8 பேர் மட்டுமே மருத்துவகல்வி பயின்ற நிலையில், அதிமுக ஆட்சியில் 7.5 சத இட ஒதுக்கீடு அளித்ததால் 435 மாணவர்களுக்கு மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே முறையை திமுக அரசும் பின்பற்றி இருக்கிறது. திமுகவில் 13 பேர் மீது சொத்துகுவிப்பு வழக்கு நிலுவையில் இருக்கிறது. அதிமுகவை மட்டுமே ஊடகங்கள் பேசி வருகின்றன. ஆட்சியில் இருக்கும்போதும், இப்போதும் அதிமுகவை மட்டுமே குறிவைத்து செய்திகள் வெளியிடப்படுகின்றன. மக்கள் பிரச்சினையை எடுத்துச் சொன்னால் யாரும் வெளியிடுவதில்லை. நெல் கொள்முதல் செய்யாமல் விவசாயிகள் பாதிக்கப்படுவதை யாரும் செய்தி வெளியிடுவதில்லை. தொலைக்காட்சிகள் மனசாட்சியின்றி செயல்படுகின்றன. அரசுக்கு எதிராக செய்தி போட பயப்படுகின்றன.
ஒரு லட்சம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யாமல் தேங்கி கிடக்கின்றன. மழையில் நனைந்து வீணாகின்றன. ஆட்சிப் பொறுப்பேற்று 4 மாதங்களாகி விட்டது. மக்கள் பிரச்சினைகளை கவனிக்காமல், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கு நன்மை செய்யாமல் அதிமுக மீது புழுதி வாரி தூற்றுவதையும் அவதூறு செய்வதையே திமுக அரசு செய்து வருகிறது.
சேகர்ரெட்டி பணம் கொடுத்ததாக கூறுவது ஆதாரமற்ற குற்றச்சாட்டு.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.